tamilnadu

img

தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடக அரசின் எந்த திட்டத்திற்கும் ஒப்புதல் வழங்கக் கூடாது

 சென்னை,ஜூலை 10-  காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது உள்ளிட்ட எந்த திட்டத்திற்கும் தமிழக அரசின் இசைவின்றி கர்நாடக அரசுக்கு ஒப்புதல் வழங்கக் கூடாது என்று வலியுறுத்தி மத்திய அரசுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள ஆற்றுப் பள்ளத் தாக்கு மற்றும் நீர்மின் திட்டங்கள் தொடர்பான மதிப்பீட்டுக் குழுவின் கூட்டத்தில் மேகதாது திட்டம் தொடர்பான புதிய வரைவு விதிகளுக்கு ஒப்புதல் வழங்கும் நிகழ்ச்சி நிரலும் இடம்பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது. இது காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதி உத்தரவுக்கும் உச்சநீதிமன்ற உத்தரவுக்கும் எதிரானது. மேகதாது திட்டத்துக்கு தமிழக அரசு உறுதியான எதிர்ப்பை தெரிவித்து வருகிறது. எனவே கர்நாடகாவின் புதிய வரைவு விதிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்படுவதைத் தடுக்க மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சருடன் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழகத்தின் ஒப்புதல் இன்றி எந்த திட்டத்துக்கும் ஒப்புதல் வழங்கக் கூடாது. இவ்வாறு அதில் வலியுறுத்தியுள்ளார்.  மேகதாது அணை விவகாரம் தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதத்தில், ஜூலை 19ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் மேகதாது விவகாரம் பற்றி விவாதிக்க கூடாது. தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடகாவிற்கு மேகதாதுவில் அணை கட்ட எந்த அனுமதியும் வழங்க கூடாது என்று தெரிவித்துள்ளார்.