சென்னை
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு அறிவிக்கும் முன்னரே தமிழகத்தில் உள்ள பள்ளிகள் மூடப்பட்டு 10 மற்றும் 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான ஆண்டுத்தேர்வை ரத்து செய்து அனைத்து மாணவ மாணவியர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கக் கோரி பெற்றோர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாகத் தமிழகத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவ மாணவியர்களும் தேர்ச்சி பெற்றதாகவும், கடந்த 24-ஆம் தேதி நடந்த 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத முடியாமல் போன மாணவ மாணவியர்களுக்கு மற்றொரு நாளில் தேர்வு எழுதவும் ஏற்பாடு செய்யப்படும் எனவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழகத்தைப் போலப் புதுச்சேரியிலும் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும் தேர்ச்சி செய்யப்படுவதாகப் புதுவை கல்வி இயக்குநரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.