இந்தியாவின் இரு முக்கிய விமான நிலையங்களில், பயணிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
நாட்டின் தலைநகர் டெல்லி மற்றும் வர்த்தகத் தலைநகர் மும்பை ஆகிய இரு நகரங்களிலும் உள்ள முக்கியமான விமான நிலையங்களில், உள்நாட்டு பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டில், 1.8 கோடி சர்வதேச பயணிகளும், 5.2 கோடி உள்நாட்டு பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர். இதுவே 2019ஆம் ஆண்டில் 1.9 கோடி சர்வதேச பயணிகளும், 4.9 கோடி உள்நாட்டு பயணிகளும் இந்த விமான நிலையத்தில் பயணம் மேற்கொண்டுள்ளனர். இங்கு பயணிகளின் எண்ணிக்கை 6 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.
அதே நேரம் மும்பையில் உள்ள சத்திரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில், கடந்த 2018 ஆம் ஆண்டில், 1.4 கோடி சர்வதேச பயணிகளும், 3.50 கோடி உள்நாட்டு பயணிகள் பயணம் மேற்கொண்டனர். இதுவே 2019-ஆம் ஆண்டில், 1.3 கோடி சர்வதேச பயணிகளும், 3.38 கோடி உள்நாட்டு பயணிகளும் பயணம் மேற்கொண்டனர். இங்கு பயணிகளின் எண்ணிக்கை 7 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.
நாட்டில் பொருளாதாரத்தில் மந்தநிலை நீடிப்பதால் வணிகர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும், சுற்றுலாப் பயணிகளும் இவ்விரு விமான நிலையங்களுக்கும் அடிக்கடி வந்து செல்வது குறைந்து இருக்கிறது. எனவே விமானத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறதாக பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.