சண்டிகர்:
பிரபல பாலிவுட் நடிகரான அனுபம் கெர். பாஜக-வைச் சேர்ந்த இவர், தனது மனைவியும் தன்னைப் போலவே பிரபல நடிகையுமான கிரண் கெர்-ருக்கு பாஜகவில் எம்.பி. சீட் வாங்கியுள்ளார்.
கிரண் கெர் தற்போது சண்டிகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். இதனால், அனுபம் கெர், தனது மனைவி கிரண் கெர்ருக்கு ஆதரவாக சண்டிகர் தொகுதியில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், அனுபம் கெர் 2 நாட்களுக்கு முன்பு கடைவீதியில், ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி வாக்கு சேகரித்துள்ளார்.
அப்போது, ஒரு கடைக்காரர் அனுபம் கெர்ரை தடுத்து நிறுத்தி, “அய்யா உங்களிடம் நான் சில கேள்விகளைக் கேட்க வேண்டும். குறிப்பாக, நீங்கள் 2014ஆம் ஆண்டு தேர்தலின்போது நிறைய வாக்குறுதிகளை அளித்தீர்கள்; அதில் எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றினீர்கள் என்பதை எனக்கு சொல்ல வேண்டும்...” என்று மடக்கியுள்ளார்.
கடைக்காரரின் இந்த திடீர் கேள்வியால் திகைத்துப் போன அனுபம் கெர், ஒரு வார்த்தை கூட கடைக்காரரிடம் பேசாமல், அப்படியே அங்கிருந்து ஜகா வாங்கியுள்ளார். கடைக்காரர் கேள்வி கேட்பதும், அதற்கு பதில் சொல்லாமல் அனுபம் கெர் தப்பித்து ஓடுவதும் தற்போது வீடியோவாக சமூகவலைத்தளங்களில் வெளியாகி, பாஜகவை தலைகுனிய வைத்துள்ளது.