நொறுக்குத் தீனி விற்பனையிலும், குளிர்பான விற்பனையிலும் உலகில் கோலோச்சிக் கொண்டிருக்கும் கார்ப்பரேட் நிறுவனமான பெப்சி கம்பெனி இந்தியாவின் ஏழை விவசாயிகள் மீது கோடி ரூபாய் நட்டஈடு கேட்டு வழக்கு தொடுத்திருப்பது மிக குரூரமான நடவடிக்கையாகும். பெப்சி கம்பெனி காப்புரிமை வாங்கியுள்ள உருளைக்கிழங்கை விவசாயிகள் தங்கள் நிலங்களில் பயிரிட்டிருப்பதன் மூலம் அந்தக் கம்பெனிக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுவிட்டதாம்.
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக சுதேசி இயக்கத்தை முன்னெடுத்த நாடு நமது இந்தியா.இந்திய மக்களின் சுயச்சார்பை வலியுறுத்தி அந்நிய பொருட்களை பகிஷ்கரிக்க மகாத்மா காந்தி அவர்கள் விடுத்த அறைகூவலை ஏற்று அந்நிய பொருட்களை எரித்த நாடு நமது இந்தியா. இந்த நடவடிக்கை அந்நிய கம்பெனிகளின் பொருளாதாரத்தை ஆட்டம் கொள்ளச் செய்தது. சுதேசி கப்பலை இயக்கி அந்நிய கப்பல் கம்பெனியை மூழ்கச் செய்தவர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார். இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றத்திற்காக தங்கள் வாழ்நாள் முழுவதையும் சிறையிலேயே கழித்த தியாக சீலர்கள் ஏராளம்! ஏராளம்! இத்தகைய பெருமைபடைத்த இந்தியாவின் விவசாயிகள் மீது அமெரிக்காவைச் சேர்ந்த பெப்சி கம்பெனி திருட்டுக் குற்றம் சுமத்தி இழப்பீடுகேட்டு வழக்கு தொடுத்துள்ளது. சொல்லக் கொதிக்குது நெஞ்சம். நொறுக்குத் தீனி விற்பனையிலும், குளிர்பான விற்பனையிலும் உலகில் கோலோச்சிக் கொண்டிருக்கும் கார்ப்பரேட் நிறுவனமான பெப்சி கம்பெனி இந்தியாவின் ஏழை விவசாயிகள் மீது கோடி ரூபாய் நட்டஈடு கேட்டுவழக்கு தொடுத்திருப்பது மிக குரூரமான நடவடிக்கையாகும். பெப்சி கம்பெனி காப்புரிமை வாங்கியுள்ள உருளைக்கிழங்கை விவசாயிகள் தங்கள் நிலங்களில் பயிரிட்டிருப்பதன் மூலம் அந்தக் கம்பெனிக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுவிட்டதாம். “ஊருக்கு இழைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி” என்றொரு பழமொழி உண்டு. இந்திய விவசாயிகளை பார்த்தால் அமெரிக்க கம்பெனிக்கு அப்படித் தான் தோன்றுகிறது போலும்.
ஏனென்றால் உலக வர்த்தக அமைப்பின் (WTO) கட்டுப்பாட்டின் கீழ் வேளாண்மைத்துறையும் கொண்டு வரப்பட்டது 1993ஆம் ஆண்டு. இதற்கான சட்டம் 1995ஆம்
ஆண்டு வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த காப்புரிமைச் சட்டத்தை காங்கிரஸ் கட்சியும் ஆதரித்தது. இந்த பெப்சி கம்பெனி ‘லேஸ்’ என்ற பெயரில் சிப்ஸ் தயாரிப்பதற்காக FL2027, FC05 என்ற இரண்டு வகையான உருளைக் கிழங்குக்கு காப்புரிமை பெற்றது 2016ஆம் ஆண்டுதான். ஆனால், இந்திய விவசாயிகள் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே உருளைக்கிழங்கை பயிரிட்டுக் கொண்டிருப்பதை உலகமறியும். ஏதோ உருளைக் கிழங்கை கண்டுபிடித்ததே பெப்சி கம்பெனி என்பதைப் போல் காப்புரிமைச்சட்ட காவலர்கள் பலர் கம்பெனிக்கு ஆதரவாக வரிந்து கட்டிக்கொண்டு வாதாடுகிறார்கள். சிப்ஸ் தயாரிப்பதற்கு ஏற்ற வகையில் அதன் வடிவமைப்பை மாற்றியிருக்கிறார்களே தவிர உருளைக்கிழங்கு எப்போதும் உருளைக் கிழங்காகத்தான் இருக்கிறது.
