tamilnadu

img

வேடந்தாங்கலைப் பாதுகாத்திடுக... வருவாய் அலுவலரிடம் வாலிபர் சங்கத்தினர் மனு

செங்கல்பட்டு:
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் சுற்றளவை சுருக்கும் மத்திய, மாநில அரசுகளின் முடிவைக் கைவிட வலியுறுத்தி செவ்வாயன்று (ஜூன் 9) செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலரிடம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மனு அளித்தனர்.மதுராந்தகம் வட்டத் திற்குட்பட்ட வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் 30 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது.

ஆண்டுதோறும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சார்ந்த 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் இங்கு வந்து தங்கி இனப்பெருக்கம் செய்கின்றன. இந்த சரணாலயத்தை சுற்றிப்பார்க்க வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் உட்பட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வருகின்றனர்.இந்த சரணாலயத்தைச் சுற்றி 5 கிலோ மீட்டர் சுற்றளவில் தொழிற்சாலைகள் அமைக்கவும், அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டவும், வீட்டுமனை பிரிவுகள் அமைக்கவும் வனத்துறை தடை விதித்துள்ளது. இந்நிலையில் சரணாலய சுற்றுவட்ட பரப்பளவை 3 கிலோமீட்டராக குறைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்த வருகின்றன.இந்த முடிவை கைவிட வேண்டும் வலியுறுத்தி வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ம.பா.நந்தன், செயலாளர் க.புருசோத்தமன் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலர் பிரியாவிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.அந்த மனுவில், பருவநிலை மாற்றத்தால் பறவைகளின் வரத்து தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்நிலையில் சரணாலயத்தின் பரப்பளவைச் சுருக்குவது இயற்கைக்கு முரணானதாகும். உடனடியாக இம் முயற்சியைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.