புதுதில்லி:
முகேஷ் அம்பானியின் ‘ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம்’ நிறுவனம், தனது ஊழியர்களில் 5 ஆயிரம் பேரின் வேலையைப் பறித்து வீட்டுக்கு அனுப்பியுள்ளது.
‘ரிலையன்ஸ் ஜியோ’ நிறுவனம், தனது செலவினங்களைக் குறைப்பதற்காக, ஒப்பந்த ஊழியர்களை அதிக எண்ணிக்கையிலும், நிரந்தர ஊழியர்களை மிகக் குறைந்த அளவிலும் பராமரிக்க முடிவு செய்துள்ளதாகவும், அதன் அடிப்டையிலேயே இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.வாடிக்கையாளர் தொடர்புத்துறை, வழங்கல்துறை, மனிதவளத்துறை, நிதித்துறை, நிர்வாகம் மற்றும் நெட்வொர்க் ஆகிய பிரிவுகளிலேயே இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆனால், தமது நிறுவனம் ஆட்குறைப்பு எதையும் செய்யவில்லை என்றும், பல ஒப்பந்ததாரர்களுடன் இணைந்து, தாங்கள் பணியாற்றும் நிலையில், அந்த நிறுவனங்கள் நியமித்திருந்த ஊழியர்கள் குறைக்கப்பட்டிருக்கலாம் என்று ஜியோ நிறுவனம் கூறியுள்ளது. வழக்கம்போல அதிகமான வேலை வாய்ப்புக்களை வழங்கும் நிறுவனமாக ஜியோ இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.எனினும், ஜியோ நிறுவனத்தின் நிரந்தர ஊழியர்களே சுமார் 600 பேர் வரை பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பதுதான் வெளியாகி இருக்கும் செய்தியாகும்.