மதுரை பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவர், இன்சூரன்ஸ் தொழிற் சங்க இயக்கத்தின் முன்னோடித் தலைவர் இ.எம்.ஜோசப் ஜூன் 30 (ஞாயிறன்று) மறைவெய்தி விட்டார். அவர் மறைந்த அதே நாள் காலை தீக்கதிரில் “அமெரிக்க-சீன பொருளாதாரம்: ஓர் ஒப்பீடு” என்ற அவரின் கட்டுரையும் வெளி வந்திருந்தது. மரணம் தழுவுகிற வரை அவரது பொது வாழ்வுப் பயணம் இடையறாது தொடர்ந்ததன் அடையாளம் அது. தொழிற்சங்க இயக்க ஆளுமையாய், பொதுவுடமை இயக்கத் தலைவராய், தத்துவ ஆசானாய் அவரது 50 ஆண்டு கால பொது வாழ்க்கை கடைசி மூச்சு வரை தொடர்ந்திருக்கிறது.
பெரியகுளம் முதல் திருவனந்தபுரம் வரை
1960 களின் பிற்பகுதியில் பெரியகுளம் எல்.ஐ.சியில் பணியில் சேர்ந்தவர். 1970 களில் மதுரை காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க இணைச் செயலாளர், 1983 ல் பொதுச் செயலாளர், 1996 ல் தலைவர், 2000 ல் இருந்து 2004 வரை தென்மண்டல துணைத்தலைவர் (தமிழகம், கேரளா, பாண்டிச் சேரி) என அவரின் சங்கப் பணிகள் புதிய புதிய உயரங்களை தொட்டன.
அவரது நான்கு பங்களிப்புகள் முக்கியமானவை
♦ அரசுகளின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு பின்புலமாக உள்ள அரசியலை எளிமையாக உறுப்பினர்கள் மத்தியில் எடுத்துச் சென்றது.
♦ உலகமய சூழலில் பொதுத் துறை பாதுகாப்பு இயக்கத்திற்கான தர்க்கங்களை வலுவாக முன்வைத்தது.
♦ சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை தொழிற்சங்க அரங்கின் நிகழ்ச்சி நிரலில் இணைத்தது.
♦ உழைக்கும் மகளிர் இயக்கத்தை எல்.ஐ.சியில் துவக்கி வளர்த்தெடுத்தது.
இவையெல்லாம் இயக்கத்தின் முடிவுகள்தான். முயற்சிகள்தான். ஆனால் அதை அமலாக்குவதில் இவரின் தனித்துவமும், மெருகேற்றியதும் மற்ற கோட்டங்கள், மண்டலங்களுக்கும் புதிய வெளிச்சத்தை தந்தது.
அரசியல் பின்புலம் கற்றுத் தந்த ஆசான்
இவர் ஊதிய உயர்வு போராட்டம் பற்றி உரையாற்றுவதை கேட்பவர்கள் நான்கு சுவர்களைக் கடந்து விரிந்த வானில் பறக்கிற உணர்வுக்கு ஆளாவார்கள். மக்களின் வாங்கும் சக்தி, சந்தை, ஆளும் வர்க்கங்களின் தேவைகள், போராட்டத்திற்கான உத்திகளை பொருளாதாரப் பாதை யோடு இணைத்தல்... இப்படி அறிவார்ந்த தளத்திற்கு அழைத்துச் செல்வார். அவரது உரைகள் ஒவ்வொன்றும் நேர்த்தியான தயாரிப்போடு அமையும். ஒன்று புதிய செய்தி இருக்க வேண்டும், அல்லது புதிய கோணத்தில் சொல்ல வேண்டும்; அல்லது புதிய திசை வழியைக் காண்பிக்க வேண்டும்; அதுவே சிறந்த பேச்சின் இலக்கணம் என்பதை அவரது உரைகள் நிரூபிக்கும். இவரது சுற்றறிக்கைகளின் தலைப்புகள் பல காலம் நினைவு கூரப்படும். ஊழியர்களின் விவாதங்களைத் தூண்டுகிற வகையில் அமையும். இவரின் ஆங்கிலப் புலமை அபாரமானது. ஆங்கில உச்சரிப்பில் மிக கவனமாக இருப்பார். