மதவெறியைத் தூண்டி பிற மதத்தினர் மனம் புண்படும் வகையில் வெறுப்பு அரசியலை முன்னெடுத்துள்ள அர்ஜுன் சம்பத்திற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, பொதுச்செயலாளர் அ.ராதிகா ஆகியோர் விடுத்துள்ள கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது;
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் வருகிற நவம்பர் 21 ஈசா யோகா மையத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் சமூக விரோதச் செயல்களுக்கு எதிராகவும், போக்சோ உள்ளிட்ட ஏராளமான வழக்குகளைத் தாங்கி, மர்ம தேசமாக விளங்கும், ஈஷாவை கண்டித்தும் , ஈஷா யோகா மையம் மீது உச்ச நீதிமன்ற உத்தரவின் படி அனைத்து வழக்குகளையும் தமிழக அரசும் காவல்துறையும் துரிதமாக விசாரிக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்த அறைகூவல் விடுத்திருந்த நிலையில், இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் ஒரு அறிக்கையை வெளியிட்டு உள்ளார்.
அதில் ஈசா யோகா மையத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் நியாயப்படுத்தி அறிக்கை அளித்துள்ளார். அதே நேரம் ஈஷா இப்பகுதிக்கு வராமல் இருந்தால் மாற்று மதத்தைச் சேர்ந்தவர்கள் இப்பகுதியை கபளீகரம் செய்திருப்பார்கள் என மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையிலும், மதவெறியைத் தூண்டி பிற மதத்தினர் மனம் புண்படும் வகையில், வெறுப்பு அரசியலை முன்னெடுத்து அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் ஈஷா யோகா மையத்தின் அத்து மீறல்களான யானை வழித்தடங்கள் அழிப்பு, பழங்குடி மக்களின் நிலங்கள் அபகரிப்பு, அனுமதி இன்றி கட்டிடங்கள் எழுப்புதல், அனுமதி இன்றி ஈசா யோகா மையத்திற்குள் தகன மேடை, காலாவதியான மருந்துகளை மருத்துவ முகாம்களில் வழங்கியது, மருத்துவ முகாமுக்கு வந்த குழந்தைகளிடம் பாலியல் அத்துமீறல் நடத்தியது,
ஈசா யோகா மையத்திற்குச் செல்பவர்கள் மாயமாவது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட, இயற்கையை நேசிப்பவர்கள் சமூகத்தை நேசிப்பவர்கள் ஜனநாயக சக்திகள் எதிர்த்து வருகின்றன. நீதிமன்றத்தில் பல வழக்குகள் இது தொடர்பாக நிலுவையில் இருப்பது உலகம் அறிந்த விஷயமாகும். இந்நிலையில் ஈஷாவுக்கு ஆதரவு என்ற பெயரில் அதன் சமூக விரோதச் செயல்களுக்குத் துணை போகும் இந்து மக்கள் கட்சியும், அதன் தலைவரும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் போராட்டத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை வந்துவிடும் என, சட்டம் ஒழுங்கு பிரச்சனையை உருவாக்குவதற்கே ஆரம்பிக்கப்பட்ட அமைப்பும், அதன் தலைவரும் கூறுவது கேலிக்குரியதாகும்.
கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளத் தயாராக இல்லாத இந்து மக்கள் கட்சி இது போன்ற அவதூறு பிரச்சாரங்களைச் செய்து வருவதை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தில் பெண் உரிமைக்கான போராட்டத்தில் முன்னணிக் களத்தில் நிற்கும் அமைப்பு. நாங்கள் நடத்திய போராட்டம் ஏதாவது ஒன்றில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை வந்ததாக அர்ஜுன் சம்பத்தால் நிரூபிக்க முடியுமா? என்ற கேள்வியும் முன் வைக்கிறோம்.
மனுதர்ம கோட்பாடுகளின் பின்னால் நின்று பெண் சமத்துவத்தையும் பெண்ணுரிமையையும் ஏற்றுக்கொள்ளாத இந்து மக்கள் கட்சி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் போராட்டத்தை, இது மாதிரியான அறிக்கைகள் மூலமாகவோ, மிரட்டல்கள் மூலமாகவோ, தடுத்து நிறுத்தி விடலாம் என்று நினைப்பது ஒரு நாளும் நிறைவேறாது.
வாச்சாத்தி வழக்கு, சின்னான்பதி வழக்கு, சிதம்பரம் பத்மினி, அரியலூர் நந்தினி வழக்கு, ஸ்ரீமதி வழக்கு, எனப் பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராகத் தமிழகத்தில் நீண்ட நெடிய வரலாற்றுப் பாரம்பரியங்களைக் கொண்டிருக்கிறோம்.
அதிகார வர்க்கத்தின் அடக்கு முறைகளுக்கோ, உங்களைப் போன்றோரின் மிரட்டல்களுக்கோ அடி பணிந்ததாக வரலாறு இல்லை.
தீர்மானித்தபடி எங்கள் போராட்டத்தை, முற்போக்கு எண்ணம் கொண்ட, ஜனநாயகத்தை நேசிக்கும், சமூக அக்கறையுள்ள தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களின் பேராதரவோடு வெற்றிகரமாக நடத்திடுவோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.