‘சாம்சங்’ தொழிலாளர்கள் போராட்டம் நடத்தத் தடையில்லை! உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு சுங்குவார்சத்திரம், அக். 9- சி.ஸ்ரீராமுலு சாம்சங் தொழிலாளர்கள், தங்களின் உரிமைக்கான போராட்டத்தை உறுதியுடன் நடத்தி வரும் நிலையில், அந்தப் போராட்டத்தைச் சீர்குலைத்து ஒடுக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு இறங்கியுள்ளது. 31-ஆவது நாளாக போராட்டம் தொடரும் என்று சாம்சங் தொழிலாளர்கள் அறிவித்திருந்த நிலையில், காவல்துறை அவர்களைப் போராட்டக் களத்திற்கு வரவிடாமல் செய்யும் வகையில், வீடுகளுக்கே சென்று- குறிப்பாக தொழிலாளர்களின் குடும்பத்திலுள்ள பெண்களை அழைத்து அச்சுறுத்தியதுடன், இரவோடு இரவாக போராட்டப் பந்தலையும் பிரித்து எறிந்தது. இதன் காரணமாக, கொட்டும் கனமழையில், வெட்டவெளியில் தொழிலாளர்கள் போராட வேண்டிய நிலை ஏற்பட்டது. காவல்துறை விடுத்த மிரட்டலையும் மீறி, கொட்டும் மழையிலும் தொழிலாளர்கள் போராட்டம் நடத்திய நிலையில், அவர்களில் சிஐடியு தலைவர்கள் அ. சவுந்தரராசன், இ. முத்துக்குமார் மற்றும் 725 தொழிலாளர்களையும் கைது செய்தும், 2 தொழிலாளர்களை வேலூர் சிறையில் அடைத்தும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கான தமது விசுவாசத்தை காவல்துறை காட்டியுள்ளது.
சாம்சங் தொழிலாளர் களின் கோரிக்கைகள் தொடர் பாக, அவர்கள் பெரும் பான்மையாக அங்கம் வகிக் கும் சிஐடியு தொழிற் சங்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு மறுத்துவிட்ட சாம்சங் நிர்வாகம், மறுபுறத்தில் ஆலை நிர்வாகத்திற்கு ஆதர வாக மிகச் சொற்ப எண்ணிக் கையிலான ஊழியர்களைக் கொண்ட சங்கத்துடன் போலியாக ஒரு ஒப்பந்தத் தை ஏற்படுத்தியது. தமிழக அமைச்சர்களோ இந்த ஒப்பந்தத்தைக் காட்டி, பேச்சுவார்த்தையில் உடன் பாடு ஏற்பட்டதாகவும், ஒரு தரப்பு தொழிலாளர்கள் மட்டுமே போராட்டம் நடத்தி வருவதாகவும் தன்னிச்சை யாக அறிவித்தனர்.
இது தொழிலாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற் படுத்தியது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அங்கம் வகிக்கும் சிஐடியு, பேச்சுவார்த்தையிலேயே பங்கேற்காத நிலையில், உடன்பாடு ஏற்பட்டதாக அமைச்சர்கள் அறிவித்தது கண்டனத்திற்கு உரியது; தமிழக அமைச்சர்கள் தொழிற்சங்க நடவடிக்கை, தொழிலாளர்களின் கூட்டுப் பேர உரிமை பற்றிய புரிதல் கூட இல்லாமல் பேசுவது டன், சாம்சங் நிறுவனத்தின் பிரதிநிதிகள் போல நடந்து கொள்கிறார்கள்; அவர் களின் நடவடிக்கைகள் மிக மோசமானது என்று சிஐடியு கண்டனம் தெரிவித்தது. எப் போதும் போல, சாம்சங் தொழிலாளர்களின் போராட்டம் தொடரும் என்று அறிவித்து, அதன்படியே செவ்வாயன்று 30-ஆவது நாளாக வேலைநிறுத்தம் தொடர்ந்தது.
