பாஜகவின் தேர்தல் அறிக்கை என்பது மற்றுமொரு வெத்துவேட்டு வாக்குறுதி (ஜும்லா) என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் சாடியுள்ளார்.தேர்தல் பிரச்சாரத்தையொட்டி திங்கள் அன்று திருவனந்தபுரம் வந்துள்ள பிருந்தாகாரத், கேரள உழைக்கும்பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசினார். பாஜகவின் தேர்தல்அறிக்கை வெளியாகியிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோதே மேற்கண்டவாறு பதிலளித்தார். மேலும் அப்போது அவர் கூறியதாவது:2014ஆம் ஆண்டிலிருந்து ஆட்சிப் பொறுப்பில் உள்ள ஒரு கட்சி கடந்த ஐந்தாண்டுகளில் தாங்கள் செய்துள்ளசாதனைகள் பற்றி தன்னுடைய தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருக்க வேண்டும். சென்றமுறை அவர்களின் தேர்தல் அறிக்கையில் கூறிய முதல் வாக்குறுதி என்ன?ஆண்டுக்கு இரண்டு கோடிப் பேருக்கு வேலை அளிப்போம்என்பதாகும். ஆனால் அதற்கு நேரெதிராகத்தான் அவர்களுடைய ஆட்சி நடைபெற்றது. குறிப்பாக ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்குப்பின்னர் இருந்த வேலைகளும் பறிபோயின. பல்வேறு மதிப்பீடுகளின்படி 1 கோடியே 10 லட்சம் பேர் வேலையிழந்தார்கள். எனவேதான் இவ்வாறு மக்களின் அடிப்படைப் பிரச்சனைகள் எதற்கும் பதிலளிக்காது பாஜகவும் ஆர்எஸ்எஸ்-உம் ஓடிக்கொண்டிருக்கின்றன.இவற்றுக்குப்பதிலாக போலி தேசியவாதத்திற்குப் பின்னே ஒளிந்து கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளிலிருந்து அவர்களைத் திசைதிருப்பிட முயல்கிறார்கள்.
துணை ராணுவ படையினருக்கு பாதுகாப்பு தேவையில்லையா?
பயங்கரவாதம் குறித்துப் பேசும் மோடி, இவர்களுடைய ஆட்சியில் பயங்கரவாத நிகழ்வுகள் 176 சதவீதம்அதிகரித்தது ஏன் என்பது குறித்தும், பயங்கரவாதத்தின் விளைவாக நம் வீரர்களும் அப்பாவி மக்களும் ஏராளமாக இறந்ததும் ஏன் என்பதற்கும் பதில் சொல்லிட வேண்டும். ஊரி என்னும் ஊரில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்குப்பின்னர் அமைக்கப்பட்ட நாடாளுமன்ற நிலைக்குழு, பயங்கரவாதத்தாக்குதல்கள் அதிகரித்திருப்பதற்கு, உளவு ஸ்தாபனம் மற்றும் பாதுகாப்பு ஸ்தாபனங்களில் உள்ள அடிப்படைப் பிரச்சனைகளே காரணம் என்று சுட்டிக்காட்டி இருக்கிறது. இது தொடர்பாக அவர்கள் அளித்திட்ட பரிந்துரைகள் ஏன் அமல்படுத்தப்படவில்லை? மத்திய துணை ராணுவப் படைப்பிரிவினரின் ரோந்துப் பணிகளுக்கு உரிய பாதுகாப்பு ஏன் அளிக்கப்படவில்லை? மோடி தில்லியைச் சுற்றிப் பயணம் செய்யும்போது அனைத்துச் சாலைகளும் துப்புரவாக்கப்படுகின்றன. பிரதமருக்குப் பாதுகாப்புத் தேவை. ஆனால் மத்திய துணை ராணுவப் படையினருக்குப் பாதுகாப்புத் தேவையில்லையா? துணை ராணுவப் படைப்பிரிவினர் செல்லும் பாதையில் ஆர்டிஎக்ஸ் வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட கார் நிலைகொண்டிருந்தது எப்படி? இவ்வாறு எவரேனும் கேள்வி கேட்டால் அவர் தேசவிரோதி என்று முத்திரை குத்தப்படுகிறார்?
இடதுசாரிகள் அதிகரிக்க...
நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் நாடாளுமன்றத்தில் அதிக அளவில் இடதுசாரிகள் இடம்பெறுவது உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும். கேரளாவிலிருந்து தேர்வு செய்யப்படும் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாட்டின் கொள்கைகளைத் தீர்மானிப்பதில் மக்களின் குரலை வலுவாக எடுத்து வைப்பார்கள் என்பதே கடந்தகால வரலாறு. மக்கள் நலன் சார்ந்தகொள்கைகளை அமல்படுத்திட நாம் உறுதிபூண்டிருக்கிறோம். மக்களிடையே சமத்துவமின்மையை உருவாக்கும்கொள்கைகளுக்கு எதிராகவே நாம் எப்போதும் இருந்து வந்திருக்கிறோம். இக்கொள்கைகளை முதலில் காங்கிரஸ் கட்சி பின்பற்றியது. இப்போது ஆர்எஸ்எஸ்/பாஜக மிகவும் வெறித்தனத்துடன் பின்பற்றி வருகின்றன. அதனால்தான் நாடாளுமன்றத்தில் இடதுசாரிகளின் பலம் வலுவானமுறையில் அதிகரிக்கப்பட வேண்டும் என்று நாம் விரும்புகிறோம்.இவ்வாறு பிருந்தாகாரத் கூறினார். பின்னர் திருவனந்தபுரம் தொகுதியில் பாரசாலா மற்றும் கழக்கூட்டத்தில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டங்களிலும், அட்டிங்கல் தொகுதியில் அட்டிங்கல்லில்நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.
திருவனந்தபுரத்திலிருந்து என்.எஸ்.சஜீத்