tamilnadu

img

அதிமுக - பாஜக அணியை திமுக அணி தோற்கடிப்பது நிச்சயம்.... சென்னையில் பிரகாஷ் காரத் பேட்டி....

சென்னை:
வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக-பாஜக அணியை திமுக தலைமையிலான அணி நிச்சயம் தோற்கடிக்கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ்காரத் உறுதிபடத் தெரிவித்தார்.

தமிழகத்தில் 26,27,28 தேதிகளில் நடைபெறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் பிரச்சாரப்பொதுக்கூட்டங்களில் பங்கேற்பதற்காக பிப்ரவரி 25 புதன்கிழமையன்று சென்னை வந்த பிரகாஷ் காரத் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது.  இதற்கான அதிகாரப்பூர்வ தேர்தல் தேதி அடுத்த சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தை  தொடங்கியுள்ளது. தமிழகத்தில் திமுக தலைமையிலான அணியில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெற்றுள் ளது.

திமுக தலைமையிலான  அணி வலுவாகவும் உறுதியாகவும் உள்ளதால் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக-பாஜக அணியை நிச்சயம் தோற்கடிக்கும்.  தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளை  நாங்கள் எழுப்புவோம்.பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு  உள்ளிட்ட எரிபொருட்களின் விலை  கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதால் தமிழக மக்கள் மட்டுமல்லாமல்  நாடு முழுவதும் உள்ள மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர். சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே நாட்டின் பல பகுதிகளில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ தொட்டுவிட்டது. மத்திய அரசு கடைப்பிடிக்கும் தவறான பொருளாதாரக் கொள்கைகளே விலை உயர்வுக்கு காரணமாகும்.

ஒரு லிட்டர் பெட்ரோல் விலையில் 63 சதவீதம் மத்திய அரசின் கலால் மற்றும் இதர வரிகளை கொண்டதாகும்.  பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு வகையிலான வரிகளை விதித்து வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பெருமளவு உயராத போதிலும் நம் நாட்டில் பெட்ரோல், டீசல் விலைதொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. பெட்ரோலியப் பொருட்கள் மீதான மத்திய கலால் வரி மற்றும்இதர வரிகளை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இதை மத்திய அரசு செய்தாலே பெட்ரோல், டீசல் விலை உடனடியாக பாதியாக குறைந்து விடும். இவை அனைத்தும்வரும் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது எழுப்பப்படும்.இவ்வாறு பிரகாஷ் காரத் கூறினார். பேட்டியின் போது கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி,தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஏ.பாக்கியம், மாநிலக்குழு உறுப்பினர்கள் ஏ. ஆறுமுக நயினார், ஆர். வேல்முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

இன்று பிரச்சாரம்
வெள்ளியன்று காலை சிதம்பரத்திலும், மாலையில் நாகை மாவட்டம் கீழ்வேளூரிலும் நடைபெறும் மார்க்சிஸ்ட் கட்சியின் பிரச்சாரப் பொதுக்கூட்டங்களில் பிரகாஷ் காரத் உரையாற்றுகிறார்.