அரசியல் தலைவர்கள் ஆதரவு
இதனிடையே, தொழி லாளர்களுக்கு தங்களின் தார்மீக ஆதரவைத் தெரி விக்கும் வகையில், சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சிபிஐ மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், காங்கிரஸ் தலை வர் கு. செல்வப் பெருந்தகை எம்எல்ஏ, விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி., த.வா.க. தலைவர் தி. வேல்முருகன் எம்எல்ஏ, மதிமுக தலைவர்களில் ஒருவரான அந்திரி தாஸ் உள்ளிட்டோர் அக்டோபர் 9- (31-ஆவது நாளன்று போராட்டத்தின்போது) புத னன்று சுங்குவார்சத்திரம் போராட்டக் களத்திற்கு நேரில் செல்வதாக அறிவித் திருந்தனர். இந்தத் தகவல் காட்டுத் தீ போல் பரவியது.
காவல்துறை அடாவடி: நள்ளிரவில் கைது!
இதனால் பதற்ற மடைந்த தமிழக காவல்துறை, சாம்சங் நிறுவனத்தின் ஏவல் துறையாக மாறி, நள்ளிரவில் தொழிற்சங்க நிர்வாகிகளின் வீட்டில் புகுந்து அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கியது. குறிப்பாக பி.எலன் என்பவரை அவரது மனைவி கண் முன்னேயே இழுத்து வந்துள்ளனர். அவரை எங்கு கொண்டு செல்கிறோம் என்பதைக் கூட தெரிவிக்கவில்லை.
சமூக விரோதிகளைத் தேடுவது போல, இரவு முழுவதும் ரோடு ரோடாக அலைந்து தேடியுள்ளனர். அவர்களின் கண்களுக்கு நீல வண்ண உடை (சாம்சங் நிறுவன சீருடை) யாரெல்லாம் அணிந்து வந்தார்களோ அனைவரையும் பிடித்து விடிய விடிய விசாரணை நடத்தினர். இந்த தேடுதலில் ஏழு தொழிலாளர்களை இரவோடு இரவாக கைது செய்து நீதிபதி முன்பு நிறுத்தி, சிறையில் அடைக்கும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டனர்.
இந்த விவகாரம் ஏனைய தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்க தலைவர்களுக்கு தெரியவந்ததை அடுத்து, சொந்த ஜாமீனில் விடுவித்துவிட்டதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். ஆனாலும் அவர்களை சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை என்ற பெயரில் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டுள்ளனர். தொழிற்சங்கத் தலைவர்கள் தலையிட்டதன் பேரில் புதனன்று காலை 11 மணிக்கு அனைவரையும் காவல் நிலையத்திலிருந்து விடுவித்துள்ளனர்.
போராட்டப் பந்தலைப் பிரித்தும் பொய் வழக்கு போட்டும் அராஜகம்
சாம்சங் நிறுவன ஊழியர்கள் சுங்குவார்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிறு மாங்காடு கூட்டுச் சாலை அருகே எச்சூர் கிராமத்தில் தான் ஷாமியானா பந்தல் அமைத்து கடந்த 30 நாட்களாக அமைதியான முறையில் போராடி வருகின்றனர்.
அப்போது, அந்த வழியாக சென்ற சிறு வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானது. இதை அறிந்த சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் விபத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்று வதற்கு ஓடோடிச் சென்றனர். அப்போது, அந்த இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களுக்கும் சாம்சங் தொழிலாளர்களுக்கும் சிறுவாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனைச் சாக்காக வைத்து, “தொழிற்சங்கத் தலைவர்கள் இ. முத்துக்குமார், எலன் ஆசிக் அகமது ஆகியோரின் தூண்டுதலின் பேரில் காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் சில காவலர்களை சாம்சங் தொழிலாளர்கள் தாக்கியதாக” பொய்வழக்கு பதிவு செய்தனர். அந்த வழக்கிலேயே மேற்கண்ட ஏழு பேரையும் கைது செய்தனர்.இதனைச் சாக்காக வைத்து, “தொழிற்சங்கத் தலைவர்கள் இ. முத்துக்குமார், எலன் ஆசிக் அகமது ஆகியோரின் தூண்டுதலின் பேரில் காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் சில காவலர்களை சாம்சங் தொழிலாளர்கள் தாக்கியதாக” பொய்வழக்கு பதிவு செய்தனர். அந்த வழக்கிலேயே மேற்கண்ட ஏழு பேரையும் கைது செய்தனர்.
இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த சம்பவத்தின் போது அந்த இடத்திலேயே முத்துக்குமார் இல்லை. எனினும், முத்துக்குமார் தூண்டுதலின் பேரில் தாக்குதல் சம்பவம் நடந்ததாக பொய் வழக்கை ஜோடித்த காவல்துறையினர், தொழிலாளர்கள் அமைத்திருந்த ஷாமியானா பந்தலை இரவோடு இரவாக பிரித்து எறிந்துவிட்டனர்.இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த சம்பவத்தின் போது அந்த இடத்திலேயே முத்துக்குமார் இல்லை. எனினும், முத்துக்குமார் தூண்டுதலின் பேரில் தாக்குதல் சம்பவம் நடந்ததாக பொய் வழக்கை ஜோடித்த காவல்துறையினர், தொழிலாளர்கள் அமைத்திருந்த ஷாமியானா பந்தலை இரவோடு இரவாக பிரித்து எறிந்துவிட்டனர்.
மிரட்டலுக்கு அஞ்சாத தொழிலாளர்கள் காலியிடத்திலும் அமர்ந்து போராட்டம்!
இந்நிலையில், கடுகளவும் வன்முறையில் ஈடுபடாத தொழிலாளர்கள் புதனன்று வழக்கம்போல் போராட்டப் பந்தலுக்கு வருகை தந்த நிலையில், அவர்களைப் பேருந்திலேயே மறித்து, அடையாள அட்டையை காட்டும்படி காவல் துறையினர் வன்முறையைத் தூண்ட முயற்சித்துள்ளனர். இதனால் பல்வேறு இடங்களில் போலீசாருக்கும் தொழிலாளர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு காவல்துறையின் பல்வேறு தடைகளையும் மீறி, தொழிலாளர்கள் போராட்டப் பந்தலுக்கு வந்தபோது, அங்கு போடப்பட்டிருந்த பந்தல் பிரிக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளாகினர். இந்த தகவலை மற்ற தொழிலாளர்களுக்கும் தெரிவித்தனர். இதனால் ஆவேசமடைந்த தொழிலாளர்கள் சாரை சாரை யாக அணி வகுத்தனர். பந்தல் பிரிக்கப்பட்ட காலியிடத்தில் அமர்ந்து வழக்கம்போல போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் காவல்துறை திணறல்!
இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத காவல்துறை யினர் அங்கிருந்து வெளியேறுமாறு தொழிலாளர்களை அச்சுறுத்தினர். ஆனால், முன்வைத்த காலை பின்வைக்க மாட்டோம் என்று கூறிய சாம்சங் தொழிலாளர்கள், நாங்கள் தனியாருக்கு சொந்தமான இடத்தில்- அனுமதி பெற்றுத் தான் போராட்டத்தை அமைதியான முறையில் நடத்தி வருகிறோம்; நாங்கள் யாருக்கும், எந்த வாகனத்திற்கும் இடையூறு செய்யவில்லை என்றனர். இதை ஏற்க மறுத்த காவல்துறையினர் அனைவரையும் கைது செய்வதாக மிரட்டினர். காவல்துறையின் அராஜ கத்தை எதிர்த்து முழக்கமிட்ட தொழிலாளர்கள், தங்கள் தரப்பு நியாயத்தையும் சரமாரியாக காவல்துறை யினரிடம் முன்வைத்தனர். இதற்கு பதில் அளிக்க முடியாமல் காவல்துறையினர் திகைத்து நின்றனர்.
நேரம் செல்லச் செல்ல தொழிலாளர்கள் ஆயிரக் கணக்கில் திரளவே ஆத்திரமடைந்த காவல்துறையினர், தொழிலாளர்களை எப்படியாவது கைது செய்து அப்புறப்படுத்த வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தனர். தொழிலாளர்களைக் கைது செய்து ஏற்றிச் செல்வதற்கு வாகனங்களையும் அதிவிரைவுப் படையினரையும் வரவழைத்தனர்.
