சென்னை:
மருத்துவப் படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (ஓபிசி) 50 சதவீதம் இடஒதுக்கீடு கேட்டு திராவிடர் கழகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கலி. பூங்குன் றன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், “ஒவ்வொரு கல்வியாண்டும் அந்தந்த மாநிலங்களில் உள்ள மருத்துவ படிப்புகளில் 15 சதவீத இடங்களையும், மருத்துவ மேற்படிப்புகளில் 50 சதவீத இடங்களையும் அகில இந்திய ஒதுக்கீடாக வழங்க வேண்டும்.இந்நிலையில், 2020-ம் கல்வியாண்டுக்கு "நீட்" மதிப் பெண்கள் அடிப்படையில், மருத்துவ மற்றும் பல் மருத்துவ மேற்படிப்புகளுக்கான இட ஒதுக்கீட்டு விவரங்களை மருத்துவ கலந்தாய்வு மையம் வெளியிட்டுள்ளது.
அதில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு என தனியாக எந்தவித இட ஒதுக்கீடும் வழங்கப்படவில்லை. மேலும், கடந்த 2017-ம் ஆண்டு முதல் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை.இது, இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிரானது. எனவே, சட்டவிதிகளின்படி, மருத்துவம் மற்றும் பல் மருத்துவ மேற் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், இதர பிற் படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.இடஒதுக்கீடு வழங்காமல் மருத்துவ மேற்படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு நடத்த தடை விதிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.