tamilnadu

சென்னையில் ரூ. 2000 கோடி மதிப்பீட்டில் 101 இடத்தில் பல்லடுக்கு வாகன நிறுத்தம்

சென்னை, மே 9- சென்னை மாநகராட்சி சார்பில் தி.நகரில் பல் அடுக்கு வாகன நிறுத்தம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதேபோல், ஸ்மார்ட் சிட்டி நிதியின் மூலம் ஸ்மார்ட் பார்க்கிங் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. சாலையின் ஓரங்களில் உள்ள இடங்களை கண்டறிந்து வாகனங்களை நிறுத்துவதற்கான வசதியை மேம்படுத்துவது இதன் நோக்கமாகும்.இதற்கிடையில், சென்னை மாநகராட்சியில் பொதுமக்கள் - தனியார் பங்களிப்புடன் ரூ.2 ஆயிரம் கோடி செலவில் விரிவான ஒருங்கிணைந்த வாகன நிறுத்த மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும் என்று 2019-20ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் தமிழக அரசு அறிவித்தது. 2 லட்சம் இருசக்கர வாகனங்கள், 2 லட்சம் நான்குசக்கர வாகனங்கள் நிறுத்தக்கூடிய வகையில் நிலத்தடிவாகன நிறுத்தம்அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து, இந்த திட்டத்திற்கான இடங்களை கண்டறிய வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தார். அதன்படி சென்னை மாநகராட்சியின் துணை ஆணையர் (பணிகள்) கோவிந்தராவ் தலைமையில் பொறியாளர்கள், வருவாய்அலுவலர்கள், ஸ்மார்ட் சிட்டி அதிகாரிகள் அடங்கிய குழு கடந்த வாரம் முழுவதும் ஆய்வு செய்து 101 இடங்களை கண்டறிந்துள்ளனர். இவற்றில் பிராட்வே, சைதாப்பேட்டை, திருவான்மியூர் உள்ளிட்ட 24 இடங்களில் வணிக வளாகங்களுடன் இணைந்த பார்க்கிங் திட்டம் செயல்படுத்தபட உள்ளது. இதை தவிர்த்து மீதம் உள்ள இடங்களில் பல் அடுக்கு வாகன நிறுத்தம் அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டம் தொடர்பான அறிக்கை அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அனுமதி கிடைத்தவுடன் பணிகள் தொடங்கும்என்று எதிர்பார்க்கப்படுகிறது.