பாஜக, தனக்கு நாடாளுமன்றத்திலிருக்கின்ற முரட்டுத்தனமானப் பெரும்பான் மையைப் பயன்படுத்திக்கொண்டு, ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ஒழித்துக்கட்ட வேண்டும் என்கிற ஆர்எஸ்எஸ்-இன் நீண்டகாலக் கோரிக்கையை நிறைவேற்றி இருக்கிறது. இது, சங் பரிவாரத்தின் கனவான இந்து ராஷ்ட்ரத்தை நிறுவுவதற்காக எடுத்து வைக்கப்பட்டுள்ள முதல் அடியாகும். ஆர்எஸ்எஸ். 1952இல் தன்னுடைய மத்திய நிர்வாகப் பிரிவு (Kendriya Karyakari Mandal) என்னும் அமைப்பின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீர் குறித்து முதல் தீர்மானத்தை நிறைவேற்றியது. அந்தத் தீர்மானமானது, அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ராணுவ உதவி தொடர்பாக செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தமான பாகிஸ்தான்-அமெரிக்கா திட்டத்தை (Pak-American Pact) கண்டித்தது. மேலும் அந்தத் தீர்மா னத்தில் “காஷ்மீரில் வெளிப்படையான வன்தாக்குதல் தொடர்வதாகவும்” கூறப்பட்டிருந்தது. அதற்கு அடுத்த ஆண்டு, ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அரசியல் அங்கமான பாரதிய ஜன சங்கம், 370ஆவது பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் பிரச்சாரத்தை முடுக்கி விட்டது. பாரதிய ஜன சங்கம், ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்திற்கு விசுவாசியான ஷியாம் பிரசாத் முகர்ஜியால் நிறுவப்பட்டது. அந்த சமயத்தில், முகர்ஜி 1953 மே மாதத்தில் ஜம்மு-காஷ்மீருக்குப் பயணம் செய்தார்.
அப்போது ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்குள் எவரேனும் செல்ல விரும்பினால் மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும். ஆனால் அவ்வாறு அவர் எதையும் பெறாது அரசின் விதிகளை மீறி ஜம்மு-காஷ்மீருக்குச் சென்றார். அங்கு சென்றதுமே அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் சுமார் ஒரு மாதம் சிறையிலிருந்தார். அப்போது ஜூன் மாதத்தில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமுற்றார். 1964இல் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் முடிவுகளைத் தீர்மானித்திடும் உச்சபட்ச அமைப்பான அகில பாரதிய பிரதிநிதி சபா ‘பாரதத்தின் காஷ்மீர் கொள்கை’ என்னும் தலைப்பில் ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. அது “நம்முடைய அரசமைப்புச்சட்டத்தில் காஷ்மீர் மீது தற்காலிக ஷரத்தாக சேர்க்கப்பட்டுள்ள 370ஆவது பிரிவு உடனடியாக நீக்கப்பட வேண்டும். அம்மாநிலம் இதர மாநிலங்களுக்கு இணையாகக் கொண்டுவரப்பட வேண்டும்” என்று கூறியது. ஜம்மு-காஷ்மீர் மாநில அரசாங்கம், பிரிவினையின் போது பாகிஸ்தானுக்குப் புலம்பெயர்ந்து சென்றுள்ள முஸ்லிம்கள் திரும்பி வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தது. அவ்வாறு வருவார்களெனில் அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும் என்றும் ஒரு சட்டத்தை நிறைவேற்றியபின்னர், 1982இல் ஆர்எஸ்எஸ்-இன் கீழ் அகில பாரதிய நிர்வாகப் பிரிவும் இதே கோரிக்கையை மீண்டும் எழுப்பியது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மதவெறி மற்றும் பிரிவினை உணர்வுகளைத் தூண்டிவிட 370ஆவது பிரிவு அம்மாநில அரசாங்கத்தால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு வருவதாகவும், எனவே அப்பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்றும் ஆர்எஸ்எஸ் தொடர்ந்து கூறி வந்தது.
