தமிழகம் முழுவதும் 55 அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் 24 மணி நேரமும் தடுப்பூசி போடும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், அனைவருக்கும் இரண்டு தவணை தடுப்பூசிகளையும் விரைவாகச் செலுத்தும் வகையில், தடுப்பூசி முகாம்களையும் நடத்தி வருகிறது.
இந்நிலையில், இன்று சென்னை அரசு ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 24 மணிநேரமும் செயல்படும் கொரோனா தடுப்பூசி மையத்தினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து, இன்போசிஸ் நிறுவனம் வழங்கிய ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் இயந்திரத்தையும் அமைச்சர் பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், கோவாக்சின் இரண்டாம் கட்ட தடுப்பூசி பலருக்கும் கிடைக்காத நிலை உள்ளதாகவும் தமிழகத்தில் 4 லட்சம் டோஸ் கோவேக்சின் தடுப்பூசிக்கு உடனடி தேவை உள்ளதாகவும் தெரிவித்தார்.