நாடு அந்நியனுக்கு அடிமைப்பட்டிருந்த காலத்தில்,
“ஊரான் ஊரான் தோட்டத்திலே
ஒருத்தன் போட்டான் வெள்ளரிக்கா
காசுக்கு ரெண்டு விற்கச் சொல்லி
காகிதம் போட்டான் வெள்ளைக்காரன்”
என்று விளைவிப்பது நாம் விலை சொல்வது அவனாஎன்ற ஆவேச குரல் நாடுமுழுவதும் எழுந்தது. இப்போது எதை பயிரிட வேண்டும் எதை பயிரிடக்கூடாது என்பதை அமெரிக்க கம்பெனி நமக்கு அறிவுறுத்துகிறது. இல்லையென்றால் வழக்கு, நஷ்ட ஈடு என்று அச்சுறுத்துகிறது.‘‘பயிர்கள் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் உரிமைகள் சட்டம் 2001” அடிப்படையில் தான் இந்த வழக்குதொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த வழக்கே சட்டவிரோதமானது. ஏனென்றால், காப்புரிமை என்பது ஒரு நிறுவனம் அல்லது கம்பெனி தயாரிக்கும் பொருட்களை இன்னொரு கம்பெனி அனுமதியின்றி தயாரிப்பதோ அல்லது விற்பனை செய்வதோ குற்றம். ஆனால் “விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைவித்த பொருட்களைப் பயன்படுத்தவோ, சேமித்து வைக்கவோ அல்லது விற்பனை செய்வதையோ யாரும் தடைவிதிக்க முடியாது என்று பயிர்பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் உரிமைகள் சட்டம் 2001 விதி 39 குறிப்பிடுகிறது.கிராமங்களில் முளைப்பாரி திருவிழா நடப்பதை நாமறிவோம். இதன் நோக்கம், எந்த விவசாயி வீட்டில்உள்ள விதை தரமானதாக இருக்கிறது என்பதை அதன் முளைப்புத் திறனை வைத்து மற்றவர்கள் அறிந்து கொள்வதுதான். ஒரு விவசாயி தன்னிடம் உள்ள தரமான விதைகளை இன்னொரு விவசாயிக்கு கொடுத்து உதவுவதுநமது பண்பாடாகும். ஆனால் அந்நியக் கம்பெனியின் பண்பாடு என்பது தன்னுடையதை வேறு எவரும் பயன்படுத்தவே கூடாது என்பது. பெப்சி கம்பெனியின் இந்த நடவடிக்கை என்பது விவசாயிகளின் பண்பாட்டின் மீதான தாக்குதலாகும்.
நமது நாட்டின் தட்ப வெட்பநிலைக்கேற்ப, நமது நாட்டுமக்களுக்கு தேவையான வேளாண் விளை பொருட்களை உற்பத்தி செய்வது தான் நமது நாட்டு நலனை பாதுகாக்கஉதவும். அந்நியக் கம்பெனிகள் லாபத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு மக்கள் நலனைப் பற்றி கவலைப்படாமல் சந்தைக்கு எது தேவையோ அதை மட்டுமே உற்பத்தி செய்ய வற்புறுத்துகின்றன.இப்போது வழக்குக்கு காரணமான (டுயலள) லேஸ் - ஐஎடுத்துக் கொள்ளுங்கள். கண்ணைப்பறிக்கும் வண்ணத்தில் பாக்கெட்டிற்குள் 25 சதவீதம் சிப்ஸ் 75 சதவீதம் காற்று, என விற்றுக் கொண்டிருக்கிறார்கள். கண்ணைப்பறிக்கும் கவருக்குள் காற்றை அடைத்து விற்றாலும் நம் மக்கள் வாங்குவார்கள் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.இது ஒரு புறமிருக்க, விவசாயிகள் தன்னுடைய நிலத்தில்எதைப் பயிரிட வேண்டுமென்பதை சம்பந்தமில்லாத எவரோ தீர்மானிக்க அனுமதிக்க முடியுமா? ஒப்பந்த சாகுபடி முறை என்பதே, மற்றவர்கள் கேட்பதை பயிரிட்டுக்கொடுப்பதுதான். அதாவது நிலம், நீர், உழைப்பு எல்லாம் விவசாயினுடையது. ஆனால் இந்த பயிரை, இன்ன வடிவமைப்பில், இன்ன விலைக்கு பயிரிட்டு கொடுக்க வேண்டும் என்று கம்பெனி கட்டாயப்படுத்துகிறது. இதன் மூலம் வேளாண் விளை பொருட்களுக்கான சந்தை உத்தரவாதம் என்பதை தவிர விவசாயிகளின் சுயச்சார்பு என்பது முற்றிலும் அழிக்கப்பட்டுவிடுகிறது. பெப்சி கம்பெனி இந்தஅடிப்படையில் தான் உருளைக் கிழங்கை இந்தியாவில் வாங்கி சிப்ஸ் தயாரித்து விற்பனை செய்து கொள்ளை லாபமடித்துக் கொண்டிருக்கிறது. எனவே, நமது நாட்டு நிலம், நீர், விவசாயிகளின் உழைப்பு முழுவதையும் பயன்படுத்தி தொழில் செய்யும் நிறுவனம் நமது நாட்டு விவசாயிகள் மீதே வழக்கு தொடுத்திருப்பது அடாவடித்தனத்தின் உச்சமாகும்.