இதே கோரிக்கை ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் பல்வேறு அமைப்புகளாலும் 1984, 1986 மற்றும் 1993 ஆகிய ஆண்டுக ளிலும் திரும்பத்திரும்ப எழுப்பப்பட்டது. 1995இல் ஆர்எஸ்எஸ் முதன்முறையாக, ஜம்மு பிராந்தி யம் தனி சுயாட்சி கவுன்சிலாக அமைக்கப்பட வேண்டும் என்று கோரியது. இதற்கு, இந்தப் பகுதியை மாநில அர சாங்கம் புறக்கணித்துக்கொண்டிருப்பதாகக் காரணம் கூறப்பட்டது. 1996இல் அகில பாரதிய நிர்வாகப் பிரிவு 370ஆவது பிரிவு தற்காலிகமான ஒன்றே என்றும் எனவே அதனை முழுமையாக செயலிழக்கச் செய்திட வேண்டும் என்றும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. 2000இல் மத்தியில் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமை யில் பாஜக அரசாங்கம் அமைந்தபோது, ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டமன்றம் சுயாட்சி கோரி தீர்மானம் நிறைவேற்றி யது. அதைத்தொடர்ந்து, ஆர்எஸ்எஸ் இன் அகில பாரதிய நிர்வாகப் பிரிவு ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டமன்றம் நிறை வேற்றிய தீர்மானத்தைக் கண்டித்து ஒரு தீர்மானம் நிறை வேற்றியது. மேலும் 370ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டி ருந்தால் அம்மாநில அரசுக்கு இந்த அளவிற்குத் துணிவு வந்திருக்காது என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஜம்மு தனி மாநிலக் கோரிக்கை
2002இல் ஆர்எஸ்எஸ் முதன்முறையாக தனி ஜம்மு மாநிலத்திற்கான கோரிக்கையை எழுப்பியது. 2010இல், அகில பாரதிய பிரதிநிதி சபா, 370ஆவது பிரிவு குறித்து மற்றுமொரு தீர்மானம் நிறைவேற்றியது. அதில், “நம்முடைய அரசமைப்புச்சட்டத்தில் தற்காலிகமான மற்றும் நிலைமாற்ற ஷரத்தாகக் கொண்டுவரப்பட்ட 370 ஆவது பிரிவு ரத்து செய்யப்படாததன் காரணமாக, பிரி வினைவாதிகள் மற்றும் பிரிந்துசெல்ல விரும்புகிறவர்களின் கைகளில் ஆயுதமாக இருப்பது தொடர்கிறது,” என்று கூறப்பட்டிருந்தது. ஆனாலும், இந்தப் பிரச்சனை தொடர்பாக இதுதான் கடைசித் தீர்மானமாகும். 2014இல் மோடி தலைமையிலான அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பின்னர், ஆர்எஸ்எஸ் எந்தத் தீர்மானத்தையும் நிறைவேற்றவில்லை. 2019 ஆகஸ்டு 5 அன்று மாநிலங்களவை ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தும், மாநில உரிமையை சிதைத்தும் சட்டமுன்வடிவு கொண்டுவந்து அதை நிறைவேற்றியபோது, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அரசாங்கம் மிகவும் “துணிச்ச லான நடவடிக்கை” எடுத்திருப்பதாகக் கூறி, அரசாங்கத்தை வெகுவாகப் பாராட்டியும், மேலும் இது ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டிற்கும் அவசியம் என்றும் பத்திரிகை செய்தி வெளியிட்டார். மேலும், இந்த நடவடிக்கைக்காக அனைவரும் அரசியல் வேறுபாடுகள் அனைத்தையும் ஒதுக்கிவைத்துவிட்டு இந்த அரசாங்கத்தை ஆதரித்திட வேண்டும் என்றும் புத்திமதி கூறினார். அரசியல் அரங்கில், 370ஆவது பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை, முதன் முதலாக ஜம்முவில் இயங்கும் பிரஜா பரிசத் கட்சியால்தான் எழுப்பப்பட்டது.
இது, ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் ஜம்முவிற்குப் பொறுப்பு வகித்துவந்த பிரேம் நாத் டோக்ரா என்பவரால் இந்து மகாசபையைச் சேர்ந்த பால்ராஜ் மதோக்குடன் இணைந்து நிறுவப்பட்டது. பால்ராஜ் மதோக்கும் சங் பரிவாரத்தின் சித்தாந்தங்களுக்கு உட்பட்டவர்தான். ஜம்முவில் உள்ள இந்துக்களின் பிரதிநிதியாகக் கூறிக்கொண்ட பிரஜா பரிசத் கட்சி, ஷேக் அப்துல்லா அர சாங்கத்தின் கீழ் ஜம்முவில் உள்ள இந்துக்கள் கடும் அட்டூழி யங்களுக்கு ஆட்பட்டார்கள் என்றும், எனவே மத்திய அரசாங்கம் 370ஆவது பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்றும் அப்போதுதான் ஒட்டுமொத்த மாநிலத்தையும் இதர மன்னர் சமஸ்தானங்களை இணைத்ததுபோன்று இந்தியாவுடன் இணைத்திட முடியும் என்றும் கூறிவந்தது. ஷியாம் பிரசாத் முகர்ஜி முதன்முதலாக 1952இல் நாடாளுமன்ற மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் தில்லியிலிருந்து ஒரு பாரதிய ஜன சங்க வேட்பாளராகத் தேர்வுசெய்யப்பட்டு வெற்றிபெற்றபோது, கட்சியின் கோரிக்கை தெளிவாக முன்வைக்கப்பட்டது. ஷியாம் பிரசாத் முகர்ஜி, ஜவஹர்லால் நேருவின் முதல் அமைச்சரவையில் ஓர் அமைச்சராக இருந்திருக்கிறார். எனினும் 370ஆவது பிரிவு உட்பட பல்வேறு பிரச்சனை களில் தத்துவார்த்தரீதியாக வேறுபாடுகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து அமைச்சரவையிலிருந்து விலகிவிட்டார்.
