tamilnadu

11ஆம் வகுப்புக்கு விரும்பும் பாடப்பிரிவில் மாணவர் சேர்க்கை.... பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோரிக்கை...

சென்னை:
பதினோராம் வகுப்பு சேர்க்கையில் விரும்பும் பாடப்பிரிவில் மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் பி. ரத்தினசபாபதி, துணைத் தலைவர் முருகையன் பக்கிரிசாமி பொதுச் செயலாளர் பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு ஆகியோர் கொடுத்திருக்கும் அறிக்கை வருமாறு:-

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வி ஆணையர் செயல்முறையில், 11ஆம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் குறிப்பிட்ட பிரிவிற்குச் சேர்க்கைக்கான இடங்களை விட மிக அதிகமான விண்ணப்பங் கள் வரப்பெற்றால், அந்தப் பாடப்பிரிவிற்கு விண்ணப் பித்தவர்களுக்குத் தொடர்புடைய கீழ்நிலைப் பாடத்தில் இருந்து 50 வினாக்கள் தயார் செய்து தேர்வு நடத்தி, அதில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நோய்த் தொற்றுக் காலகட்டத்தில் படிக்க ஆர்வத்துடன் குறிப்பிட்ட பிரிவில் சேர அரசுப் பள்ளியை நாடிவரும் மாணவரை வடிகட்டி, அப்பிரிவை மறுப்பது நியாயமற்றது.அரசுப் பள்ளிகளில் தேவை ஏற்படின் கூடுதல் வகுப்புகள் தொடங்க அறிவுறுத்தாமல், மாணவர் கோரும் பிரிவை மறுப்பது நியாயமற்ற அணுகுமுறை. கூடுதல் வகுப்புகள் தொடங்க அரசிடம் பணம் இல்லையா? அல்லது போதிய அளவு ஆசிரியர்களை நியமிக்க, தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் தமிழ்நாட்டில் இல்லையா?
11ஆம் வகுப்பிற்கு மறைமுகமாக நுழைவுத் தேர்வு என்பதை எந்த வகையிலும் ஏற்க இயலாது. சமூக நீதி அடிப்படையில் இட ஒதுக்கீடு பின்பற்றப் பட்டு, அதே பள்ளியில் பத்தாம் வகுப்புப் படித்த மாணவர்கள் அதே பள்ளியில் விரும்பும் பாடப்பிரிவில் சேர்க்கப்பட வேண்டும், அதற்கு அடுத்ததாக பள்ளியின் அருகில் வசிப்பவர்கள் கோரும் பிரிவை மறுக்காமல் வழங்க வேண்டும்.‌

மிக அதிக அளவில் விண்ணப்பம் வரப்பெற்றால் கூடுதல் வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும். அதற்குரிய அனுமதி அளித்திட வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளைப் பரிசீலித்துப் பள்ளிக்கல்வி துறை ஆணையர் செயல்முறைகள் மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்று கோருகிறது.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.