எனவே, அந்த கம்பெனிக்கு பாடம் புகட்டுகிற வகையில்,பெப்சி கம்பெனியின் தயாரிப்புகளை - லேஸ் உள்ளிட்ட நொறுக்கு தீனிகள், குளிர் பானங்களை - இந்திய மக்கள் வாங்கிப் பயன்படுத்தாமல் புறக்கணிக்க முன்வர வேண்டும். வியாபாரிகளும் தங்கள் கடைகளில் இந்த கம்பெனியின் பொருட்களை விற்பனை செய்ய மாட்டோம் என்று உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம்இந்திய விவசாயிகளின் பக்கம் தான் நாங்கள் நிற்கிறோம்என்பதை வெளிப்படுத்தவும், பெப்சி கம்பெனிக்கு எதிர்ப்பை தெரிவிக்கவும் ஒரு வழியாக அமையும்.பெப்சி கம்பெனி தனது தவறை உணர்ந்து இந்தியவிவசாயிகளின் மீது போட்டுள்ள வழக்கை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். திருட்டுக் குற்றம் சுமத்தியதற்காக இந்திய விவசாயிகளிடம் கம்பெனி மன்னிப்புக்கேட்க வேண்டும். இல்லையேல், இந்திய விவசாயிகளுக்குவிரோதமாகச் செயல்படும் அந்நிய கம்பெனிக்கு இந்தியாவில் அனுமதி இல்லை; நாட்டை விட்டு வெளியேறு என்ற முழக்கம் மூலைமுடுக்கெங்கும் எதிரொலிக்க வேண்டும். உலகம் முழுவதும் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தப் பிரச்சனை குறித்து இந்திய பிரதமர் மோடி அவர்கள் எதுவுமே சொல்லாமல் மௌனமாக இருப்பதுவிவசாயிகள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. துரதிஷ்டவசமாக அவர் இப்போது இந்தியாவில் இருக்கிறார். அதுவும் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் தினந்தோறும் பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால், பெப்சி கம்பெனிக்கு எதிராக முணுமுணுக்கக்கூட தயாராகஇல்லை. அவரின் அந்நிய கார்ப்பரேட் கம்பெனியின் மீதான விசுவாசம் நாம் ஏற்கனவே அறிந்ததுதான். ஆட்சியாளர்கள் விவசாயிகளை காப்பாற்ற முன்வரவில்லை என்றாலும் மக்கள் ஒன்றுபட்டு விவசாயிகளை காப்பாற்றுவார்கள் என்பது திண்ணம்.
விவசாயிகள் மீது அந்நியக் கம்பெனி தொடுத்துள்ள இந்த வழக்கை இப்போது முறியடிக்காவிட்டால் பிறகு இதரபயிர்களை பயிரிடும் விவசாயிகளும் இத்தகைய தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டிவரும். பிறகு காப்புரிமை சட்டத்தை பயன்படுத்தி நாட்டையே காவு கேட்பார்கள்.எனவே, பெப்சி கம்பெனி வழக்கை திரும்பப் பெறுகிற வரைநமது எதிர்ப்பை வலுவாக வெளிப்படுத்தும் வகையில் செயல்படுவோம். விவசாயிகளை காக்க, விவசாயத்தை காக்க, பயிரிடும் உரிமையை பாதுகாக்க அந்நியக் கம்பெனிகளுக்கு எதிராக விவசாயிகளே கிளர்ந்தெழுவீர்.
கட்டுரையாளர் : பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்