tamilnadu

விமானத்தில் வந்த  44 பயணிகள் சிறப்பு முகாமிற்கு அனுப்பி வைப்பு

சென்னை, மார்ச் 18- துபாய், அபுதாபியிலிருந்து புதன்கிழமை அதிகாலை 2 விமானங்கள் சென்னை விமான நிலையத்திற்கு வந்தன. அதில் வந்த பயணிகளுக்கு நடத்திய மருத்துவ பரிசோதனை யில் 5 பெண்கள் உள்ளிட்ட 44 பயணிகளுக்கும் காய்ச்சல், சளி தொல்லை, சுவாசிப்பதில் சிரமம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை விமான நிலையத்திலிருந்து வெளியே அனுப்பாமல், அங்குள்ள ஒரு அறையில் வைத்து மேலும் மருத்துவ சோதனை செய்தனர். பின்னர் அவர்களை 24 மணி நேரம் தீவிரமாக கண்காணிப்பதற்காக  சிறப்பு மருத்துவ முகாமிற்கு அனுப்ப  முடிவு செய்தனர் அதன்படி ஒரு பெண் உள்ளிட்ட 24 பேரை 5 சிறப்பு ஆம்புலன்ஸ் மூலம் பூந்தமல்லியில் உள்ள சிறப்பு மருத்துவ முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 4 பெண்கள் உள்ளிட்ட 20 பேரை தாம்பரம் சானிடோரியத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவ முகாமிற்கு 3 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்கள் 44 பேரும் சென்னை, வேலூர், கடலூர், திருச்சி, சிவகங்கை, ஆந்திரா பகுதிகளைச் சேர்ந்தவர்கள். பிரேசில், ஜெர்மன், பிரான்ஸ், இத்தாலி, ஸ்வீடன், டென்மார்க் நாடுகளில் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் என்பதும், கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக விடுமுறையில் சொந்த நாட்டிற்கு துபாய் வழியாக திரும்பி வந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. பூந்த மல்லி, தாம்பரம் சானிடோரியம்  சிறப்பு மருத்துவ முகாம்களில் 24 மணி நேரம் தீவிர கண்காணிப்பிற்கு பின்பு பாதிப்பு இல்லாத வர்கள் வீடுகளுக்கு அனுப்பப்படுவார்கள். ஆனாலும் அதன்பின்பும் 14 நாட்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள பொது  சுகாதாரத் துறையினரின் தொடர் கண்காணிப்பில் அவர்கள் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.