அவர் தேசிய தலைவராவதற்கு வெகுகாலம் முன்பே, நவீன சாணக்கியராக கொண்டாடப்படுவதற்கு முன்பே அகமதாபாத் புறநகர் பகுதியிலுள்ள விரிந்து பரந்த சர்ஹேஜ் தொகுதியின் அரசியல் பலசாலியாக அறியப்பட்டிருந்தார். அமித்பாய் என அடிக்கடி குறிப்பிடப்படுகிற அமித்ஷா சார்ஹேஜ் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக 1997 முதல் தோல்வியே காணாமல் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். 2007 இல் ஒப்பீட்டளவில் வலுவான ஒரு வேட்பாளரை, ஷசிகாந்த் பட்டேலை காங்கிரஸ் இந்தத் தொகுதியில் நிறுத்தியது. உடனே உள்துறை அமைச்சராக இருந்த அமித்ஷா தனது அதிகாரத்தை பயன்படுத்தி காவல்துறை மூலம் காங்கிரஸ் வேட்பாளர் மீதான பழைய வழக்குகளை எல்லாம் தூசிதட்டி உயிரூட்டினார். தேர்தல் அலுவலகம் அமைக்க ஷசிகாந்த் பட்டேலுக்கு இடமே கொடுக்கக்கூடாது என ரியல் எஸ்டேட் வியாபாரிகளை எச்சரித்தார்.
"எப்படியும் அமித்ஷாதான் வெற்றிபெறப் போகிறார்; சார்ஹேச் அவரது கோட்டை. ஆனாலும் அனைத்து போட்டிகளையும் கிள்ளி எறிய விரும்புகிறார்" என அகமதாபாத்தைச் சேர்ந்த ஒரு பத்திரிகையாளர் நினைவு கூறுகிறார்.அந்த தேர்தலில் அமித்ஷா 2.35 லட்சம் வாக்குகளில் பட்டேலைத் தோற்கடித்தார்.
மூத்த குஜராத் பத்திரிகையாளர் ராஜிவ்ஷா ஒரு நிகழ்ச்சியை விவரிக்கிறார். அமித்ஷா என்கிற ஆளுமையின் இருண்ட பக்கங்களை அறிந்துகொள்ள அது உதவும். அது 2002 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தின் நடுப்பகுதி. மத வன்முறைகளால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொன்றொழிக்கப்பட்டு ஒரு வாரம் கூட கடந்திருக்காத நேரம். காந்திநகரிலுள்ள முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து வெளியே வந்த அமித்ஷாவை நெருங்கி இணைந்து கொண்டார். தொடர்ந்து பரவும் வன்முறைகளைப்பற்றி கவலை கொண்டவராக அமித்ஷாவிடம் பேசத் தொடங்கினார்.
"சமூகங்களை ஒற்றுமைப்படுத்தி அமைதியை நிலை நாட்ட நீங்கள் ஏன் முயற்சி எடுக்கக்கூடாது; குறைந்த பட்சம் உங்கள் சார்ஹேச் தொகுதியிலாவது" இது ராஜிவ் ஷாவின் கேள்வி.
‘நீங்கள் ஏன் கலவரங்களை பற்றி மிகவும் கவலைப்படுகிறீர்கள்”. இது அமித்ஷாவின் பதில்.
சார்ஹேச் முஸ்லீம் மக்கள் மிகஅதிகமாக வாழும் பகுதி. பெரும்பாலான இடங்கள் சேரிகளை போன்றே அமைந்திருந்தது. கடந்த காலத்தில் சிறு சிறு கலவரங்களின் மூலம் முஸ்லீம்கள் அதிகமாக வாழும் பகுதிக்கும் இந்துக்கள் அதிகம் வாழும் பகுதிக்கும் இடையே ‘எல்லைகள்’ உருவாக்கப்பட்டன. கலவரங்கள் பற்றி நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள் என்ற அமித்ஷாவின் கேள்வி ராஜீவை ஆச்சரியப்பட வைத்தது. ஏனென்றால் அவர் ஒரு மக்கள் பிரதிநிதி. உடனடியாக ராஜீவ் சார்ஹேச் பகுதியில் அவருக்கு ஒரு அடுக்குமாடி குடியிருப்பு இருப்பதாக சொல்லி அதன் காரணமாக தான் கலவரங்கள் பற்றி கவலைப்படுவதாக தெரிவித்தார்.
‘இந்து மற்றும் முஸ்லீம் தலைவர்களை ஒரு மேடைக்கு அழைத்து நீங்கள் பேசினால் நிச்சயமாக அந்த பகுதியில் பதட்டம் இருக்காது.” என்று ராஜீவ் வேண்டுகோள் விடுத்து இருக்கிறார். அதற்கு அமித்ஷா ஒரு சிறு புன்னகையுடன் ‘சார்ஹேச்-ல் எந்த பகுதியில் உங்கள் வீடு அமைந்திருக்கிறது. நமது பகுதியிலா அல்லது அவர்களின் பகுதியிலா” என்று கேட்டிருக்கிறார். கிட்டத்தட்ட மயக்க நிலைக்கு போன ராஜீவ் தனது வீடு இருக்கும் பகுதியை சொல்லியிருக்கிறார். உடனடியாக அமித்ஷா ‘அப்படியென்றால் கவலைப்படாதீர்கள். உங்கள் வீட்டுக்கு எதுவும் ஆகாது. என்ன கலவரம் நடந்தாலும் அவையெல்லாம் எல்லைக்கு அந்த பக்கம்தான் நடக்கும்” . என்று கூறியிருக்கிறார்.
