tamilnadu

img

அரசுப்பள்ளிகளைக் காக்க 1500 கி.மீ. சைக்கிள் பயணம் மாணவர்களுக்கு சிபிஎம் வாழ்த்து

ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை அறிவியல் பூர்வமான கல்வியை வழங்க வேண்டும்; அரசுப் பள்ளிகளை தனியாருக்கு தாரை வார்ப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்; ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்க வேண்டிய கல்வி உதவித் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்; நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்; மாணவர்களுக்கு பஸ் பாஸ், லேப் டாப், மிதிவண்டி, கல்வி உதவித்தொகை ஆகியவற்றை கல்வியாண்டின் துவக்கத்திலேயே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் மே 25ந் தேதி முதல் சென்னை, கடலூர், கோவை, கன்னியாகுமரி ஆகிய 4 முனைகளிலிருந்து புறப்பட்டு தமிழகம் முழுவதும் சைக்கிள் பிரச்சார பயணத்தை மேற்கொண்டு மே 31 அன்று திருச்சியில் சங்கமித்துள்ளது. 

இந்த பயணக்குழுவில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் உற்சாகமாக கலந்து கொண்டுள்ளனர். ஏழை, எளிய மாணவர்களின் கல்வி நலனை பாதுகாப்பதற்காகவும், கல்வி வணிகமயமாவதை தடுப்பதற்கும், அரசுப்பள்ளிகளை பாதுகாத்திடுவதற்காகவும் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மாநிலம் முழுவதும் சைக்கிள் பிரச்சாரம் செய்த இந்திய மாணவர் சங்கத்தினருக்கும், மாணவ - மாணவியருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி பிரச்சாரம் செய்துள்ள இந்திய மாணவர் சங்கத்தின் பிரதிநிதிகளை உடனடியாக அழைத்துப் பேசி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழக அரசை சிபிஐ (எம்) மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.மேலும் தனியார் பள்ளிகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணங்கள் வசூலிப்பதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. எனவே அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமெனவும், கல்வி கட்டண நிர்ணயக்குழுவின் பரிந்துரைகளை கறாராக அமல்படுத்த வேண்டுமெனவும் தமிழக அரசை சிபிஐ (எம்) வலியுறுத்துகிறது.