போர்க்களமாக்க முயற்சி
மேலும் அந்தப் பகுதியில் திறந்து வைக்கப்பட்டிருந்த சிறு கடைகள் அனைத்தையும் உடனடியாக மூடும்படி காவல்துறையினர் மிரட்டினர். இதனால் அந்தப் பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது. அப்போது காவல்துறையினருக்கும் சாம்சங் நிறுவனத் தொழிலாளர்களுக்கும் சிறிது நேரம் கடும் வாக்குவாதம் மூண்டது. எங்கள் சங்கத் தலைவர்கள் வந்த பிறகு எங்கள் அனைவரையும் கைது செய்யுங்கள்; அதுவரைக்கும் நாங்கள் இந்த இடத்தை விட்டு வெளியேற மாட்டோம் என்று சாம்சங் தொழிலாளர்கள் விடாப்பிடியாக போராட்டத்தை தொடர்ந்தனர்.
ஒரு கட்டத்தில் காவல்துறையினரைக் காட்டிலும் தொழிலாளர்கள் பல மடங்கு அதிகரித்து விட்டனர். இதனால் செய்வதறியாமல் திகைத்து நின்ற காவல்துறை யினர், உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து மேலும் போலீசைக் குவித்தனர். இந்த தகவல் அக்கம் பக்கம் உள்ள கிராமங்களுக்கு பரவியதால் கிராம மக்களும் திரண்டு அந்தப் பகுதிக்கு வந்தனர்.
பின்னர் சிஐடியு தலைவர்கள் அ. சவுந்தரராசன், ஜி. சுகுமாறன், எஸ். கண்ணன், இ. முத்துக்குமார், கே.சி.கோபி குமார் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.பின்னர் சிஐடியு தலைவர்கள் அ. சவுந்தரராசன், ஜி. சுகுமாறன், எஸ். கண்ணன், இ. முத்துக்குமார், கே.சி.கோபி குமார் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
கொட்டும் மழையிலும் நடந்த 3 மணிநேரப் போராட்டம்!
போராட்ட இடத்திற்கு வந்த சங்கத் தலைவர்கள் காவல்துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, எங்கள் சங்கத்துடன் சாம்சங் நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்த முன் வரவேண்டும்; அதுவரை எங்களது போராட்டம் தொடரும் என்றனர். மேலும், நாங்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் இடம் தனியார் ஒருவருக்கு சொந்தமானது; அவர் எந்தவித ஆட்சேபனை யும் தெரிவிக்கவில்லை; இந்த இடத்தில் போராட்டம் நடத்திக் கொள்ள முழு உரிமையும் கொடுத்துள்ளார்; எனவே, நாங்கள் எங்கள் போராட்டத்தை தொடருவோம் என்று திட்டவட்டமாக அறிவித்தனர். இதனிடையே பலத்த மழை கொட்டியது. ஆனாலும், தலைவர்களும் தொழிலாளர்களும் அந்த இடத்தை விட்டு அசையாமல் மழையில் நனைந்தபடியும் விண்ணதிர முழக்கம் எழுப்பியவாறு போராட்டத்தை தொடர்ந்தனர்.
சாம்சங் போராட்டம் தீவிரம் அடைந்ததை அடுத்து பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் குவிந்தனர். அவர்களும் கொட்டும் மழையிலும் தொழி லாளர்களின் உறுதிமிக்க போராட்டத்தைப் படம்பிடித்தனர்.
அ. சவுந்தரராசன் - இ. முத்துக்குமார் உட்பட 725 பேர் வரை கைது!
இந்தப் போராட்டம் சுமார் மூன்று மணி நேரம் எழுச்சியுடன் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், நண்பகல் 12 மணிக்கு மேல் தொழிலாளர்கள் அனைவரை யும் காவல்துறையினர் கைது செய்து, தனியார் வாகனங்களில் ஏற்றிச் சென்றனர். முதலில் சங்கத்தின் தலைவர் இ. முத்துக்குமார், அவரைத் தொடர்ந்து சிஐடியு மாநிலத் தலைவர் அ. சவுந்தரராசன், பின்னர் தொழிலாளர்கள் கைதாகினர். அவர்களை இரண்டு மண்டபங்களில் அடைத்தனர். அப்போதும் இடம் போதவில்லை என்பதால், காவல்துறை மேலும் திக்கு முக்காடியது.