ராஜீவ் இந்த பொறுப்பற்ற பதிலால் திகைத்து போனார். இதோ இவர்தான் எனது சட்டமன்ற உறுப்பினர். வெளிப்படையாக இந்து முஸ்லிம் பிளவுபற்றி வெளிப்படையாக பேசுகிறார். அதுவும் ஒரு பக்கத்தில் கலவரம் நடந்தால் அதுமட்டும் தான் தனக்கு கவலை என்று பேசுகிறார். ஆனாலும் சார்ஹேச் அமித்ஷா ஆதரவாளர்களுக்கு இந்த பதில் திருப்தி அளித்திருக்கும் அவர்களது பாராட்டுக்களை பெற்று இருப்பார். அஹமதாபாத்திலுள்ள குஜராத்தி இந்து மத்தியத்தர வர்க்கம் இந்த இந்து - முஸ்லீம் பிளவு இந்தியா பாகிஸ்தான் எல்லை என்பதைப் போன்று குறிப்பிடுவார்கள். பெரும்பாலான வாழிடங்களில் இரண்டு சமூகங்கள். ஒன்றுக்கு ஒன்று இந்த எல்லையை மதித்து அந்த எல்லையை மீறாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலைமைதான் அமித்ஷாவை ஒரு பக்கம் மட்டும் வன்முறையும், கலவரம் நடந்தால் கவலைப்படும் மனநிலையை உருவாக்கி இருக்கிறது. அரசியல் ரீதியாக சரியான ஒரு தலைவர் சர்ச்சைக்குரிய பிரச்சனைகளை பற்றி கருத்துக்களை தெரிவிக்கும் போது மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பார். ஆனால் அமித்ஷா பொருத்தமட்டில் பெரும்பான்மை இந்து ஆதரவை தனது பெருமையாக வெளிப்படையாக பேசி திரிந்தார்.
நான் ஒரு முறை மதிய உணவுக்காக அமித்ஷாவுடன் அமர்ந்திருந்தேன். நான் நாற்காலியில் அமர்ந்தவுடன் அமித்ஷா என்னை பார்த்து ‘இந்து விரோதிகளின் கம்யூனிஸ்ட் ஆட்கள் எல்லாம் இப்போது நம்மோடு அமர்ந்திருக்கிறார்கள் போல” என்று குறிப்பிட்டார். இப்படி சொல்லகூடாது என்று நான் மறுப்பு தெரிவித்தேன். ஒரு பத்திரிகையாளர் என்ற முறையில் இடதுசாரிகள் மற்றும் வலதுசாரிகளின் அரசியலோடு எனக்கு உடன்பாடு இல்லை. அடுத்த சில நிமிடங்கள் எங்களுக்கு இடையில் மதசார்பின்மை குறித்து காரசாரமாக விவாதங்கள் நடைபெற்றது. அந்த விவாத்தின் இறுதியில் என்னோடு உடன்படாத பார்வையுடன் ‘உங்களை போன்ற மதச்சார்பற்ற ஆட்கள் இந்து தர்மம் பற்றிய புத்தகங்கள் வாசிக்க ஆரம்பிங்கள் ஆங்கில புத்தகங்களை வாசிக்காதீர்கள்” என்று கூறியதோடு மதச்சார்பின்மையை ஏளனம் செய்தார்.
இத்தகைய முரட்டுதனமான சர்ச்சைக்குரிய ஆளுமை 2014 ஜூலையில் பாஜகவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நாடாளுமன்ற தேர்தலில் மிக பெரிய வெற்றியை அந்த கட்சி பெற்ற பிறகு சில மாதங்களுக்குள் இது நடந்தது. இந்த வெற்றியில் மிக முக்கியமான உத்தரபிரதேசத்தில் பாஜகவிற்கு கிடைத்த குறிப்பிடும்படியான சீட்டுகள். அங்கிருந்த 80 சீட்டுக்களில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு 73 சீட்டுக்கள் கிடைத்திருந்தது. உத்தரபிரதேசத்தில் தேர்தல் பொறுப்பாளராக அமித்ஷாதான் இருந்தார். தேர்தல் வெற்றிகளை பெறுவதில் கில்லாடி என்ற பெயர் அவருக்கு கிடைத்தது. ஆனால் அப்பொழுது சட்ட விரோதமான என்கவுண்டர் கொலைகளை நடந்த போது குஜராத் அமைச்சர் என்கிற முறையில் ஆணையிட்டு இருந்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு 3 மாதங்கள் சிறையில் இருந்துவிட்டு பிணையில் தான் வெளியே வந்திருந்தார். ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவில் அமித்ஷா தலைவர் ஆனதை குஜராத்திகள் கட்சியை கைபற்றிவிட்டதாக முனுமுனுப்புகள் இருந்தன். ஆனால் ஒருவரும் இதை வெளிபடையாக பேச தயங்கினார்கள்.
