கடந்த 5 ஆண்டு பாஜக ஆட்சியில், வங்கி கடனை செலுத்தாதவர்களின் எண்ணிக்கை 60 சதவீதம் அதிகரித்துள்ளதாக, மக்களவையில் நிர்மலா சீதாராமன் எழுத்து பூர்வமாக தெரிவித்துள்ளார்.
பொதுத் துறை வங்கிகளில் இருந்து பெறப்பட்ட கடன்களை செலுத்தாதவர்களின் எண்ணிக்கை, கடந்த 2014-15 நிதியாண்டில் 5,349 ஆக இருந்தது. இதுவே நடப்பு ஆண்டு மார்ச் மாதத்தில், 8,582 ஆக அதிகரித்துள்ளது. ஆக கடந்த 5 ஆண்டுகளில், கடன் செலுத்தாதவர்களின் எண்ணிக்கை 60 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், ரூ.7,600 கோடி கடன்கள் தொகையை, வங்கிகள் வசூலித்துள்ளதாகவும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் எழுத்து பூர்வமாக மக்களவையில் தெரிவித்துள்ளார்.
இதை அடுத்து, கடன்களை செலுத்தாதவர்களுக்கு எதிராக 8,120 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதே போல சொத்துகளை பிணையாகக் கொடுத்திருக்கும் கடன்களுக்கு SARFAESI சட்டம் மூலம் சொத்துகளை விற்று கடன் தொகையை மீட்கும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும், ரிசர்வ் வங்கி 2,915 பேர் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.