அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை வரும் ஆகஸ்ட் 2-ஆம் தேதிக்கு தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கடந்த 2001-2006 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை 2006-ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது. இந்த சொத்துக்குவிப்பு வழக்கை தூத்துக்குடி நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
இந்த சூழலில், ஏப்ரல் 18-ஆம் தேதி இந்த வழக்கில் தங்களையும் இணைக்கக் கோரி அமலாக்கத்துறை தூத்துக்குடி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் விசாரணை 80% நிறைவடைந்துள்ளதால் அமலாக்கத்துறையை சேர்த்துக்கொள்ள முடியாது என்று லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் மாதம் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.