ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சேவை கட்டணங்கள் வரும் டிசம்பர் மாதம் முதல் உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜியோ நிறுவனம் தொடங்கப்பட்ட பிறகு, மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. குறிப்பாக, கடந்த ஜூலை-செப்டம்பர் காலாண்டில், ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்தது. இதை தொடர்ந்து, 3 மாதங்களில் அரசுக்கு செலுத்த வேண்டிய ரூ.50,000 கோடி கடனை இவ்விரு நிறுவனங்களும் செலுத்த வேண்டும் என கடந்த அக்டோபர் 24-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில், இந்த நிறுவனங்களின் நஷ்டத்தை ஈடு செய்யவும், கடன்களை திரும்ப செலுத்த வருவாயை பெருக்கவும், வரும் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் சேவை கட்டணங்களை அதிகரிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ப்ரிபெய்டு, போஸ்ட்பெய்டு சேவைகளின் கட்டணம் எத்தனை சதவீதம் வரை உயரும் என்பது பற்றி இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை. முன்னதாக வோடாபோன் நிறுவனம் இந்திய சந்தையை விட்டு வெளியேற போவதாக தகவல்கள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.