நேரில் வந்த அரசியல் தலைவர்கள்
இந்நிலையில் சிபிஎம், சிபிஐ, காங்கிரஸ், விசிக, மமக உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நேரில் வந்து தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பேசினர். (செய்தி, படம் : பக்கம் 5)
அப்பட்டமான அத்துமீறல்
அ. சவுந்தரராசன் கண்டனம்
சாம்சங் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், சிஐடியு மாநிலத் தலைவர் அ. சவுந்தரராசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “காவல்துறை மிக மோசமான அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது. இப்படியெல்லாம் காவல்துறை செய்வதற்கு சட்டத்தில் இடமே இல்லை. போராட்டம் நடத்தப்படும் இந்த இடம் தனியாருடையது. அப்படியிருக்க இங்கே வந்து கைது செய்ய காவல்துறைக்கு எந்த உரிமையும் கிடையாது. இவ்வளவு அக்கிரமமாக காவல்துறை நடந்து கொள்வது ஆட்சிக்கு நல்லதல்ல.
காலனியாதிக்க ஆட்சிக் காலத்திலா இருக்கிறோம்..?
இதில் முதல்வர் உடனடியாக தலையிட வேண்டும். இந்தியா காலனி ஆதிக்கத்தில் இருந்தபோது காவல்துறை எப்படி எல்லாம் மக்களுக்கு எதிராக அடக்குமுறையை ஏவிக் கொடுமைப்படுத்தியதோ அதேபோன்றே காவல்துறை இப்போது நடந்து கொள்கிறது. கார்ப்பரேட் நிறுவனத்துக்கு ஆதரவாக தொழிலாளர்களை மிரட்டுவதிலும் அவர்களை அச்சுறுத்துவதிலும் காவல்துறையே ஈடுபடுகிறது. 31 நாட்களாக வேலை நிறுத்தம் நடத்துவதன் மூலமாக தமிழ்நாடு முழுவதும், இந்தியா முழுவதும் எங்களுடைய எதிர்ப்பைக் காட்டி வருகிறோம். கார்ப்பரேட்டுக்கு ஆதரவாக இந்த அரசு செயல்படுவது தவறு. அமைச்சர் எங்களுடைய கோரிக்கை என்னவென்றே புரிந்து கொள்ளவில்லை. அவர் புரிந்து கொள்ளவில்லையா அல்லது புரிந்து கொள்ளாதது போல் நடிக்கிறாரா என்றே தெரியவில்லை.
சங்கப் பதிவு எங்களின் உடனடி கோரிக்கை அல்ல!
சங்கத்தைப் ‘பதிவு செய்வது’ என்பது எங்களுடைய உடனடி கோரிக்கை அல்ல. பதிவு செய்தால் எங்களுடைய வேலை நிறுத்தத்தை வாபஸ் வாங்குவோம் என்று எப்போதும் எங்கேயும் நாங்கள் சொல்லவே இல்லை. ரிஜிஸ்ட்ரேஷன் என்பது இன்றைக்கு இல்லாவிட்டாலும், என்றைக்காவது எங்களுக்குத் தானாகவே கிடைக்கும். அதற்கு அமைச்சருடைய தயவு எங்களுக்குத் தேவையில்லை. எங்கள் கோரிக்கை ‘சங்கத்தை ஏற்க வேண்டும்; அங்கீகரிக்க வேண்டும்’ என்பதே. அதைக்கூட சாம்சங் நிறுவனம் ஏற்றுக்கொள்ளுமாறு செய்வதற்கு இயலவில்லை என்றால் எதற்காக அரசு; எதற்காக ஆட்சி?.
தொழிலாளர் குடும்பங்களை அச்சுறுத்துவதை ஏற்க முடியாது!
