தமிழகத்தின் நெற்களஞ்சியம், “சோழ நாடு சோறுடைத்து”, தமிழ்நாட்டின் “உணவுக் கோப்பை” என்றெல்லாம் போற்றப்படும் காவிரிப்படுகை பாலைவனமாகிவிடுமோ என்ற அச்சம் அனைவரிடத்திலும் இருந்தது. எனவே காவிரிப்படுகையைபாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை, பாஜக தவிர்த்த அனைவராலும் எழுப்பப்பட்டது. 2019 நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் அதிமுகவும் இந்த வாக்குறுதியை கொடுத்திருந்தது.ஏற்கனவே, காவிரிப் படுகையை பெட்ரோலிய இரசாயன மண்டலமாக அறிவித்துதஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் மத்திய அரசின் ஓ.என்.ஜி.சி. நிறுவனம், ஆயில் இந்தியா லிமிடெட் உள்ளிட்ட அரசு நிறுவனங்களும், வேதாந்தா, ரிலையன்ஸ், ஜிண்டால் உள்ளிட்ட தனியார்நிறுவனங்களும் ஆய்வுப் பணிகளை மேற் கொண்டுள்ளனர். இதை எதிர்த்து பல்வேறுஅமைப்புகள் மற்றும் கட்சிகளின் சார்பில் மக்கள் தொடர் போராட்டங்களைநடத்தினர்.
கிராமசபைக் கூட்டங்கள்...
உலகமயமாக்கல் கொள்கை இந்திய வளங்களை பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு திறந்துவிட்டுள்ளது. நவீன தாராளமய மாக்கல் கொள்கையை தீவிரமாக அமுல்படுத்தும், பாரதிய ஜனதா கட்சி அரசாங்கம் இதற்கு தடையாக உள்ள சட்டங்களையும், விதிகளையும், கொஞ்சமும் கூச்சமின்றி கம்பெனிகளுக்கு சாதகமாக திருத்துகிறது.அதன் ஒருபகுதியாக பூமிக்குள் உள்ள கனிம வளங்களை எடுப்பதற்கான விதிமுறைகளை கம்பெனிகளுக்கு சாதகமாக மத்திய பாஜக அரசு அவ்வப்போது திருத்திக் கொண்டே வந்தது. 2018ம் ஆண்டு ஒற்றை அனுமதி பெற்றுக் கொண்டு பூமிக்குள் கிடைக்கும் கனிமங்கள் எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என்று அனுமதி கொடுத்தது அரசு. கடைசியாக தடையாக இருந்தது, சுற்றுசூழல் அனுமதி பெற வேண்டும்; பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்த வேண்டுமென்பது. கருத்துக்கேட்பு கூட்டங்களில் மக்கள் ஒருமித்த குரலில் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தாலும், சுற்றுசூழல் அனுமதி பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டதாலும் அந்த விதியை திருத்தி இவையிரண்டுமே அவசியமில்லை என்று மத்திய அரசு மாற்றியது. மத்திய அரசின் இத்தகைய அணுகுமுறைகள் விவசாயிகளிடம் கடுங்கோபத்தை ஏற்படுத்தியது. கிராம சபை கூட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தீர்மானங்கள் போடப்பட்டன.
மனிதகுலம் தோன்றிய காலத்திலிருந்து உணவுக்கான தேடல் துவங்கி உணவு உத்தரவாதம், உணவுப்பாதுகாப்புக்கான போராட்டம் உலகம் முழுவதும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுள்ளது. “இவ்வளவு கஷ்டப்படறது எதுக்கு! இந்த ஒரு சாண் வயிற்றுக்காக” என்று எளிய மக்கள் சொல்வதை எங்கும் கேட்க முடியும். தமிழகத்தின் உணவு தானிய உற்பத்தியில் காவிரிப் படுகை பகுதிகளில் மூன்றில் ஒரு பங்காகும். எனவே, மக்களின் வயிற்றிலடிக்கும் மத்திய - மாநில அரசுகளின் இந்த திட்டம் முற்றாக தடுக்கப்பட வேண்டும் என்பது காவிரிப் படுகை பகுதி மக்களின் ஏகோபித்த குரலாகும். இதை உணர்ந்துதான், “காலங்கடந்த ஞானோதயம்” என்றாலும் தமிழக முதலமைச்சர் காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என்றும், அதற்குரிய சட்டம் இயற்றப்படும் என்றும் அறிவித்துள்ளார். இது செயல் வடிவம் பெற்று நடைமுறைக்கு வரவேண்டுமென்று ஒட்டுமெத்த தமிழகமும் விரும்புகிறது. காலந்தாழ்த்தாமல் இதற்குரிய சட்டம் இயற்றப்பட வேண்டும். இதன் மூலம் தமிழகத்தின் நெற்களஞ்சியம் நிரந்தரமாக பாதுகாக்கப்படும் நிலையை உருவாக்கிட வேண்டும் என்பதே அனைவரின் எதிர் பார்ப்பும்.
மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது
நிலம், நீர், வேளாண்மை குறித்து மாநில அரசுக்கு அரசியல் சாசனம் அதிகாரம் வழங்கி இருக்கிறது. அந்த அதிகாரங்களை பயன்படுத்தி தமிழ்நாடு சட்டமன்றம் சட்டம் இயற்ற முடியும். ஏற்கனவே, கேரள மாநிலம் 2017ம் ஆண்டு சில மாவட்டங்களை சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அதே போல் உத்தர்கண்ட் மாநிலத்தில் மலைப்பயிர்கள் மற்றும் குறிப்பிட்ட சில விதைகளை பாதுகாக்க சிறப்பு வேளாண் மண்டலம் என்று அறிவித்து நடைமுறையில் இருக்கிறது. ஜப்பான், இலங்கை போன்ற நாடுகளில் இதற்கான சட்டங்கள் இருக்கிறது என்பதை கவனப்படுத்துகிறோம். இந்தியாவில் சிறப்பு பொருளாதார மண்டலம் சட்டம் 2005ல் உருவாக்கப்பட்டு நடைமுறையில் இருக்கிறது. இச்சட்டத்தில் முதலாளிகளுக்கு சாதகமான பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. வரிச்சலுகை, நீர், மின்சாரம், நிலம், இந்திய தொழிலாளர் நல சட்டங்களிலிருந்து விதிவிலக்கு என பல சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
புதிய சட்டம் எப்படி இருக்க வேண்டும்?
டெல்டா மாவட்டங்களில் நெல், கரும்பு, வாழை, தென்னை ஆகியவை பிரதானமான பயிர்களாகும். ஏற்கனவே விவசாயத்தில் இயந்திர பயன்பாடு அதிகரித்து விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலை இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. நாற்று விடுவது முதல் அறுவடை முடிந்து வைக்கோல் வண்டியில் ஏற்றப்படும் வரை அனைத்திற்கும் இயந்திரம் என்றாகிவிட்டது. இதனால், விவசாயத் தொழிலாளர்கள் இடம் பெயர்ந்து வெளி மாநிலங்களுக்கும், நாடுகளுக்கும் சென்று கொண்டுள்ளனர். எனவே, இந்த சட்டத்தில் நிலம் பாதுகாப்பு, பாசன உத்தரவாதம், மின்சார உத்தரவாதம், நீர் நிலைகளை பாதுகாப்பது, பராமரிப்பது, ஆறுகள் வாய்க்கால்களை மேம்படுத்துவது, லாபகரமான விலை, கொள்முதல் உத்தரவாதம், இடுபொருட்கள் மானியம், வேளாண் சார்ந்த தொழிற்சாலைகள், வேளாண் விளை பொருட்களை மதிப்பு கூட்டு பொருட்களாக தயாரித்து ஏற்றுமதிக்கான வாய்ப்பு, இத்தகைய நிறுவனங்களுக்கு வரிச்சலுகை வழங்குவது, இதன் மூலம் அம்மாவட்டங்களைச் சார்ந்தவர்களுக்கு வேலை உத்தரவாதம் போன்ற பரந்து விரிந்த தொலை நோக்கு அம்சங்களை உள்ளடக்கியதாக இச்சட்டம் இருக்க வேண்டும்.எண்ணெய், எரிவாயு ஆய்வுக்கென்று தோண்டப்பட்ட கிணறுகள் மூடப்பட்டு விவசாயம் செய்ய ஏற்ற வகையில் நிலம் திருத்தம் செய்து விவசாயிகளிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். குழாய்கள் அப்புறப்படுத்தப்பட வேண்டும். இயந்திரங்கள் வெளியேற்றப்பட வேண்டும்.
வழக்குகளை திரும்பப் பெறுக!
தங்களது நிலத்தையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்காகவும், தமிழகத்தின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும், 28 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரத்தை பாதுகாக்கவும் தான் மக்கள் போராடினர். எனவே, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்துப் போராடிய, பிரச்சாரம் செய்த ஆயிரக்கணக்கானோர் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை அரசு திரும்பப் பெற வேண்டும். முதலமைச்சர் அறிவிப்பின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட முன்னோடியாக இந்த நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும்.
மத்திய அரசு தடுக்க முடியாது
மத்திய அரசு ஏற்குமா என்றொரு கேள்வி எழுப்பப்படுகிறது. மாநில அரசுக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி மக்கள் நலன் சார்ந்த முடிவுகளை மாநில அரசு எடுப்பதை மத்திய அரசு தடுக்க முடியாது. அதே நேரத்தில், மாநில அரசின் ஒத்துழைப்பில்லாமல் மத்திய அரசால் எந்தவொரு திட்டத்தையும் செயல்படுத்த முடியாது என்பதும் அனைவரும் அறிந்ததே! ஏற்கனவே தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் விவசாய நிலங்களில் கெயில் குழாய் பதிக்கும் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் போராடியதை யொட்டி அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் ஒரு அரசாணையின் மூலம் தடுத்து நிறுத்தியதை நினைவூட்டுகிறோம். இன்றைய தேதிவரை அத்திட்டம் கிடப்பிலேயே போடப்பட்டுள்ளது. போடப்பட்ட குழாய்கள் தோண்டி எடுக்கப்பட்டு நிலம் விவசாயிகளிடம் ஒப்படைக்கப்பட்டது வரலாறு. எனவே, தமிழகத்தின் நெற்களஞ்சியத்தை பாதுகாக்கும் தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு தமிழக மக்கள் துணை நிற்பார்கள். இதற்கு மாறாக அரசு செயல்பட்டால் விவசாயிகள் ஒன்று திரண்டு தங்கள் நிலத்தையும், விவசாயத்தையும் பாதுகாக்கும் போராட்டத்தில் நிச்சயம் வெற்றி பெறுவார்கள்.
பெ.சண்முகம்,
மாநில பொதுச்செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்