tamilnadu

img

தமிழகத்துக்கு 10 கோடி கொரோனா தடுப்பூசிகள் வழங்க வேண்டும்.... மத்திய அமைச்சருக்கு டி.ஆர்.பாலு கடிதம்...

சென்னை:
கொரோனா கொள்ளை நோய்த் தொற்றிலிருந்து தமிழகத்தைக் காத்திட காலதாமதமின்றி 10 கோடி தடுப்பூசிகளை அளித்திட வேண்டும் என மத்திய அமைச்சருக்கு டி. ஆர். பாலு வேண்டுகோள் வைத்துள்ளார்.

இதுகுறித்து டி.ஆர்.பாலு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு  எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:“கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவிவரும் இக்கட்டான நேரத்தில், மத்திய அரசால் தமிழகத்திற்கு வழங்கப்படும் தடுப்பூசிகளின் அளவை உடனடியாக அதிகரிக்க வேண்டுமென தங்களை நேரில் சந்தித்து தமிழக முதல்வர் சார்பில் கேட்டிருந்தேன்.மத்திய அரசால் தமிழகத்திற்கு வழங்கப்பட்ட 91.34 லட்சம் தடுப்பூசிகளில், 72.12 லட்சம் தடுப்பூசி மருந்துகள் ஏற்கெனவே தமிழக மக்களுக்குச் செலுத்தப்பட்டுள்ளன. 18 வயதிற்கும் மேற்பட்ட 3.65 கோடி தமிழக மக்களுக்கு உடனடியாகத் தடுப்பூசி செலுத்தப்பட்டாக வேண்டும். தமிழகத்தில் ஏற்கெனவே 20,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில், நாள் ஒன்றுக்கு 36,000க்கும் அதிகமானோர் நோய்த் தொற்றால்தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். போர்க்கால அடிப்படையில், 24 மணி நேரமும், நோயாளிகளுக்கான படுக்கை வசதிகள், மருந்துகள், ஆக்சிஜன் உபகரணங்கள் போன்றவற்றில் கவனம் செலுத்தி, தேவையான முயற்சிகளைத் தமிழக அரசு எடுத்து வருகிறது . இந்நிலையில் தடுப்பூசி மருந்துகளுக்கான பற்றாக்குறை மட்டும், மிக அதிக அளவில் அதிகரித்து வருகிறது.

கேரளாவிற்கு 88.69 லட்சம் தடுப்பூசிகளும், மத்திய பிரதேசத்திற்கு 1.01 கோடிகள் தடுப்பூசிகளும், ராஜஸ்தானிற்கு 1.61 கோடிகள் தடுப்பூசிகளும், குஜராத்திற்கு 1.62 கோடிகள் தடுப்பூசிகளும்,வழங்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு மிகப்பெருமளவில் கொள்ளை நோய்த் தொற்று நிவாரணத்தில், மத்திய அரசால் புறக்கணிக்கப்பட்டு வருகிறது.மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் நோய்த் தொற்றின் வேகம் குறைந்து வரும் நிலையில்,இப்போதாவது, தமிழகத்திற்கான தடுப்பூசி மருந்துகளின் எண்ணிக்கையை அதிகரித்து வழங்க, மத்திய அரசு வழங்க வேண்டும்.நோய்த் தொற்றின் தாக்கத்தை உடனடியாக கட்டுப்படுத்த, 18 வயதிற்கும் மேற்பட்டோருக்கு, ஒரு மாதத்திற்கு 2.5 கோடி தடுப்பூசி மருந்துகள் வீதம், அடுத்த நான்கு மாதங்களுக்கு, 10 கோடி தடுப்பூசி மருந்துகளை வழங்க, மத்திய அரசு உடனடியாக ஆவன செய்ய வேண்டுமென்று அவரது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.