சென்னை, மே 3-தமிழகத்தில் 14 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி அனல் காற்று வீசியதால் மக்கள் அவதிக்குள்ளாகினர். இனிவரும் நாட்களிலும் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித் துள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் தொடக்கத்திலிருந்தே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. தமிழக கடற்கரை பகுதிகளில் பானி புயல் கரையை கடக்கக் கூடும் என்று சில நாட்களுக்கு முன்பு வானிலை ஆய்வு மையம் அறிவித்தபோது, ஓரளவு மழை வரும், அதனால் வெயிலின் தாக்கம் குறையும் என்று மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், புயல் திசைமாறி ஒடிசா மாநிலம் பூரி அருகே வெள்ளிக்கிழமை (மே 3) கரையை கடந்தது. மழை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பிலிருந்த தமிழகத்துக்கு தற்போது வெயிலின் தாக்கம் தான் அதிகமாக கிடைத்திருக்கிறது. கடந்த 2 தினங்களாக வெயில் பதிவு வழக்கத்தை விட 2 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்திருக்கிறது.அதிலும் மே 2 அன்று தமிழகத்தில் 14 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகி இருக்கிறது. இதில் வேலூர், திருத்தணி யில் 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகியது. திருச்சி, சென்னை, மதுரையில் 105 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகியுள்ளது.வெயிலின் தாக்கம் அதிகரிக்க அதிகரிக்க சென்னை, மதுரை, திருச்சி, வேலூர், திருத் தணி உள்பட முக்கிய நகரங்களில் அனல் காற்று வீசியது. இதனால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.‘மேகக்கூட்டங்கள் அதிகமாக இருப்பதால் நிலக்காற்று மேல்நோக்கிச் செல்ல முடியாமல் மீண்டும் தரைப்பகுதியை அடைகிறது. இதன் காரணமாகத் தான் அனல் காற்று வீசுகிறது’ என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த நிலையில் தமிழகத்தில் இனி வரக்கூடிய நாட்களிலும் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. வெப்பச்சலனம் காரணமாக தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. இனி வரக்கூடிய நாட்களில் தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து தான் காணப்படும் என்று வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.