நேரு வுக்கும் ஷேக் அப்துல்லாவுக்கும் அவர்களின் கவனத்தை ஈர்த்து, பத்து கடிதங்கள் எழுதினார். இந்தக் கடிதங்களுக்கு அநேகமாகப் பதிலேதும் இல்லை. ஷியாம் பிரசாத் முகர்ஜி, 1953 ஜனவரி 9 அன்று நேருவுக்கு எழுதிய முதல் கடிதத்தில், பிரஜா பரிசத் தலை மையிலான இயக்கம் கோரிவந்தபடி, ஜம்மு மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். “அடக்குமுறை மக்களின் அடிப்ப டைக் கேள்விகளுக்குப் பதிலாகிவிடாது. இந்தியாவில் பிற பகுதிகளில் வாழும் மக்களுக்குள்ள அரசமைப்புச் சட்டமே ஜம்முவில் வாழும் தங்களுக்கும் வேண்டும் என்று அவர்கள் கோருவது, அவர்களின் இயல்பான உரிமை (inherent right) இல்லையா? காஷ்மீர் பள்ளத்தாக்கில் வாழும் மக்கள் வேறுவிதமாக நினைத்தால், அதற்காக ஜம்மு மக்களும் கஷ்டப்பட வேண்டுமா? ஏனெனில் காஷ்மீரிக ளுக்கு இந்தியாவுடன் முழுமையாக இணைவதில் விருப்ப மில்லை. ஜம்மு மக்கள் தங்கள் போராட்டத்தின்போது எழுப்பிடும், “ஒரே கொடி, ஒரே அரசமைப்புச்சட்டம், ஒரே தலை வர்” – என்பது மிகவும் உயர்ந்த தேசப்பற்று மிக்க மற்றும் உணர்ச்சிகரமான கோஷமாகும். நீங்களோ அல்லது ஷேக் அப்துல்லாவோ இந்தக் கேள்விக்கு சிறையில் அடைத்தல் அல்லது புல்லட்டுகளால் பதில் சொல்ல முடியாது,” என்று அவர் எழுதினார். இவ்வாறு அன்றையதினம் ஷியாம் பிரசாத் முகர்ஜி, “ ஒரே தேசம், ஒரே கொடி, ஒரே அரசமைப்புச்சட்டம், ஒரே தலைவர்” – என்று எழுப்பிய கோஷத்தை அடிப்படையாக வைத்துத்தான் “இந்தத் தேசத்தில் இரண்டு அரசமைப்புச் சட்டங்கள், இரண்டு கொடிகள், இரண்டு தலைவர்கள் ஏன்? அனுமதிக்க மாட்டோம், அனுமதிக்க மாட்டோம்” என்று இன்று பாஜகவினர் கோஷம் எழுப்பிக் கொண்டிருக்கி றார்கள். வாஜ்பாயி ஆட்சிக் காலத்திலும், இதில் தீர்வுகாண்ப தற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் தீர்வு எதுவும் ஏற்படவில்லை.
அப்போது வாஜ்பாயி, “நமக்குப் பெரும்பான்மை இல்லாததால் நம்மால் எதுவும் செய்ய முடியாது,” என்று ஒப்புக்கொண்டார். இப்போது, மோடி அரசாங்கத்திற்கு நாடாளுமன்றத்தில் முரட்டுத்தனமான பெரும்பான்மை இருக்கிறது. ஆயினும் இப்போது அனைவர் மனதிலும் சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கக்கூடிய அம்சம் என்னவென்றால், ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அடிப்படை நிகழ்ச்சிநிரலான, இந்து ராஷ்டி ரத்தை நிறுவிட, மோடி அரசாங்கம் முயற்சித்துக் கொண்டி ருக்கிறதா என்பதாகும். பாஜக தலைவர்கள் எப்போதுமே “மதச்சார்பின்மை” என்கிற வார்த்தை மீதும், இந்திரா காந்தியால் ஒரு திருத்தத் தின்மூலமாக அரசமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்ட வழி யின்மீதும் அவநம்பிக்கை கொண்டவர்கள். இப்போது, நேரு-காந்தி மரபினை சிறிதும் ஈவிரக்கமின்றி இடித்துத்தள்ள மோடி-அமித்ஷா இரட்டையர் மேற் கொண்டிருக்கும் முரட்டுத்தனமான நடவடிக்கைகள், மேலும் இவர்கள் மனதில் என்னவெல்லாம் திட்டமிட்டிருக்கிறார்கள் என்ற கேள்விகளை எழுப்பி இருக்கிறது.
நன்றி: பிரண்ட்லைன்
தமிழில் : ச.வீரமணி