tamilnadu

img

சட்டப்பேரவையில் 50 ஆண்டுகள்... துரைமுருகனுக்கு பேரவை பாராட்டு....

சென்னை:
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு பத்து முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு 50 ஆண்டுகளை பூர்த்தி செய்த நீர்வள அமைச்சரும் அவையின் முன்னவருமான துரைமுருகனுக்கு அனைத்துக் கட்சிகள் சார்பிலும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தமிழக சட்டப்பேரவை மூன்று நாள் விடுமுறைக்குப்பின் திங்களன்று(ஆக.23) காலை 10 மணிக்கு கூடியதும் முதலமைச்சர் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார்.

முதல்வர்
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் 50 ஆண்டு காலச் சட்டமன்றப் பணியினைப் பாராட்டும் வகையில் தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நூறாண்டு வரலாறு கொண்டிருக்கக்கூடிய இந்தச் சட்டப் பேரவைக்கு, அரை நூற்றாண்டுக்கும் முன் வந்தவர்தான் இங்கே அமைச்சராக இருக்கக்கூடிய அமைச்சர் துரைமுருகன்.  50 ஆண்டுகளாக இந்த அவை நடவடிக்கைகளில் பங்கேற்றுக் கொண்டிருக்கக் கூடியவர் அவர்.  இந்த மன்றத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கக்கூடியவர்களில் முக்கிய உறுப்பினராக, மூத்த உறுப்பினராக இருக்கக்கூடியவர்தான் இந்த அவையின் முன்னவராக இருந்து வழிகாட்டிக்கொண்டிருக்கிறார்”என்றார்.1971ஆம் ஆண்டு காட்பாடித் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டு அதே தொகுதியில் 8 முறையும், ராணிப்பேட்டையில் இருந்து  2 முறை வென்றிருக்கிறார். இது இங்கு இருக்கக்கூடிய யாருக்கும் கிடைக்காத ஒரு பெருமை. அதற்காக அவரை நான் மனம் திறந்து பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன் என்றும் முதலமைச்சர் கூறினார்.

இதயங்களை வென்றவர்...
அந்த தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பன்னீர்செல்வம்,“சட்டப்பேரவையில் உள்ள எல்லோரது இதயங்களையும் உள்ளங்களையும் கவர்ந்தவர். 50 ஆண்டு காலம் சட்டமன்ற உறுப்பினராக தொடர்வது அவ்வளவு சுலபமல்ல. அந்த நெடிய வரலாற்றுக்கு சொந்தமான நமது அவை முன்னவர், ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்று தனித்தனியாக பிரித்துப் பார்க்காமல் எப்போதும் எல்லோரிடமும் நகைச்சுவை உணர்வுடன் பேசுவது மட்டுமல்ல சிந்திக்கவும் வைக்கக் கூடிய திறமைசாலி. அதுமட்டுமல்ல, பேரவையில் எப்படி செயல்பட வேண்டும் என்று அமைச்சர்களுக்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இலக்கணமாய் திகழ்ந்து கொண்டு வருகிறார்” என்று பாராட்டினார்.

பேரவைத்தலைவர் அப்பாவு
பேரவைத் தலைவர் மு.அப்பாவு பேசுகையில் “சிறு வயது முதல் திராவிட இயக்கக் கொள்கையை தனது இரு கண்களாக போற்றி பாதுகாத்து வரும் அவர், தன்னை யாருமே குறை சொல்லாத அளவுக்கு கட்சியிலும் ஆட்சியிலும் நடந்து கொண்டுள்ளார் என்றார்.

வழிகாட்டியாய்...
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பேசிய நாகை மாலி,“நமது பேரவை முன்னவர் நகைச்சுவையாக பேசக்கூடியவர். அதுவும் பொருள் பொதிந்ததாக இருக்கும். அப்படியான வல்லமையும் ஆற்றலும் கொண்டவர்.
சமீபத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் தோழர் என். சங்கரய்யாவுக்கு “தகைசால் தமிழர்” விருதை அவரது இல்லத்துக்கு சென்று முதலமைச்சர் வழங்கினார். அவருடன் நீர்பாசனத்துறை அமைச்சரும் வந்திருந்தார். அந்தநேரத்தில்கூட சங்கரய்யாவிடம் உணர்வுபூர்வமாகவும், நகைச்சுவையாகவும் பேசியதை தோழர் சங்கரய்யாவும் சிரித்து மகிழ்ந்தார்” என்றார்.

 காங்கிரஸ் கட்சியின் செல்வபெருந்தகை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இராமச்சந்திரன்,கொங்கு தேச மக்கள் கட்சியின்  ஈஸ்வரன், மனிதநேய மக்கள் கட்சியின் ஜவாஹிருல்லா, தமிழர் வாழ்வுரிமை கட்சியின்  வேல்முருகன், மதிமுக தலைவர் சதன் திருமலைக்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் சிந்தனைச் செல்வன், பாஜகவின் நயினார் நாகேந்திரன், பாமக உறுப்பினர் ஜி.கே.மணி உட்பட பலரும் பாராட்டி பேசினர்.துரைமுருகனுக்கு பாராட்டு தெரிவித்து முதலமைச்சர் முன்மொழிந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

துரைமுருகன்
இதனைத்தொடர்ந்து ஏற்புரையாற்றிய துரைமுருகன், கட்சியையும், ஆட்சியையும் வழி நடத்தி கொண்டிருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த இந்த பாராட்டு தீர்மானத்தில் அனைத்து கட்சித் தலைவர்களும் ஒட்டுமொத்தமாக பாராட்டியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதற்காக நான் என்ன கைமாறு செய்யப்போகிறேன் என்று கண்கலங்கியவாறே உரையை முடித்துக்கொண்டார்.