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மறைந்த தலைவர் என்.எம்.சுந்தரம் அவர்கள் ஆங்கில மொழியை கையாள்கிற ஆளுமையை பலரும் வியப்பார்கள். ஆனால் அவரே “என்ன புரொபசர் ஜோசப். என்னுடைய ஆங்கிலப் பிரயோகம் சரியா” என்று கேட்பார். நிர்வாகத்திற்கு அவர் எழுதுகிற ஆங்கிலக் கடிதங்களை படிப்பதற்கு டிக்சனரி வேண்டுமென்று சொன்ன உயர் அதிகாரிகள் உண்டு. இன்றும் ஆங்கில நகலை அனுப்பி அவரை சரிபார்க்க சொல்பவர்கள் பட்டியல் நீண்டது. ஆனால் அவர் எளிமையாக விஷயத்தைச் சொல்ல வேண்டுமென்று எடுக்கிற முயற்சிகள் மிக அற்புதமானவை. ஜி.டி.பி கணக்கீடுகளில் ஆட்சியாளர்கள் செய்கிற திருகல்கள் குறித்த கட்டுரைக்கு ‘செத்த பாம்பு வளருமா சார்’ என்ற தலைப்பை வைத்திருந்தார். அவர் ஒரு வேலையை ஏற்றுக் கொண்டால் சொன்ன நேரத்தில் முடிப்பார். நேர மேலாண்மையை அவரிடம் கற்றுக் கொள்ள வேண்டும். அவர் சிறந்த ஆசானாக திகழ்ந்தார். அவரின் வாயிற் கூட்ட உரைகள், சங்கப் பேரவைக் கூட்டங்கள், கருத்தரங்கங் கள், வகுப்புகள் என ஒவ்வொரு வடிவத்திற்கும் அவரது தயாரிப்பு வித்தியாசப்படும். யாருக்காக பேசுகிறோமோ அவர்களுக்கு நமது செய்தி போய்ச் சேர வேண்டும் என்பதில் அவர் காட்டும் அக்கறை அதில் வெளிப்படும்.
உலகமய இருளும், கருத்து தீபமும்
உலகமயத்தை தவிர “வேறு வழியில்லை” (TINA) என்ற வாதத்தை ஆட்சியாளர்கள் முன் வைத்த காலத்தில் இவர் நிறைய தரவுகளோடு அதை எதிர்கொள்வார். தினமணியில் இவரது கட்டுரை ‘வேறு வழி உண்டு’ என்று வெளிவந்தது. அதற்கு பிரபல காங்கிரஸ் தலைவர் ஒருவர் பதில் எழுதினார். உருகுவே சுற்று பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் போது காட் உடன்பாடு பற்றி நிறைய தகவல்களை திரட்டி பேசுவார். 1994 ல் இன்சூரன்ஸ் துறை சீர்திருத்தங்கள் மீதான மல்கோத்ரா அறிக்கை வெளி வந்த சூழ்நிலையில் அதற்கு எதிரான கருத்தரங்கை சங்கத்தின் பொதுச் செயலா ளர் என்ற முறையில் இந்தியாவிலேயே முதன் முதலில் மதுரையில் நடத்தினார். அக் கருத்தரங்க தீர்மானத்தை அவர்தான் வடித்தார். அது ஒரு துறையின் தனியார் மயத்திற்கு எதிரான போராட்டத்தை எவ்வாறு மக்கள் நலன், தேச சுய சார்போடு இணைப்பது; மக்கள் ஆதரவைப் பெறுவது என்ற தெளிவோடு அமைந்திருந்தது. இன்சூரன்ஸ் தனியார்மயத்திற்கு எதிரான முதல் கையெழுத்து இயக்கத்தில் 175000 