சென்னை:
தமிழ்நாட்டில் புதிதாக 2,200 டீசல் பேருந்துகளும், 500 மின்சார பேருந்துகளும் கொள்முதல் செய்யப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித் துள்ளார்.தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ் துறையின் கொள்கை விளக்க குறிப்பு தாக்கல் செய்த அமைச்சர்,” தமிழ்நாட்டில் சரக்கு, பயணத் தேவைகளுக்காக பயன்படக் கூடிய வாகனங்களும், பொது மக்களின் பயன்பாட்டுக்கான இருசக்கர வாகனங்கள், கார்கள் உள்ளிட்டவை அதிகளவு புழக்கத்தில் உள்ளன. இந்த ஒட்டுமொத்த வாகனங்களின் எண்ணிக்கை 3 கோடியைத் தாண்டியுள்ளது” என்றார்.
ஒவ்வொரு ஆண்டும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும், விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகள் படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது என்றும் தெரிவித்தார்.
பயணிப்போர் எண்ணிக்கை சரிவு
அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் குறைந்தபட்சம் ஆயிரம் மக்கள் தொகை கொண்ட ஒவ் வொரு கிராமங்களுக்கும் பேருந்து வசதியை வழங்குகின்றன. இதன் மூலம் நகர்ப்புறங்களிலுள்ள அனைத்து வாழ்விடங்கள், மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்கள் இணைக்கப்படுகின்றன. அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் மூலமாக 2019-20-ஆம் ஆண்டில் தினமும் சுமார் 1.31 கோடி பயணிகள் பயணம் மேற்கொண்டனர்.கொரோனா நோய்த் தொற்று காரணமாக, கடந்த 2020-21-ஆம் ஆண்டில் நாளொன்றுக்கு சராசரியாக 70 லட்சம் பேர் மட்டுமே பயணம் செய்தனர். இந்த எண்ணிக்கை 2021-22-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் குறைந்து பின்னர் அதிகரித்துள்ளது. அதாவது நிகழ் நிதியாண்டில் ஜூலை வரையிலும் 76 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர் எனவும் அமைச்சர் கூறினார்.
மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பிறகு பதிலளித்து பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன்,” தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அனைத்து பேருந்துகளிலும் திருவள்ளூர் படமும் ஜி.யு.போப் உரையும் விளக்கமும் எழுதும் பணி முடிவு பெற்றது என்றார்.போக்குவரத்து கழகம் சார்பில் நடத்தப் பட்ட பொறியியல் கல்லூரி அரசின் கட்டுப்பாட்டுக்கு கொண்டு சென்றது குறித்து அதிமுக உறுப்பினர் நத்தம் விஸ்வநாதன் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கையில், போக்குவரத்துத் துறையின் கட்டுப் பாட்டில் இயங்கி வந்த மருத்துவக் கல்லூரியை கடந்த 2018 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தான் மக்கள் நல்வாழ்வுத்துறை க்கு மாற்ற அரசாணை வெளியிடப்பட்டது. அதே நிலைதான் பொறியியல் கல்லூரியிலும் தொடர்கிறது இதை ஏதோ திமுக ஆட்சியில் நடந்த மாற்றம் என்பதைப் போல் ஒரு தோற்றத்தை உருவாக்கியது தவறு என்றும் போக்குவரத்து தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு 35 விழுக்காடு சேர்க்கை இடம் ஒதுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
வயது முதிர்ந்த பழைய பேருந்துகளுக்குப் பதிலாக, புதிதாக 2,213 டீசல் பேருந்துகளும், காற்று மாசினை குறைப்பதற்காக 500 மின்சாரப் பேருந்துகளும் கொள்முதல் செய்யப்படும்.பெட்ரோல்-டீசல் நிலையம்: அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் கூடுதல் வருவாய்க்காக அரசு போக்குவரத்துக் கழகங்களுக்குச் சொந்தமான 10 இடங்களில் பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை நிலையங்கள் அமைக்கப்படும்.அரசுப் போக்குவரத்து நிறுவனங்களின் 12 கட்டடங்களில் சூரியசக்தி மின்னாற்றல் தகடுகள் நிறுவப்படும். அனைத்து அரசுப் போக்குவரத்துக் கழகங்களிலும் காலியாகவுள்ள பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் அறிவித்தார்.
