tamilnadu

img

திருக்கோவிலூர் அருகே விபத்தில் 3 மாணவர்கள் பலி: 11 பேர் படுகாயம்

திருக்கோவிலூர், அக்.13- விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே டாட்டா ஏசி வாகனமும், கேஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் பள்ளிக்குழந்தைகள் 3 பேர் பலியாகினர். மேலும் 11 குழந்தைகள் படுகாயங்களுடன் திருக்கோவிலூர் மற்றும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். ரிஷிவந்தியம் தொகுதிக்குட்பட்ட லாலாபேட்டை கிராமத்தில் வசிப்பவர் சந்திரன் (20). இவர் ஞாயிறன்று (அக். 13) தான் புதிதாக வாங்கியுள்ள டாடா ஏசி வாகனத்திற்கு ராவுத்த நல்லூர் கிராமத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் படையலிட சென்றுள்ளார். அப்போது லாலாபேட்டையைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் வாகனத்தில் ஏற்றிச்சென்றுள்ளார். அப்போது திருக்கோவிலூர்-சங்கராபுரம் மாநில நெடுஞ்சாலையில் கடம்பூர் கிராமத்தின்அருகேயுள்ள சாலை வளைவில் செல்லும் போது எதிரே வந்த கேஸ் சிலிண்டர் லாரி டாடா ஏசி வாகனத்தின் மீது மோதியது. இதனால் டாடா ஏசி வாகனம் தூக்கி வீசப்பட்டு உருக்குலைந்தது. இதில் பயணம் செய்த லாலா பேட்டையைச் சேர்ந்த தமிழரசன்(14), மகாலட்சுமி(17), பொன்மனச் செல்வன் (13) ஆகிய 3 மாணவர்களும்  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஷாலினி (9), அய்யனார் (9), சந்தியா (14), தமிழ்ச்செல்வன் (8) பூவரசன் (13),  அண்ணாதுரை (20), பாண்டித்துரை(14),  தனுஷ் (8), தமிழ்ச்செல்வன்(13), சந்திரன் (20)  ராn ஜஷ் ஆகிய 11 மாணவர்கள் பலத்த காயமடைந்தனர்.  இந்நிலையில் இவ்விபத்து குறித்து தகவல் அறிந்த ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திக்கேயன் மாணவர்களின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.  விழுப்புரத்திலிருந்து முகையூர், திருக்கோவிலூர், வாணாபுரம் ஆகிய ஊர்களின் வழியாக சங்கராபுரம் செல்லும் மாநில நெடுஞ்சாலையின் மொத்த தூரம் 85 கிலோ மீட்டருக்கும் உட்பட்டதுதான். ஆனால் நூற்றுக்கும் மேற்பட்ட வளைவுகளுடன் கூடியதாக இச்சாலை அமைந்துள்ளது. அடிக்கடி இச்சாலையில் இருசக்கர வாகனங்கள் விபத்துக்குள்ளாவதும் தொடர்கதையாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்விபத்தால் லாலாபேட்டை கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.