tamilnadu

ஆர்எஸ்எஸ்-சங்பரிவார் நிகழ்ச்சி நிரல் கேரளத்தில் மீண்டும் தகர்ந்தது

கொல்லம், மே 25-சபரிமலை உள்ளிட்ட பிரச்சனையை கிளப்பி வகுப்புவாத பிரிவினையை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் பெறும் ஆர்எஸ்எஸ்-சங்பரிவார் நிகழ்ச்சி நிரல் கேரள மாநிலத்தில் மீண்டும் தகர்ந்தது. ராமஜென்ம பூமி பிரச்சனை, பசுப்பாதுகாப்பு உள்ளிட்ட வகுப்புவாத நிகழ்ச்சி நிரல் வட இந்தியாவில் பாஜகவுக்கு ஆதாயம் பெற்றுத்தந்தது. அந்த பின்னணியில் சபரிமலையில் இளம்பெண்கள் வழிபடுவது தொடர்பான பிரச்சனையை கிளப்பி ஆதாயம் அடைய  கேரளத்தில் பாஜகவும் சங்பரிவாரும் முயற்சி மேற்கொண்டன. ஆனால், கேரளம்  மக்கள் சங்பரிவாரங்களின் இந்த இந்துத்துவ வகுப்புவாத சிந்தாந்தத்தை முற்றாக நிராகரித்தனர். சபரிமலையை முக்கிய பிரச்சார ஆயுதமாக கொண்டு பத்தனம்திட்டையில் போட்டியிட்ட கே.சுரேந்திரனால் மூன்றாம் இடத்தையே பெற முடிந்தது. தீவிர வகுப்புவாத நிலைபாட்டை கொண்டுள்ள கும்மனம் ராஜசேகரனை ஆளுநர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு திருவனந்தபுரத்தில் போட்டியிட வைத்த அதிரடியும் பெரும் ஏமாற்றத் தையே அவர்களுக்கு அளித்துள்ளது. சபரிமலை பிரச்சனையை கிளப்பிமக்களது நம்பிக்கையை கபளீகரம் செய்து ஆறு மக்களவைத் தொகுதிகளை வெல்லப்போவதாக ஆர்எஸ்எஸ் கூறிவந்தது. ஆனால், ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை என்பது மட்டுமல்ல, திருவனந்தபுரத்தில் மட்டுமே கடந்த முறையைப் போல் இரண்டாம் இடத்தை பெற முடிந்தது. ஐந்து மக்களவைத் தொகுதிகளைத் தவிர ஓரிடத்திலும் வாக்குகளில் குறிப்பிடத்தக்க உயர்வை ஏற்படுத்த முடியவில்லை. கண்ணூர், வடகரா தொகுதிகளில் பாஜக ஓட்டுகள் யுடிஎப்புக்கு சென்றுள் ளன. கடந்த மக்களவைத் தேர்தலைவிட கண்ணூரில் பத்தாயிரத்துக்கு அதிகமாகவும், வடகரயில் 3 ஆயிரம் ஓட்டும் மட்டுமே பாஜகவுக்கு அதிகரித்துள்ளது. கண்ணூர், வடகரா, கோழிக்கோடு, எர்ணாகுளம், கொல்லம் தொகுதிகளில் யுடிஎப்புடன் உடன்பாடு செய்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.ராகுல் காந்திக்கு எதிராக வலுவான போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து வயநாட்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் துஷார் வெள்ளாப் பள்ளிக்கு கடந்த முறை பாஜகவுக்கு கிடைத்த ஓட்டுகூட கிடைக்கவில்லை. 2014 மக்களவை தேர்தலில் ஆறு தொகுதிகளில் பாஜக இரண்டாவது இடத்துக்கு வந்திருந்தது. அதிலும் இம்முறை குறிப்பிடும் அளவுக்கு முன்னேற்றம் காண பாஜகவால் முடியவில்லை.