சென்னை:
பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
கொரோனா நோய் பெருந்தொற்று பரவி வரும் நெருக்கடியான சூழலில், கடந்த மார்ச் மாதம் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுத முடியாத நெருக்கடி ஏற்பட்டது. கொரோனா நோய் தொற்று பரவல் தொடர்ந்து நீடித்து வருகிறது.தமிழ்நாடு அரசு தேர்வு நடத்த பிடிவாதம் காட்டிய நிலையில், எதிர் கட்சிகள் மற்றும் உயர் நீதிமன்றம் தலையிட்டதால் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசால் அறிவிக்கப் பட்டது.இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு கல்வித்துறை வெளியிட்ட தேர்ச்சி பட்டியலில் 10 ஆயிரத்து 742 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்று அறிவிக்கப்பட்டது.முன்னதாக பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதியதில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் 23 ஆயிரத்து 581 பேர் தனித் தேர்வு எழுத பதிவு செய்துள்ளனர். ஆக தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலுமாக 34 ஆயிரத்து 323 மாணவர்கள் தனித் தேர்வு எழுத வேண்டிய நிலையில் உள்ளனர்.பெரும் பகுதி மாணவர்கள் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்று, உயர் கல்விக்கும், தொழில் பயிற்சி பட்டயக் கல்விக்கும் செல்லும் நிலையில் தனித் தேர்வு எழுத பதிவு செய்த மாணவர்களை காத்திருக்க செய்வது நியாயமற்ற நடைமுறையாகும். இதனால் மாணவர்களும், பெற்றோர்களும் மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளனர்.கொரோனா நோய் தொற்று பரவி வரும் அசாதாரண நிலையைக் கருத்தில் கொண்டு, 10 ஆம் வகுப்பு தனித்தேர்வு எழுத பதிவுசெய்திருக்கும் மாணவர்கள் அனைவரையும் தமிழ்நாடு அரசு தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித் திருக்கிறார்.