கையெழுத்துக்களோடு தென் மண்டலத்தில் மதுரைக் கோட்டம் முதலிடம், இரண்டாவது கையெழுத்து இயக்கத்தில் 7.5 லட்சம் கையெ ழுத்தோடு இந்தியாவிலேயே முதலிடம் என்ற சாதனை படைப்பதற்கு இவர் தந்த கருத்துத் தெளிவு ஓர் முக்கிய காரணம். அணுகுண்டு சோதனை நடந்த போதும், இந்திய- அமெரிக்க 123 அணுசக்தி ஒப்பந்தம் வந்த போதும் அது குறித்த அவரது உரையாடல்கள், பகிர்வுகள், உரைகள் பல கேள்விகளுக்கு விடை தருபவையாக இருந்தன. பொருளாதார அறிஞர் பேரா. பிரபாத் பட்நாயக்கின் ஆழமான கட்டுரைகள் அவரது எளிய தமிழில் நம்மோடு உரையாடும். தீக்கதிர் மற்றும் மகளிர் சிந்தனையில் அவரின் தொடர் கட்டுரைகள், “ பண வீக்கம் என்றால் என்ன?” நூல், அண்மையில் அமேசான் கிண்டிலில் வெளியிட்ட இரண்டு நூல்கள், தோழர் என்.எம்.சுந்தரம் நூலின் தமிழாக்கம் என அவரது எழுத்துப் பணி களச் செயல்பாட்டாளர்களுக்கு மிக முக்கியமான ஆயுதங்களாக அமைந்தன. நூற்றுக் கணக்கான வகுப்புகளில் ஆசிரியராக பணி யாற்றியவர். அரசு ஊழியர், ஆசிரியர், மாதர், வாலிபர், மாணவர் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் பொருளா தாரம் குறித்த எளிமையான விளக்கங்களை இவர் வகுப்புகள் தந்தன.
சமூக ஒடுக்குமுறை எதிர்ப்பும் தொழிற்சங்க கடமையே!
.சமூக ஒடுக்குமுறை எதிர்ப்பை தொழிற்சங்கமே முன்னெடுப்பதைப் பற்றிய அவரது எழுத்துக்கள், பகிர்வுகள் காலத்தின் தேவையை நிவர்த்தி செய்தன. மேல வளவு, மந்திக்குளம், கருவனூர் போன்ற இடங்களில் சாதிய ஒடுக்குமுறைகள் ஒடுக்கப்பட்ட மக்களின் உயிர்க ளை, உடமைகளை சூறையாடிய போது நேரடியாக களத்திற்கே சென்று தலையிடுகிற தெளிவை அவரது கண்ணோட்டங்கள் இன்சூரன்ஸ் ஊழியர் இயக்கத்திற்கு தந்தன. 1992 ல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது அன்றைய தினம் மதியமே மதுரை எல்.ஐ.சி கோட்ட அலுவலகம் முன்பாக சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சர்ச்சைகள் வரும் என்று பின் வாங்கக் கூடாது; தார்மீக உணர்வோடு, நியாயங்களை வலுவாக முன்வைப்பதன் மூலமே ஊழியர்களை பிளவு சிந்தனைகளில் இருந்து வென்றெடுக்க முடியும் என்பார். சாதிய ரீதியிலான வெளிப் பாடுகள், சொல்லாடல்கள் ஊழியர் ஒற்றுமையை பாதிக்கும் என்று ஓர் கருத்தியல் போராட்டத்தை நடத்தினார். தென் மாவட்டக் கலவரங்களால் இன்சூரன்ஸ் ஊழியர்களும் உணர்ச்சி வயப்பட்டிருந்த சூழலில், பல ஒடுக்கப்பட்ட சமூகங்களை சார்ந்தோர் காவல் துறையின் எதிர் வழக்குகளில் சிக்கிய போது அந்த ஊழியர்களை பாதுகாக்கிற பணியையும் சங்கம் செய்தது. சிறைச் சாலை களுக்கு செல்வது, சட்ட உதவி செய்வது, ஜாமீனில் வெளிக் கொணர்வது போன்ற பணிகளில் அவர் நேரடியாக ஈடுபட்டார். மதுரை கோட்ட சங்கம் உணர்வுப் பூர்வமான வலிமை யோடு இருப்பதற்கு இத்தகைய பங்களிப்புகள் முக்கிய மானவை
