கூகுள் நிறுவனத்தின் மனிதவளத் துறை அதிகாரியான எலீன் நாட்டன், தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
எலீன் நாட்டான் கூகுள் நிறுவனத்தில் கடந்த 2006-ஆம் ஆண்டு பணியாற்ற தொடங்கினார். கடந்த 4 ஆண்டுகளாக கூகுள் நிறுவனத்தின் மனிதவளத் துறை அதிகாரியாக பொறுப்பேற்றார். எலீன் நாட்டன் மனிதவளத் தலைவராக இருந்த காலத்தில், நிறுவனத்தின் ஊழியர்களின் எண்ணிக்கை கணிசமாக வளர்ந்ததுள்ளதாக கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். இந்நிலையில், அவர் தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து எலீன் கூறுகையில், ”நியூயார்க் நகரில் உள்ள எனது குடும்பத்துடன் நேரத்தைச் செலவழிக்க மனிதவள தலைமைப் பொறுப்பிலிருந்து தற்போது விலகுகிறேன். மேலும் நானும் என் கணவரும் ஆறு வருடங்களுக்கு பிறகு குடும்பத்துடன் நெருக்கமாக இருக்கவே இப்படி ஒரு முடிவு எடுத்துள்ளோம். இதனால் நான் நியூயார்க் திரும்ப வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.
முன்னதாக நியாயமற்ற நடைமுறைகளுக்கு எதிராக பேசிய பணியாளர்களை வேலையிலிருந்து தூக்கியதாகக் கூறப்படும் கூகுள், அப்பிரச்னையால் கடந்த ஆண்டில் பல விமர்சனங்களை எதிர்கொண்டது. மேலும் தரவு பாதுகாப்பு கொள்கைகளை மீறியதன் அடிப்படையில் கூகுள் நிறுவனம், கடந்த நவம்பரில் நான்கு ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. இது பின்னர் பெரும் சர்ச்சைக்கு உள்ளாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.