சென்னை:
சென்னை கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் 377 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டது. மாணவர் சேர்க்கை, சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், புதுமையாக கற்பித்தல் என பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக செயற்பட்டதற்காக டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டது.விருதுகளை வழங்கி பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், 90ஆயிரம் பள்ளிகளில் விரைவில் ஸ்மார்ட் வகுப்பறைகள் ஏற்படுத்தப்படும். அறிவார்ந்த சிந்தனையோடும், கூட்டு முயற்சியோடும் ஆசிரியர்கள் பணிகளை மேற்கொண்டால் ஃபின்லாந்து நாட்டை விட தமிழகம் கல்வியில் முன்னோடியாக திகழும்.ஆசிரியர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை அரசு உணர்ந்திருக்கிறது. தனியார் பள்ளிகள், சரியாக பயிலாத மாணவர்களுக்கு டி.சி. கொடுத்து அனுப்புகின்றன என்றும், அப்படிப்பட்ட மாணவர்களையும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தேர்சி பெற வைக்கிறார்கள் என்றும் அவர் பெருமையோடு குறிப்பிட்டார். முதலமைச்சரிடம் ஒப்புதல் பெற்று, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் விரைவில் மடிக்கணினி வழங்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது என்றும் செங்கோட்டையன் தெரிவித்தார்.