பாலின சமத்துவம்
தோழர் இ.எம்.ஜோசப், மதுரைக் கோட்ட பொது செயலாளராக இருந்த போது முதன் முதலில் சங்கம் மதுரையில் நடத்திய மகளிர் மாநாடுதான் இந்தியாவி லேயே நடைபெற்ற முதல் மகளிர் மாநாடு. எதற்கு பெண்களுக்கு தனி மாநாடு என்ற கேள்வி சங்கத்தின் எல்லா மட்டங்களிலும் இருந்த காலம் அது. மகளிர் தொழிற்சங்க வகுப்பும் முதன் முதலாக மதுரையிலேயே நடத்தப்பட்டது. ஒரு அகில இந்திய முடிவை விரைந்து நிறை வேற்றுவது, கற்பனையோடு முன்னெடுப்பது, அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்த்துவது எப்படி என்பதை அவர் கற்றுத் தந்தார். இதில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மூத்த தலைவர் ஆர். கோவிந்தராஜன் அவரோடு விவாதித்து பல முன்முயற்சிகளை எடுத்தார். பணி ஓய்வுக்கு ப் பின்னரும் தற்போதைய அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் இணை செயலாளர் எம்.கிரிஜா போன்றோரிடம் அக்கறையோடு விவாதித்து ஆலோசனை கள் கூறி வந்தார்.
அரசியல் பணி
துவக்க காலங்களில் சுதந்திரா கட்சியின் ஆதரவாள ராக இருந்தவர். 1970 களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்பால் ஈர்க்கப்பட்டார். கட்சியின் மாநிலச் செயலா ளராக இருந்த மறைந்த முதுபெரும் தலைவர் தோழர் எம்.ஆர்.வெங்கட்ராமன், தலைசிறந்த மார்க்சிய ஆசான்க ளில் ஒருவரான தோழர் கே.முத்தையா ஆகியோரின் அன்பையும் வழிகாட்டலையும் பெற்றவர். கட்சி மாநிலத் தலைமையகம் மதுரையில் இருந்து சென்னைக்கு மாற்றப் பட்ட போது தோழர் எம்.ஆர்.வி, இவரது இல்லத்திற்குச் சென்று விடைபெற்றதை நெகிழ்வோடு பகிர்ந்து கொள்வார். கே. முத்தையா அவர்களிடம் எப்படி உரை நடைத் தமிழை எளிமையாக எழுதுவது என்ற பயிற்சியை பெற்றவர். தீக்கதிரில் 1970, 80 களில் மாலை நேரங்கள், விடுமுறை நாட்களில் பணியாற்றியுள்ளார். பின்னர் கட்சியின் மாநகர் குழு, மாவட்ட குழு, மாவட்ட செயற்குழு என பொறுப்புகளை ஏற்றார். கல்விக் குழுவில் அவரது பங்கு மாநில அளவில் விரிந்தது. தேர்தல் காலங்க ளில் வெளி மாநிலங்களில் இருந்து வரும் ஐ.ஏ.