தொடர் நட்டம்!
டீசல் விலை அடிக்கடி உயர்ந்து வருவதாலும்உதிரிபாகங்கள் விலை உயர்வாலும் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் கூடுதல் செலவினம் ஏற்படுகின்றன. கொரோனா பெருந்தொற்று காரணமாக 2019-20 மற்றும் 20 -21 ஆகிய ஆண்டுகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தி அதன் மூலம் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் பெரும் இழப்பை சந்தித் துள்ளன.இந்த பெருந்தொற்று காரணமாக கடந்த 2019-20 ஆண்டு முதல் தற்போது வரை 247 நாட் கள் பேருந்து இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டன இதனால் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் அனைத்தும் பெரும் நட்டத்தை சந்தித்துள்ளதையும் அமைச்சர் குறிப்பிட்டார்.
நெய்வேலியில் விமான நிலையம்
சென்னை விமான நிலைய விரிவாக்கப் பணி, மதுரை, விமான நிலையம், கோவை, திருச்சி, சேலம், தூத்துக்குடி ஆகிய விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கும் நிலம் கையகப்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும்நெய்வேலி விமான நிலையத்தில் விமானத்தை இயக்குவதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் தயாராக உள்ளன. விமான போக்குவரத்துஇயக்குனரகம் உரிமம் எதிர்பார்க்கப்படுகிறது.அது கிடைத்ததும் விமானங்கள் விரைவில் இயக்கப்படும் என்றும் அமைச்சர் கண்ணப்பன் கூறினார்.
உரிமம் புதுப்பிக்க புதிய முறை!
ஆதார் அட்டையை அடையாள ஆவணமாகப் பயன்படுத்தி பொது மக்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு நேரில் வராமலேயே போக்குவரத்து சேவைகளைப் பெறலாம். பழகுநர் உரிமம், ஓட்டுநர் உரிமம் புதுப் பித்தல் மற்றும் ஓட்டுநர் உரிமத்தில் முகவரி மாற் றம் ஆகிய சேவைகள் வழங்குவது நடைமுறைப்படுத்தப்படும் என்றும் புதிய அறிவிப்புகளை அமைச்சர் அறிவித்தார்.
34 லட்சம் மகளிர் இலவச பயணம்
மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் நத்தம் விஸ்வநாதன்,”அனைத்து நகரப் பேருந்துகளிலும் மகளிருக்கு இலவசப் பயணம் என்று அறிவித்துவிட்டு, இப்போது சாதாரண பேருந்துகளில் மட்டும் இலவசப் பயணத்துக்கு அனுமதிக்கப் படுகிறது. குறைந்த கட்டணமாக ரூ.4 உள்ள பேருந்துகளில் மட்டும்தான் பெண்கள் இலவசமாக அனுமதிக்கப்படுகிறார்கள். இந்தப் பேருந்துகளில் ஏறுவதற்கு மகளிர் மணிக் கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது. அதனால் குறிப்பிட்ட நிறுத்தங்களில் நின்று செல்லும் ரூ.5 கட்டணம் உள்ள பேருந்துகளில் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும்” என்றார்.அப்போது அமைச்சர் ராஜகண்ணப்பன் குறுக்கிட்டு பேசுகையில்,” 7,300 பேருந்துகளில் மகளிர் பயணம் செய்கின்றனர். முதலில் 40 சதவீத மகளிர்தான் பயணிப்பார்கள் என்று எதிர்பார்த் தோம். ஆனால், 60 சதவீதம் பயணித்து வருகின்றனர். தினமும் 34.28 லட்சம் மகளிர் பயணிக் கின்றனர்” என்றார்.