சென்னை;
சமூக இடைவெளியுடன் ஆட்டோக்கள் இயங்க அனுமதியளிக்க வேண்டும். ஆட்டோதொழிலாளர் குடும்பங்கள் வாழ ரூ.15 ஆயிரம்நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மே 21 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்த தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம்(சிஐடியு) முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம்(சிஐடியு) தலைவர் வி.குமார், பொதுச்செயலாளர் எம்.சிவாஜி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் நான்காவது கட்ட ஊரடங்கு மே 31 வரை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 55 நாட்கள் கடந்துவிட்ட சூழ்நிலையில் மேலும் இந்த அறிவிப்பானது ஆட்டோ தொழிலாளர்கள் உள்ளிட்ட முறைசாரா தொழிலாளர்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி யுள்ளது. ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்க்கை கடுமையான வறுமையையும், நெருக்கடியையும் சந்தித்துள்ளது. இந்த நிலையில் அனைத்து ஆட்டோ தொழிலாளர்களுக்கும் ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும், மே 17-க்கு பிறகு சமூக இடைவெளியை கடைப்பிடித்து ஆட்டோக்களை இயக்க அனுமதிக்க வேண்டும் என்று சம்மேளனத்தின் சார்பில் தமிழக முதல்வருக்கு இ மெயில் மூலம் மனுக்கள் அனுப்பப்பட்டன.
இந்த மனுக்கள் பரிசீலிக்கப்படாதது மிகுந்த வேதனையளிக்கிறது. முடிதிருத்தும்தொழிலாளர்களுக்கு நலவாரியத்தில் உள்ளவர்களுக்கும், நலவாரியத்தில் இல்லாதவர்களுக்கும் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். இதேபோல் ஆட்டோ தொழிலாளர்களுக்கும் நலவாரியத்தில் உள்ளவர்கள் மற்றும் இல்லாதவர்களுக்கும் நிவாரணம் வழங்கவேண்டும் என தொடர்ந்து கேட்டுவரு கிறோம். ஆனால் நலவாரியத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, அந்த நிதியும் பலருக்கு கிடைக்காத நிலைதான் தொடர்கிறது. தொழிலாளர் நலவாரிய அலுவலகத்திற்கும் வீட்டிற்கும் அலையும் அவலம் தொடர்கிறது.
நான்காம் கட்ட ஊரடங்கில் ஆட்டோக்களுக்கு தளர்வு இருக்கும் என எதிர்பார்த்தநிலையில், ஆட்டோக்கள் இயக்க அனு மதியும் வழங்கப்படவில்லை, நிவாரணமும் வழங்கப்படவில்லை. தமிழக அரசின் இந்த நடவடிக்கையானது ஆட்டோ தொழிலாளர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆட்டோ தொழி லாளர்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை, ஆட்டோக்கள் இயக்க அனுமதி யும் கிடைக்கவில்லை எனும் போது வாழ்க்கைநடத்த போராடுவதை தவிர எங்களுக்கு வேறுவழியில்லை.
எனவே தமிழகம் முழுவதும் மே 21 அன்று காலை பெருந்திரளான ஆட்டோ தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.