எஸ்பிஐ வங்கி, எம்.சி.எல்.ஆர் விகிதத்தை 5 புள்ளிகள் குறைத்து, கடன்களுக்கான குறைந்தபட்ச வட்டியை 8.5 சதவீதத்தில் இருந்து 8.45 சதவீதமாக குறைத்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி வெளியிடும் ரெப்போ விகிதம் குறைப்பின் பலனை முழுமையாக வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு அளிப்பதில்லை என கருதிய மார்ஜினல் காஸ்ட் ஆப் ஃபண்ட் பேஸ்ட் லெண்டிங் (Marginal cost of fund based lending) எனப்படும் எம்.சி.எல்.ஆர் முறையை கடந்த 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு கொண்டு வந்தது ரிசர்வ் வங்கி.
இந்த எம்.சி.எல்.ஆர் முறை அமல் செய்யப்பட்ட பிறகு பேஸ் ரேட் (Base rate) வாடிக்கையாளர்கள் புதிய முறைக்கு மாறிக்கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டது. எனினும், பேஸ் ரேட் முறையில் இருந்து வாடிக்கையாளர்களை புதிய முறைக்கு மாற்றுவதில் வங்கிகள் அதிகம் ஆர்வம் காட்டுவதில்லை. இந்த பேஸ் ரேட் முறையில் வட்டி விகிதம் அதிகமாக இருப்பது இதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.
இதனால், பேஸ் ரேட் முறையில் கடன் பெற்ற வாடிக்கையாளர்கள் அதிக வட்டி விகிதத்தில் தவணை செலுத்தி வருகின்றனர். இந்த இடைவெளியை குறைக்கும் வகையில், இரண்டு முறைகளும் ஒருங்கிணைக்கப்பட்டால் வட்டி விகிதம் குறையும் என்பதால் வங்கிகள் இதில் ஆர்வம் காட்டுவதில்லை.
இந்நிலையில், எஸ்பிஐ வங்கி எம்.சி.எல்.ஆர் விகிதத்தை 5 புள்ளிகள் குறைத்து, கடன்களுக்கான குறைந்தபட்ச வட்டி விகிதம் ஆண்டுக்கு 8.50 சதவீதத்திலிருந்து 8.45 சதவீதமாக குறைத்துள்ளதாக நேற்று தெரிவித்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில், இது இரண்டாவது முறை வட்டியை குறைத்துள்ளது. இந்த வட்டி விகித முறையால் ரிசர்வ் வங்கி வட்டி விகித மாற்றத்தின் பலனை மக்கள் உடனே பெற முடியும். மேலும், வங்கியில் செலுத்தப்படும் டெபாசிட் தொகையும் அதிகரிக்கும். கடன் தொகைக்கான வட்டி விகிதமும் மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.