சென்னை,மார்ச் 8- கோவில் நிலங்களில் குடியிருக்கும் மக்களுக்கு பட்டா வழங்கும் வகையில் உள்ள அரசாணை 318-ஐ உடன் செயல்படுத்தக்கோரியும், இந்த மக்களுக்கு எதிராக செயல்படும் பாஜகவின் எச்.ராஜா உள்ளிட்ட மதவாத அமைப்புகளை கண்டித்தும் மார்ச் 14 அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கத்தின் மாநில அமைப்பாளர் சாமி.நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் அனைத்து சமய நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் பல தலைமுறைகளாக சாதாரண ஏழை, எளிய, நடுத்தரப் பகுதி மக்கள் வீடுகட்டி குடியிருந்து வருகின்றனர். குத்தகை சாகுபடி செய்தும், சிறுகடை வைத்து வியாபாரம் செய்தும் வருகின்றனர். குறிப்பாக இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்களுக்கு 4 லட்சத்து 78 ஆயிரம் ஏக்கர் நஞ்சை, புஞ்சை, மானாவாரி நிலங்களும், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அடிமனைகளும், 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு கடைகளும் உள்ளன. இவற்றை பயன்படுத்துபவர்கள் 95 சதவீதம் பேர் சாதாரண ஏழை இந்து மக்களே, இவர்களுக்கு தற்போது அறநிலையத்துறை வாடகை, குத்தகையை பல மடங்கு உயர்த்தியுள்ளது. உயர்த்தப்பட்ட வாடகையை ஒரே தவணையில் கட்டச் சொல்லி பயனாளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி வருகிறது. கட்ட தவறியவர்களை அறநிலைய சட்டப்பிரிவு 78,79-ஐ பயன்படுத்தி ஆக்கிரமிப்பாளர்கள் என வெளியேற்றும் நடவடிக்கை எடுக்கிறது. இந்நிலையில் பல தலைமுறைகளாக குடியிருந்து வருபவர்கள், சாகுபடி செய்பவர்களுக்கு இந்த இடங்களை நியாயமான விலையை தீர்மானித்து அதை தவணை முறையில் பயனாளிகளிடம் பெற்றுக்கொண்டு சொந்தமாக்க வேண்டுமென அரசுக்கு கோரிக்கை வைத்து போராடி வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசு கடந்தாண்டு அக்டோபரில் அரசாணை 318-ஐ வெளியிட்டது. அதில் தொடர்ந்து 5 ஆண்டுகள் கோயில் இடத்தில் குடியிருக்கும் ஏழைகளுக்கு பட்டா வழங்க உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து எச்.ராஜா உள்ளிட்ட இந்து மதவெறியர்கள் பேசி வருகின்றனர். தமிழக அரசின் உத்தரவை செயல்படுத்தக்கூடாது என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இடைக்கால தடை உத்தரவு பெற்றுள்ளனர். வழக்கில் தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், தமிழகம் முழுவதும் உள்ள கோயில் நிலங்கள் 4 லட்சத்து 78 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் வெறும் 600 ஏக்கர் நிலத்தை மட்டுமே அரசு கையகப்படுத்தவுள்ளது. இந்த நிலங்களுக்கும் சந்தை மதிப்பை விட 3 மடங்கு சேர்த்து விலை கொடுத்து வாங்கி சுமார் 20 ஆயிரம் ஏழைகளுக்கு வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. இதை பொறுத்துக் கொள்ள முடியாத பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா தமிழக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவோம் என மிரட்டும் வகையில் பாஜக தலைமை அலுவலகத்திலிருந்து செய்தியாளர் சந்திப்பில் பேசுகிறார். கோவில் இடத்தில் குடியிருக்கும் ஏழை, எளிய மக்களுக்கு பட்டா வழங்கும் அரசின் திட்டத்தை எதிர்ப்பதோடு, பெரும்பான்மை இந்து மக்களுக்கு எதிராக செயல்படும் எச்.ராஜா உள்ளிட்ட இந்துத்துவா சக்திகளை தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். எனவே, அரசாணை 318-ஐ உடன் செயல்படுத்தக் கோரியும், எச்.ராஜா உள்ளிட்ட மதவாத அமைப்புகளை கண்டித்தும் மார்ச் 14 அன்று தேதி சென்னை வள்ளூவர் கோட்டத்தில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.