இரவு முழுவதும் 10 பேரைக் கைது செய்துள்ளனர். தொழிலாளர் குடும்பங்கள் அனைத்தையும் அச்சுறுத்தியுள்ளனர். அனைத்துக் குடும்பங்களிலும் பீதியை உண்டாக்கி இருக்கின்றனர். பெண்கள் நடுங்கிக் கொண்டிருக்கின்றனர். இது அரசு செய்யக்கூடிய காரியமா? இதை எந்த வகையிலும் நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. இது காவல்துறையின் அப்பட்டமான அத்துமீறல்” என்றார். செய்தியாளர்களின் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த அ. சவுந்தரராசன், “கூட்டணிக் கட்சி என்பது வேறு; இது கூட்டணி பேசும் இடமும் அல்ல. இது தொழிற்சங்கம் நடத்துகிற போராட்டம். அதனால் அரசியல் கட்சிகளும் தொழிலாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தருகின்றன” என்றார்.
முதல்வர் தலையிட்டுத் தீர்வு காண வேண்டும்!
மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த அ. சவுந்தரராசன், “காவல்துறை நடந்து கொள்ளும் முறை சரியல்ல. கைது செய்யும் வடிவமும் சரியல்ல. ஏற்கத்தக்கதல்ல. காவல்துறை சாம்சங் நிறுவனத்தின் ஏவல் துறையாக செயல்படுகிறது, காவல்துறை முதலமைச்சர் பொறுப்பில் உள்ளதால் உடனடியாக தலையிட்டு சுமூக தீர்வு காண வேண்டும்” என்றும் கோரிக்கை விடுத்தார்.
சமூக விரோதிகளாக சித்தரிக்கும் காவல்துறை!
சுங்குவார்சத்திரம் பகுதிக்குள் வெளிநபர்கள் யாருமே வரக்கூடாது என்பதில் காவல்துறை கெடுபிடி காட்டியது. புதிதாக வந்த வாகனங்கள் அனைத்தையும் தடுத்து நிறுத்தி தணிக்கை செய்த பிறகே அனுப்பி வைத்தது. சுங்குவார்சத்திரம் முழுவதையும் காவல்துறையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக் கொண்டனர். இதற்குக் காரணமாக, போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், “சமூக விரோதிகள், மாவோயிஸ்டுகள் தொழிலாளர்கள் என்ற போர்வையில் உள்ளே நுழைந்து, இங்கு நடக்கும் போராட்டத்தை அரசுக்கு எதிரான போராட்டமாக திசை திரும்பவும், வன்முறையை தூண்டிவிடவும் முயற்சிப்பதாகவும், எனவே, இந்தச் சோதனையை நடத்துகிறோம்” என்றும் கூறியுள்ளனர்.
2 தொழிலாளர்கள் மயக்கம்; மருத்துவமனையில் அனுமதி
சாம்சங் நிர்வாகத்திற்கு விசுவாசமாக நடந்து கொண்ட காவல்துறையினர் தொழிலாளர்களை பலவந்தமாக கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில், தங்களது உடலை வருத்திக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களில் சிலர் உடல் ரீதியாக பாதிக்கப்பட்டனர். குறிப்பாக மணிகண்டன் உள்ளிட்ட இரண்டு பேர் மயக்கம் அடைந்தனர். இதையடுத்து, அவர்கள் 108 ஆம்புலன்ஸ் வாகனம் வரவழைக்கப்பட்டு, சக தொழிலாளர்கள் உதவியுடன் உடனடியாக அருகில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதனால் போராட்டக் களத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தொழிலாளர்கள் இருவர் வேலூர் சிறையில் அடைப்பு
சிஐடியு தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கு புதனன்று பிற்பகல் 3 மணிக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, தொழிலாளர்கள் யாரும் தற்போது காவலில் வைக்கப்படவில்லை என்று தமிழக காவல்துறை கூறியது. ஆனால் அதன்பிறகு, வாகன விபத்தின் போது சங்கத் தலைவர்கள் இ. முத்துக்குமார், ஆசிக் முகமது தூண்டுதலின் பேரில், காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்களை தொழிலாளர்கள் தாக்கியதாக உண்மைக்கு மாறான வழக்கைப் பதிவுசெய்த காவல்துறையினர் இந்த வழக்கில் எலன், சூரிய பிரகாஷ் ஆகிய இரண்டு தொழிலாளர்களை மாலை 5மணிக்கு ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது இந்த இரண்டு தொழிலாளர்களையும் அக்டோபர் 22 வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.