தாம்பரம், ஏப். 23-தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் அருகே உள்ள ஆலப்பாக்கம் பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குட்டையில் இருந்து சுமார் 5 அடி நீளமுள்ள முதலை ஒன்று சாலையை கடந்து செல்வதை அப்பகுதி மக்கள் பார்த்தனர். இதனால்பொதுமக்கள் அச்சத்தில் இருந்தனர். முதலையை உடனடியாக பிடிக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்தநிலையில் திங்கட்கிழமை நள்ளிரவு மீண்டும் அதே பகுதியில் முதலை ஒன்று சாலையை கடந்து குடியிருப்பு பகுதிகளை நோக்கி சென்றது. இதனைக் கண்ட அப்பகுதி வாலிபர்கள் காவல் துறையினருக்கும், வனத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். ஆனால் அவர்கள்வருவதற்கு தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து வாலிபர்களே ஒன்று சேர்ந்து சுமார் 1 மணி நேரம் போராடி முதலையை பிடித்தனர். பின்னர் கயிற்றால் முதலையின் வாய் மற்றும் கால் பகுதியிகளை கட்டி வைத்தனர். பிடிபட்ட முதலை சுமார் 5 அடி நீளம் இருக்கும். சம்பவஇடத்திற்கு வந்த வனவிலங்குகள் மீட்பு குழுவினரும், வனத்துறையினரும் வந்து முதலையை மீட்டு எடுத்து சென்றனர்.வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிறிய குட்டிகளாக இருக்கும் முதலைகளை, பறவைகள் உணவுக்காக அங்கிருந்து தூக்கி வந்து விடுகின்றன. அப்படி வரும் முதலைகள் தவறி நீர்நிலைகளில் விழுந்து அங்கேயே வளர்ந்து விடுகிறது.ஆண்டுதோறும் வெயில்காலங்களில் ஏரி, குளங்களில் நீர் வற்றுவதால் முதலைகள் அங்கிருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிகளில் உலா வருகிறது. இப்போது வெயிலின் தாக்கத்தால் குட்டையில் உள்ள நீர் வற்றி வருவதால் முதலைகள் ஊருக்குள் வர ஆரம்பித்துள்ளது. அதேபோல் பல முதலைகள் குட்டைகளில் உள்ளன. அவற்றை வனதுறையினர் உடனடியாக பிடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.