சென்னை:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத் திட்டப் பணிகளை தமிழ்நாடு முழுவதும் அனைத்து ஊராட்சிகளிலும் துவங்கி தொடர்ந்து வேலை வழங்கிட வலியுறுத்தியும், அனைத்துக் கிராமங்களிலும் நிலவும் கடும் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்கி குடிநீர் வழங்கக் கேட்டும் வரும் ஜுன் 25 அன்று அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் மாநிலம் முழுவதும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் மனு அளிக்கும் போராட்டம் நடத்திட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் புதனன்று மாநில துணைத் தலைவர் பி.சுப்பிரமணி தலைமையில் தாம்பரத்தில் நடைபெற்றது. அகில இந்திய தலைவர் எஸ்.திருநாவுக்கரசு கலந்து கொண்டு மத்திய கவுன்சில் கூட்ட முடிவுகளை விளக்கிப் பேசினார்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
100 நாள் வேலை திட்டம் - நடப்பு நிதியாண்டு
துவங்கி 2 மாதங்கள் முடிந்த பின்பும் மாநிலத்தின் பெரும்பகுதியான ஊராட்சிகளில் இன்னும் வேலை துவங்கி வழங்கப்படாமல் உள்ளது. துவங்கி வழங்கப்படும் ஊராட்சி
களிலும் அற்ப-சொற்பமாக 5 நாட்கள், 10 நாட்கள் என்ற அளவிலேயே வழங்கப்பட்டுள்ளது. மழை இல்லாத காரணத்தினால் விவசாயப் பணிகள் தொடர்ந்து இல்லாமல் போய்விட்ட நிலையில், கிராமப்புற மக்களுக்கு ஓரளவிற்கு வாழ்வாதாரமாக இருக்கும் 100 நாள் வேலைத் திட்டத்தை தொடர்ந்து வழங்குவதன் மூலம் மட்டுமே, வேலையின்றி - வருமானமின்றி வறுமையில் வாடும் மக்களுக்கு உதவியாக இருக்கும்.
ஒரு கோடித் தொழிலாளர்களை ஏமாற்றுவதா?
இதேபோல், நாடாளுமன்ற தேர்தல் நாளன்று (ஏப்ரல் 18), 100 நாள் வேலை தொழிலாளர்களுக்கு ‘விடுப்புடன் கூடிய ஊதியம்’ வழங்கிட ஊரக வளர்ச்சித்துறை இயக்கு
நரால் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் முதல் நாள் (ஏப்ரல் 17) வேலைக்கு வந்தவர்களுக்குத் தான் விடுப்புடன் கூடிய ஊதியம் என சொல்வதன் மூலம் சுமார் ஒரு கோடி வேலை அட்டைப் பெற்றுள்ளவர்களை ஏமாற்றும் நடவடிக்கையாகும். சுழற்சி முறையில் வேலை வழங்கும் அரசு முதல் நாள் வேலைக்கு வந்தவர்களுக்குத்தான் வேலை என்று கூறுவது கண்டனத்திற்குரியதாகும். சுழற்சி முறையில் வேலைதருவதே முதலில் தவறானதாகும். 2016ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போதும் இதுபோல் தமிழகத்தில் உள்ள 100 நாள் வேலைத் தொழிலாளர்களை அரசு ஏமாற்றியது கவனிக்கத்தக்கது.
நீரின்றித் தவிக்கும் கிராமங்கள்
பருவமழையும் - இடைக்காலங்களில் பெய்ய வேண்டிய மழையும் பெய்யாததால் தமிழ்நாட்டின் 25க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் கடும் வறட்சியில் சிக்கியுள்ளன. கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த வறட்சியால் வரலாறு காணாத வகையில் கிராமங்களிலேயே குடிநீர் விற்பனை செய்யும் மிக மோசமான நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், இந்த மோசமான சூழலில் பொது விநியோகத்திட்டத்தில் வழங்கப்படும் அரிசியின் ஒதுக்கீட்டை குறைத்து வழங்குவதாகவும் தெரிய வருகிறது.
ஆகவே, மத்திய- மாநில அரசுகள் 100 நாள் வேலைத்திட்டத்தை அனைத்து ஊராட்சிகளிலும் உடன் துவங்கி தொடர்ந்து வேலை வழங்கிட வேண்டும். ரூ.229 சட்டக்கூலியை முழுமையாக வழங்கிட வேண்டும். விடுப்புடன் கூடிய ஊதியத்தை அனைத்து தொழிலாளர்கள் வங்கிக்கணக்கிலும் வரவாக்கப்பட வேண்டும். திருச்சி மாவட்டம் தொட்டியம் ஊராட்சி ஒன்றியம் - தோளூர் பட்டி ஊராட்சியில் வேலைக்கு சென்று திரும்பும் போது விபத்து ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உயர்
சிகிச்சையும் - முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து நிவாரண உதவியும் உடன் வழங்கிட வேண்டும். அனைத்து கிராமங்களிலும் போர்க்கால அடிப்படையில் உடன் பாது
காக்கப்பட்ட குடிநீர் வழங்கிட வேண்டும். பொதுவிநியோகத்தில் வழங்கப்படும் நிதியின்ஒதுக்கீட்டை குறைக்காமல் வழங்க வேண்டும்.ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதித்துள்ள மத்திய அரசின் முடிவை மாநில அரசு உறுதியுடன் வலியுறுத்தி தடை செய்ய வேண்டும். இவ்வாறு அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசுகள் உடன் இக்கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் வரும் ஜுன் 25 அன்றுதமிழ்நாடு முழுவதும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வேலை - குடிநீர் கேட்டு மனு அளிக்கும் போராட்டம் நடத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில், மாநிலப் பொதுச்செயலாளர் வீ.அமிர்தலிங்கம், பொருளாளர் எஸ்.சங்கர் மற்றும் எஸ்.பூங்கோதை, அ.பழநிசாமி, ஏ.வி.அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.