முதன்முறையாக அமித்ஷா மோடியின் வலதுகரமாக நியமிக்கப்பட்டது குறித்து கேள்விப்பட்டபோது எனது எண்ணங்கள் பின்னோக்கி சென்றன. மோடி குஜராத் முதலமைச்சராக இருந்த போது 2012 செப்டம்பரில் அவரை பேட்டி கண்டேன். அதற்கு சில வாரங்களுக்கு முன்பு தான் அமித்ஷாவின் பிணை நிபந்தனைகளை உச்சநீதிமன்றம் தளர்த்தியிருந்தது. அதற்கு முன்பாக அவர் குஜராத்துக்குள் நுழைய இரண்டு வருட காலமாக அனுமதிக்கப்படவில்லை. அப்படி அவர் அனுமதிக்கப்பட்டால் அவருக்கு எதிராக நடக்கும் வழக்கு விசாரணையில் தலையிடுவார் என்பதாலேயே உச்சநீதிமன்றம் குஜராத்துக்குள் நுழைய தடை விதித்திருந்தது. நான் மோடியிடம் பல கேள்விகளை கேட்டேன். அவற்றில் ஒன்று அமித்ஷாவின் உடனடியான அரசியல் எதிர்காலம் குறித்து அப்போது டிசம்பர் 2012ல் குஜராத் தேர்தலுக்கு தேதி குறிக்கப்பட்டிருந்தது. பிணையில் வந்திருக்கும் அமித்ஷாவுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா என்பது குறித்து நிச்சயமற்ற தன்மை இருந்தது. எனவே அமித்ஷா தேர்தலில் நிற்பாரா அவருக்கு எதிரான வழக்குகள் என்னவாகும் என்று நான் மோடியை கேட்டேன். இந்த பேட்டி மோடி பயணம் செய்த ஒரு பஸ்சில் எடுக்கப்பட்டது. நான் அந்த பஸ்சில் தரையில் உட்கார்ந்து கொண்டு மேல்நோக்கி அவரை பார்க்க வேண்டியிருந்தது. இந்த கேள்விதான் கடைசி கேள்வியாக ஆகி போனது. ‘சட்டம் தன் கடமையைச் செய்யும்” என்று இருக்கமாக பதில் சொன்னார்.
அடுத்த நாள் இந்த பேட்டியை ஒளிபரப்ப ஏற்பாடு செய்து கொண்டிருந்த போது முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டார்கள். மோடிதான் பேசினார். ‘அமீத்பாய் மீதான வழக்குகள் குறித்து நான் சொன்ன பகுதியை மட்டும் நீக்கி விடுங்கள்” என்பது தான் அவசர வேண்டுகோளாக இருந்தது. நான் பல ஆண்டுகளாக பல பாஜக தலைவர்களை பேட்டி கண்டிருக்கிறேன். ஆனால் இது தான் முதல் முறையாக ஒருவர் கேமிரா முன்பு சொன்னதை நீக்க கோரியது. எனக்கு தயக்கம் இருந்தாலும் அதை நீக்க ஒப்புக்கொண்டேன். ஏனெனில் ஏற்கனவே எங்களுக்கிடையே இருந்த உறவு மோசமாகி இருந்தது. பின்பு ஒரு முறை குஜராத்தின் அரசியலை நீண்டகாலமாக கவனித்து வரும் ஒருவரிடம் இதை விவரித்த போது மோடி ஏன் இவ்வளவு அக்கறையாக அதை நீக்க சொன்னார் என்பது புரிந்தது. ‘அமித்ஷாவுக்கு மோடி மிகவும் கடமைப்பட்டிருக்கிறார். அமித்ஷா சிறையிலிருந்த போது சம்பந்தப்பட்ட கொலை வழக்கில் மோடியின் பெயரையும் சம்பந்தப்படுத்தி வாக்குமூலம் பெறுவதற்கு சிபிஐ முயற்சித்தது. அமித்ஷா அப்ரூவர் ஆனால் அவரை வழக்குகளிலிருந்து விடுவித்து விடுவதாகவும் சிபிஐ வாக்குறுதி அளித்தது. அமித்ஷா மறுத்து விட்டார். அன்றைய தினத்திலிருந்து மோடி அமித்ஷாவுக்கு கடமைப்பட்டவராக நடந்து கொண்டிருக்கிறார். தற்போது அது பிரிக்க முடியாத ஜோடி. இரண்டு உடம்புகளிலிருக்கும் ஓரே உயிர்.
தமிழாக்கம் :க.கனகராஜ்