tamilnadu

img

புதிய கல்விக் கொள்கைக்கு எதிரான நூல் 10 ஆயிரம் பிரதிகள் விநியோகம்!

மத்திய பாஜக அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு அரசியல் கட்சிகள், இந்திய மாணவர் சங்கம், பொதுப் பள்ளிக்கான மாநில மேடை, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் தமிழகம் முழுவதும் பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. கருத்தரங்கம், சிறப்பு மாநாடுகளும் நடத்தப்பட்டு வருகிறது.  இதற்கிடையில், “பறிக்கப்படும் கல்வி உரிமை”என்ற தலைப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சிறிய பிரசுரம் ஒன்று வைகை அச்சகம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நூலின் 10,000 பிரதிகள் பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு ஏற்பாட்டில் தமிழ் நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள் மூலமாக பொது மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டம், பொள்ளாச்சியில், மாணவர் கல்வி உரிமைக்கான கூட்டமைப்பினர், மாணவர்களுக்கும் ஊர் மக்களுக்கும் ஒரே நாளில் 10ஆயிரம் பிரதிகளை விநியோகம்  செய்தனர்.  இந்த நிகழ்வில், கோவை புறநகர் மதிமுக மாவட்டச் செயலாளரும் குகன் மில்ஸ் உரிமையாளருமான செந்தில், விசிக மாவட்டச் செயலாளர் பிரபு, சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் மகாலிங்கம் ஆகியோருடன் சி.பி.ஐ., தி.மு.க., த.பெ.தி.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் முன்னணி தலைவர்களும் பங்கேற்றனர்.  நூலை பெற்றுக் கொண்ட மாணவர்களும், பொது மக்களும் ‘எங்கள் கல்வி உரிமையை யாரும் பறித்துவிட அனுமதிக்க மாட்டோம். உங்களோடு இணைந்து நம் உரிமையை காக்க குரலெழுப்புவோம்’” என்று கூறினர். இந்த நிகழ்வை ஒருங்கிணைந்த மாணவர் கல்வி உரிமைக்கான கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.