tamilnadu

img

ஜெய்பீம் – அன்புமணிக்கு நடிகர் சூர்யா பதில்  

ஜெய்பீம் திரைப்படம் தொடர்பான அன்புமணியின் கேள்விகளுக்கு நடிகர் சூர்யா பதில் அளித்துள்ளார்.  

சமீபத்தில் வெளியான உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர் சமூகம் தொடர்புபடுத்தப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக பாமக இளைஞரணிச் செயலாளர் அன்புமணி, 9 கேள்விகளை எழுப்பி நடிகர் சூர்யாவுக்கு கடிதம் எழுதினார்.  இதற்கு பதிலளித்து நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “பழங்குடியின மக்கள் நடைமுறையில் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளையும் படத்தில் பேச முயற்சித்திருக்கிறோம். கடிதத்தில் நீங்கள் குறிப்பிட்டுள்ளதைப் போல, எந்தவொரு குறிப்பிட்ட தனிநபரையோ, சமுதாயத்தையோ அவமதிக்கும் நோக்கம் ஒருபோதும் எனக்கோ, படக்குழுவினருக்கோ இல்லை. சிலர் சுட்டிக்காட்டிய பிழையும், உடனடியாகத் திருத்தி சரி செய்யப்பட்டதைத் தாங்கள் அறிவீர்கள்” என்று கூறியுள்ளார்.

இத்திரைப்படத்தின் கதை, உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்டுள்ளது. இதில் வரும் கதாபாத்திரங்கள், பெயர்கள், சம்பவங்கள் அனைத்தும் யாரையும் தனிப்பட்ட அளவில் குறிப்பிடவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என்கிற அறிவிப்பைப் படத்தின் தொடக்கத்திலேயே பதிவு செய்திருக்கிறோம் எனக் குறிப்பிட்ட சூர்யா, படத்தின் மூலம் அதிகாரத்தை நோக்கி எழுப்பிய கேள்வியை, குறிப்பிட்ட பெயர் அரசியலுக்குள் சுருக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.  

அநீதிக்கு எதிராக ஒன்றிணைய வேண்டிய போராட்டக் குரல், பெயர் அரசியலால் மடைமாற்றம் செய்யப்பட்டு நீர்த்துப் போகிறது என்ற சூர்யா,  விளம்பரத்திற்காக யாரையும் அவமதிக்க வேண்டிய எண்ணமோ, தேவையோ எனக்கு இல்லை. சமத்துவமும், சகோதரத்துவமும் பெருக நாம் அனைவரும் அவரவர் வழியில் தொடர்ந்து செயல்படுவோம் என்று கூறினார்.