சென்னை
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் வெளிமாநிலம், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. இந்த கட்டுப்பாடுகளில் முதன்மையானது இ - பாஸ் எனப்படும் ஒப்புகை சீட்டு தான். இந்த சீட்டு இருந்தால் மாநிலம் விட்டு மாநிலம் கூட சென்று விடலாம். ஆனால் இந்த இ - பாஸ் சீட்டை பெறுவது அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல. இதற்கென்று அரசு பல்வேறு கட்டுப்பாடுகள், நிபந்தனைகள் வைத்துள்ளதால் பொதுமக்கள் அனைவர்க்கும் இந்த ஒப்புகை சீட்டு கிடைக்காது.
தனிநபர் பயணத்திற்கு எளிதாக கிடைத்துவிடும் என்றாலும், ஒன்றுக்கும் மேற்பட்டோர் செல்லக்கூடிய திருமணம், இறப்பு போன்ற காரணத்திற்கு இ-பாஸ் கிடைப்பது கானல் நீர் தான். இதனால் போலி இ - பாஸ் மற்றும் மையங்கள் அதிகளவில் இயங்கின. எதிர்க்கட்சிகள் இ - பாஸ் முறையில் மாற்றம் கொண்டு வர அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் விடுத்தன.
இந்நிலையில், தவிர்க்க முடியாத காரணத்திற்காக விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இனி இ - பாஸ் கிடைக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆதார் அல்லது ரேஷன் கார்டு, தொலைபேசி எண்கள் போன்ற ஆதாரங்களுடன் விண்ணப்படிக்கும் அனைவருக்கும் உடனடியாக இ - பாஸ் கிடைக்கும். இந்த நடைமுறை ஆகஸ்ட் 17-ஆம் தேதியில் இருந்து தொடங்கும். மேலும் அவசியமில்லாத பயணங்களை தவிர்த்து அரசுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என அறிவிக்கப்பட்டள்ளது.