சென்னை:
நளினி உள்பட 7 பேரை விடுதலை செய்வதுதொடர்பாக தமிழக அமைச்சரவையில் இயற்றிய தீர்மானம் பூஜ்ஜியத்திற்கு சமமானது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேரைவிடுதலை செய்ய வேண்டுமென தமிழக அரசுஅமைச்சரவையில் கடந்த 2018 ஆம் ஆண்டுசெப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் இந்த தீர்மானத்துக்கு ஒப்புதல் கேட்டு தமிழக ஆளுநருக்குஅமைச்சரவை பரிந்துரைத்தது. ஆனால் இந்த பரிந்துரை மீது தமிழக ஆளுநர் இதுவரைஎந்த முடிவும் எடுக்கவில்லை.
இதையடுத்து அமைச்சரவை முடிவின்படி,தன்னை விடுதலை செய்யாமல் சட்டவிரோத காவலில் சிறையில் அடைத்து வைத்துள்ளதாகவும், தன்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினிஆட்கொணர்வு வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.சுப்பையா, ஆர்.பொங்கியப்பன் ஆகியோர் விசாரித்து வருகின்றனர். விசாரணையின்போது மத்திய அரசை நீதிபதிகள் எதிர்மனுதாரராக தாமாக சேர்த்து, மத்திய அரசின் கருத்தை கேட்டனர்.
சட்டவிரோதம்...
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு வியாழனன்று (பிப்.20) விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.ராதாகிருஷ்ணன், ‘7 பேரையும் விடுதலை செய்வது என்று அமைச்சரவையில் முடிவு செய்துவிட்டால், அதற்கு ஒப்புதல் வழங்குவதை தவிர ஆளுநருக்கு வேறு வழியில்லை. அப்படி இருக்கும்போது, தீர்மானம் இயற்றிய நாள் முதல் ஒவ்வொரு நாளும் நளினி சிறையில் இருப்பது சட்டவிரோதமாகும்’ என்று வாதிட்டார்.
முடிந்தது மாநில கடமை!
தமிழக அரசு சார்பில் ஆஜரான மாநிலதலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன், ‘தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தின் மீது தமிழக ஆளுநர் எந்த ஒரு முடிவையும் எடுக்காத வரை ஆளுநரின் அதிகாரம், செயல்பாடு குறித்து கேள்வி எழுப்ப முடியாது. 7 பேரை விடுதலை செய்யவேண்டும் என்று தீர்மானம் இயற்றி, அந்த பரிந்துரையை அனுப்பியதோடு மாநில அரசின் கடமை முடிந்து விட்டது’ என்று வாதிட்டார். மேலும் அவர், ‘7 பேருக்கு கீழ் நீதிமன்றம்வழங்கிய சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துவிட்டது. எனவே, அவர் சிறையில் இருப்பதை சட்டவிரோதம் என்று கூற முடியாது. ஆளுநரின் முடிவு வரும்வரை நளினி சட்டப்பூர்வமான காவலில் தான் உள்ளார். சட்டவிரோத காவலில் சிறையில்இல்லை. அதனால், இந்த வழக்கை ஆட்கொணர்வு வழக்காக நளினி தொடர முடியாது’ என்று வாதிட்டார்.
மத்திய அரசு நிராகரிப்பு...
மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபால் வாதிடும்போது, ‘மத்திய விசாரணை அமைப்பான சி.பி.ஐ. விசாரித்த இந்த வழக்கில்தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்ய மாநில அரசு முடிவு செய்யும்போது, அதுகுறித்து மத்திய அரசை கலந்து ஆலோசிக்க வேண்டும். இவர்களை விடுதலைசெய்வதற்கு மத்திய அரசின் ஒப்புதல் கண்டிப்பாக வேண்டும். ஆயுள் தண்டனை என்பது ஆயுள்காலம் முழுவதும் அனுபவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெளிவாகக் கூறியுள்ளது. அதன் அடிப்படை யிலேயே நளினி தண்டனை அனுபவித்து வருகிறார். ஜெயலலிதா ஆட்சி காலத்தில் 7 பேர் விடுதலை தொடர்பாக சட்டசபையில் அனைத்து கட்சியினரும் ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தை ஏற்கனவே மத்திய அரசு நிராகரித்துவிட்டது’ என்று கூறினார்.அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘அப்படி என்றால் தமிழக அமைச்சரவை 7 பேரைவிடுதலை செய்வது குறித்து இயற்றிய தீர்மானத்தின் நிலை என்ன? அவற்றின் செல்லும்தன்மை என்ன?’ என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், ‘தற்போது நடைபெறும் அதிமுக அரசின் அமைச்சரவை தீர்மானம் என்பது மத்திய அரசுடன் கலந்து ஆலோசிக்காமல் இயற்றப்பட்டுள்ளது. மத்திய அரசு இந்த தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளாதவரை அது பூஜ்ஜியத்திற்கு சமமானது. அந்த தீர்மானத்துக்கு மதிப்பு இல்லை. ஆளுநரின் முடிவே இறுதியானது. அவரை யாரும் நிர்பந்திக்க முடியாது. இதில் ஆட்கொணர்வு என்பது எழாது. வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று வாதிட்டார்.
ஆட்சி நடத்துவது யார்?
இதையடுத்து நளினி தரப்பு வழக்கறிஞர் எம்.ராதாகிருஷ்ணன், ‘தமிழக அரசை ஆளுநர் நடத்துகிறாரா? அல்லது மத்திய உள்துறை அமைச்சகம் நடத்துகிறதா? என்ற சந்தேகம் எழுத்துள்ளது. மாநில அமைச்சரவைதீர்மானத்திற்கு ஆளுநர் கட்டுப்படவேண்டும்’ என்று வாதிட்டார்.அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், நளினி சட்டவிரோதமாக சிறையில் உள்ளாரா? அல்லது சட்டப்பூர்வமாக சிறையில்உள்ளாரா? என்பதுதான் இந்த வழக்கின் சாராம்சம். எனவே, இந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் எழுத்துப்பூர்வ மான வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட னர். பின்னர், இந்த வழக்கின்தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.