tamilnadu

img

டிசம்பர் மாதம் வரை 21 அத்தியாவசியப் பொருட்களை விலையில்லாமல் வழங்குக...

சென்னை:
கொரோனா ஊரடங்கில் வேலைவாய்ப்புகள் இல்லாத சூழலில் ஏழை எளிய மக்களுக்கு  டிசம்பர் மாதம் வரை 21 அத்தியாவசிய பொருட்கள் கொண்ட தொகுப்பை தமிழக அரசு , மக்களுக்கு விலையில்லாமல் வழங்க வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலக்குழு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாநிலப் பொதுச்செயலாளர் பி.சுகந்தி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

கோவிட் 19 நோய்த்தொற்றால் தமிழகத்தில் மார்ச் மாதம் 24ஆம் தேதி முதல் பொது முடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது. இதுவரை 6 முறை  பொது முடக்கம் நீடிக்கப்பட்டுள்ளது .இப்போது சென்னையைத் தாண்டி மதுரை உள்ளிட்ட பிற மாவட்டங்களிலும் நோய்த்தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது. பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.  ஜூலை  மாதத்தோடு இச்சூழல்  முடிவுக்கு வரும் என்பதற்கு எத்தகைய உத்தரவாதமும் இல்லை.  இந்நிலை  எப்போது வரை தொடரும் என்பது தெரியாது.

தமிழகத்தில் உள்ள முக்கிய தொழில்களான  நூற்பு நெசவு, பட்டாசு, தீப்பெட்டி, மீன்பிடி, கட்டுமானம்,  ஆயத்த ஆடை தயாரிப்பு உள்ளிட்ட முக்கியமான துறைகளில் பணி  முடங்கிப்போய் பல லட்சக்கணக்கான மக்கள் வேலை இழந்து தவித்துக்கொண்டுள்ளனர்.உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய செலவுகளுக்கு மக்கள் வட்டிக்கு கடன் வாங்கி சமாளித்து பெரும் சிரமங்களை  சந்தித்து வருகின்றனர். இதில் கடந்த காலத்தில் கல்வி, மருத்துவம் உள்ளிட்டவைகளுக்காக தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் சுய உதவி குழுக்கள் மூலம் வாங்கிய கடன்களை கட்ட முடியாமல் தவித்து வருகின்றனர் .

இச்சூழலில் தமிழக  உணவுத்துறை அமைச்சர்  ஜூலை 6 அன்று வெளியிட்ட உத்தரவில் ஏப்ரல் ,மே, ஜூன் மாதங்களில்  ரேசன் கடைகளில் கூடுதல் அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை இல்லாமல் வழங்கப்பட்டதைப் போலவே ஜூலை மாதமும் குடும்ப அட்டைகளுக்கு விலையில்லா அரிசி, துவரம் பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை வழங்கப்படும். இதற்கு முன்பு ஜூலை மாதம் பணம் கொடுத்து பொருள்களை பெற்றிருப்பவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் அவர்கள் பணம் செலுத்தாமல் பொருள்களைப் பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளார். அவரது அறிவிப்பால் தமிழக அரசு  ஜூலை மாதம் வரையில் தான் இலவச உணவுப்பொருள்கள் வழங்கும் எனத்தெரிகிறது   ஜூலை மாதத்திற்குப்பின் அம்மக்கள் எப்படி  வருமானம் இன்றி உண்டு உயிர் வாழ முடியும்?

மேலும் வேலை வாய்ப்புகள் இல்லாத இச்சூழலில் ஏழை எளிய மக்கள் இந்த நான்கு உணவுப் பொருட்களை வைத்து மட்டும் எப்படி  உயிர் வாழ முடியும்? இது குறித்து மாநில அரசு மறுபரிசீலனை செய்து வருகின்ற டிசம்பர் மாதம் வரை அரிசி, பருப்பு வகைகள் ,எண்ணெய், சர்க்கரை,  கடுகு ,மிளகு ,சீரகம், சாம்பார் பொடி, உப்பு ,மிளகாய் வத்தல் உள்ளிட்ட 21 அத்தியாவசியப் பொருட்களை கொண்ட தொகுப்பை மக்களுக்கு விலையில்லாமல் வழங்க வேண்டும் என ஜனநாயக மாதர் சங்க மாநிலக்குழு தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது. 

மேலும்  ஏற்கெனவே ரேசன் கார்டு இல்லாதவர்களுக்கு ரேசன் கடைகளில் உணவுப் பொருள்களை வழங்குவதாக உயர்நீதிமன்றத்தில் ஒத்துக்கொண்ட தமிழக அரசு, நீதிமன்றத்தில்  கொடுத்த வாக்குறுதியின்படி ரேசன் கார்டு இல்லாத அனைவருக்கும்  இலவச உணவுப்பொருட்களை வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.