குருகிராம்:
மத்திய பாஜக அரசின் மோசமான பொருளாதாரக் கொள்கையால் நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலைகளில் உற்பத்தியும் குறைந்துள்ளது. இதனை சரிசெய்வதற்கு மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு உருப்படியான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று பொருளாதார வல்லுநர்களும் அரசியல் கட்சியினரும் குற்றம்சாட்டியுள்ளனர்.இந்நிலையில் கார் விற்பனை குறைந்ததால் 2 நாட்களுக்கு கார் உற்பத்தி தொழிற்சாலைகள் மூடப்படுவதாக மாருதி நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் கார் விற்பனை குறைந்ததால் செப்டம்பர் 7 மற்றும் 9 ஆகிய தேதிகளில் அரியானா மாநிலம் குருகிராம் மானேசரில் உள்ள தொழிற்சாலையில் கார் உற்பத்தி நடைபெறாது என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனம் கடந்த ஆகஸ்ட்மாதத்தில் மட்டும் தனது உற்பத்தி சதவிகிதத்தை 33.99 சதவீதமாகறைத்துள்ளது. கடந்த 2018 ஆகஸ்ட் மாதத்தில் 1 லட்சத்து 68 ஆயிரத்து 725 வாகனங்களை மாருதி சுசுகி உற்பத்தி செய்திருந்தது.ஆனால், 2019 ஆகஸ்ட்டில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 370 வாகனங்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. பயணிகள் ரக வாகனஉற்பத்தியும் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளதாகவே அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மினி மற்றும் காம்பேக்ட் ரக கார்களின் உற்பத்தியும் குறைந்துள்ளது.