tamilnadu

img

இங்கிலாந்து வங்கியின் அடுத்த ஆளுநராக ரகுராம் ராஜன் தேர்வு செய்யப்படுவாரா?

இங்கிலாந்து வங்கியின் ஆளுநர் மார்க் கார்னேக்கு பிறகு, அடுத்த ஆளுநராக இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் தலைவர் ரகுராம் ராஜனை தேர்வு செய்ய உள்ளதாக செய்தி அறிக்கைகள் கூறுகின்றன. 

இருப்பினும், கடந்த ஆண்டு இதற்கு விண்ணப்பிக்க விரும்பவில்லை என்று ரகுராம் ராஜன் தெரிவித்திருந்தார். 

கடந்த ஆண்டு லண்டனில் நடந்த நிகழ்ச்சியின் போது, ”சிகாகோ பல்கலைக் கழகத்தில் ஒரு நல்ல வேலை இருக்கிறது, அதோடு நான் ஒரு கல்வியாளராக இருக்கிறேன், மத்திய வங்கியாளராக அல்ல. நான் இங்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்று செய்தியாளர்களிடம் ரகுராம் ராஜன் கூறியிருந்தார். 

கனடாவைச் சேர்ந்த கார்னே, கடந்த 2013-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி அன்று இங்கிலாந்து வங்கியின் ஆளுநராக பதவி ஏற்றார். இவர் இங்கிலாந்து வங்கியின் முதல் வெளிநாட்டு ஆளுநர் ஆவார். இவர் அடுத்த ஆண்டு ஜனவரி 31-ஆம் தேதி பதவி விலக உள்ளார். இந்நிலையில், இங்கிலாந்து வங்கியின் ஆளுநர் மார்க் கார்னேக்கு பிறகு, அடுத்த ஆளுநராக ரகுராம் ராஜன் பெயரை ஆய்வாளர்கள் பரிந்துரைத்துள்ளர்.

கடந்த 2013-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்தவர் ரகுராம் ராஜன். ஆனால் இவர் தற்போது சிகாகோ பூத் வணிகப் பள்ளியில் பேராசிரியராக இருக்கிறார். அதோடு கடந்த 2003 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணர் மற்றும் ஆராய்ச்சி இயக்குனராகவும் ரகுராம் ராஜன் பொறுப்பு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.