எஸ் பார்வை யாளர்களிடம் இவர் வாதாடுகிற ஆற்றல் பிரமிக்க வைக்கும். மார்க்சிஸ்ட் இதழில் கட்டுரைகள் எழுதியுள்ளார். பிரபாத் பட்நாயக், வெங்கடேஷ் ஆத்ரேயா போன்ற ஆளுமைகளோடு தொடர்ந்து விவாதிப்பார். அரசியல் சர்ச்சைகளில் தொடர்ந்து தனது பங்களிப்பை செய்வார். கணினியில் அவராக தேர்ச்சி பெற்று அயராமல் அவரே கட்டுரைகளை தட்டச்சு செய்து கொண்டார். முக நூலிலும், வாட்ஸ் ஆப்பிலும் நிறைய அரசியல் விவாதங்களை நடத்தினார். மாற்றுக் கருத்து உள்ளவர்களிடம் எப்படி உரையாட வேண்டும் என்பதை அவரிடம் கற்றுக் கொள்ள வேண்டும். எதிர்க் கருத்துக்கள் எதிரிகளை உருவாக்குவதாக அல்லாது அவர்களை கருத்து ரீதியாக வெல்வதும், வெல்லா இயலாவிட்டாலும் நட்பைத் தக்க வைத்து கருத்துப் போரை தொடர்வதுமே முக்கியம் என கருதுவார். நாம் முன்வைக்க கூடிய கருத்துக்கள் நேர்மையாகவும், உண்மையாகவும் இருக்கிறது என்ற பட்சத்தில் என்றாவது ஒரு நாள் வெல்வோம் என்ற நம்பிக்கையோடு செயல்பட வேண்டும் என்பார். கட்சியின் மாநிலக் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினராக உயர்ந்தார். தற்போது தீக்கதிரில் எழுத்துப் பணி ஆற்றி வந்தார். விமர்சனம், சுய விமர்சனம் இரண்டிலும் விருப்பு வெறுப்பற்று இருப்பது என பின்பற்றத்தக்க பண்புகளை கொண்டவர்.
மனித உறவின் அடையாளம்
தொழிற்சங்கம், கட்சி, நட்பு வட்டம் மூன்றிலும் மனித உறவுகளுக்கு சிறந்த சாட்சியமாக திகழ்ந்தார் தோழர் இ.எம்.ஜோசப். சங்க உறுப்பினர்களின் குடும்பத்தினரை பெயர் சொல்லி அழைக்கிற அளவிற்கு தெரிந்து வைத்திருப்பார். அவர் சிறந்த ஆலோசகராக பலருக்கு இருந்திருக்கிறார். அவரின் வார்த்தைகள் செதுக்கப்பட்டவை. யாரையும் புண்படுத்தாது. கடும் கோபத்துடன் வருபவர்கள் கூட அவரிடம் பேசிய சில நிமிடங்களில் சூடு ஆறிப் போவது வழக்கம். குடும்பத்திலும் இணையர், மகள்கள், தம்பிகள், பேரக் குழந்தைகளிடம் அவர் காட்டுகிற வாஞ்சை மிக அற்புதமானது. மூத்தவர்களை மிகவும் மதிப்பார். மாமனா ரின் கடைசிக் காலங்கள் இவரின் இல்லத்தில், இவரது பரா மரிப்பில் இருந்தது. அம்மா மீது மிக மிக பிரியமாக இருப்பார். அம்மா தீக்கதிரை தினமும் வாசிக்கிற முதல் வாசகர். கிறித்தவத்தில் தீவிர ஈடுபாடு கொண்ட அம்மா, மகன் ஜோசப்பின் கம்யூனிச ஈர்ப்பை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டார். “நீ அடிக்கடி வெளியூர் போய் விடுகிறாய். என் இறுதி மூச்சு விடுபடும் வேளையில் என்னோடு இருப்பாயா” என்று அம்மா அடிக்கடி கேட்பார்கள் என்பார். ஆனால் அம்மா மறைந்த நேரத்தில் சென்னை ரயிலில் விழுப்புரம் அருகில் இருந்தார். அவரை இறக்கி அழைத்து வந்தார்கள். பொது வாழ்வின் இழப்புகள் ஈடு செய்ய இயலாதவை. தோழர் ஜோசப்...செவ்வணக்கம். அந்த இனிய முகம், இனிய சொல்... என்று இனி பார்ப்போம். கேட்போம்..!