tamilnadu

img

அ - என்றால் அம்மாவா? அனுமனா?... மதுக்கூர் இராமலிங்கம்

====மதுக்கூர் இராமலிங்கம்====

மோடி அரசு இரண்டாவது முறை பதவிக்கு வந்தவுடனேயே தீவிரமாக புதிய கல்விக் கொள்கையை நிறைவேற்ற துடிக்கிறது. இந்த வரைவுக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டால் தற்போது மத்திய, மாநில ஒத்திசைவு பட்டியலில் உள்ள கல்விக்கும், மாநில அரசிற்கும் முற்றாக சம்பந்தமில்லாமல் போய் விடக் கூடிய அபாயம் உருவாகி உள்ளது.அதாவது மாநில அரசின் கல்வி உரிமையை நீக்குவதற்கு இந்த வரைவுக் கொள்கை  வகை செய்கிறது. பாடத் திட்டத்தை மத்திய அரசே தயாரித்து மாநில அரசுகள் மீது திணித்து விடும். உத்தரப்பிரதேச மாணவர் என்ன கற்கப் போகிறாரோ அதை தான் மன்னார்குடி மாணவரும் படிக்க வேண்டும். இன்று நமது குழந்தைகள் படிக்கும் அரிச்சுவடி ‘அ’ என்றால் அம்மா என்பதற்கு பதிலாக ‘அ’ என்றால் அனுமன் என்றே நமது  மழலைகளுக்கான பாடத் திட்டம் இருக்கும்.

லோக்கல் ஹீரோ
இக்கல்விக் கொள்கையில் உள்ள பாடத் திட்டத்தை போதிக்கும் ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியத்தில் ஆண்டுதோறும் ஊதிய உயர்வு இருக்காது. ஒவ்வொரு மாதமும் ஆசிரியரின் கற்பித்தல் திறன், தல பெரிய மனிதர்களால் அதாவது ஆர்எஸ்எஸ் பிரகஸ்பதிகளால் பரிசோதிக்கப்படும். வகுப்பறைகளில் சங் பரிவாரைச் சேர்ந்தவர் கண்காணிப்பு இருக்கும். அவரை ஆசிரியர்கள் திருப்திப்படுத்தினால் தான் அந்தமாத ஊதியத்தையே பெற முடியும். வரைவு கொள்கையில் அவர்களுக்கு லோக்கல் ஹீரோ என்ற நாமத்தை சூட்டியிருக்கிறார்கள். இந்த ஆட்கள் வகுப்பறைக்குள் நுழைந்து பாடமும் இந்துத்துவாவையும் போதிப்பார்கள். பள்ளியின் சரி பாதி நேரத்தை அவர்களுக்கு ஒதுக்க வேண்டும். மறுத்தால் வகுப்பாசிரியர் மீது நடவடிக்கை பாயும். 

மொழிச்சுமை
புதிய கல்விக் கொள்கையில் பல சுமைகள் நமது குழந்தைகள் மேல் சுமத்தப்பட இருக்கின்றன. ஒன்று மொழிச்சுமை. ஆறாம் வகுப்பில் தாய்மொழியுடன்  ஆங்கிலத்தையும் மேலும் ஏதாவது ஒரு இந்திய மொழியை கற்க வேண்டும். அவர்களது நோக்கம் சமஸ்கிருத வார்த்தைகள் அதிகம் உள்ள இந்தியை மூன்றாவது மொழியாக படிக்க வேண்டும். அதாவது தேவ பாசை என அவர்கள் கூறும் சமஸ்கிருதத்தை திணிக்க வேண்டும் என்பது தான். 
தமிழை இந்தியாவின் தேசிய மொழி என்பதற்கு பதிலாக லோக்கல் அதாவது வட்டார மொழி என்று தான் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மூன்றாம் வகுப்பில் நமது குழந்தைகளுக்கு முதல் அகில இந்திய தேர்வு. அதில் தேர்ச்சி பெற்றால் தான் அடுத்த வகுப்பு. பின்னர் எட்டாம் வகுப்பில் தேர்வு, பத்தாம் வகுப்பில் ஒரு தேர்வு, 11- ஆம் வகுப்பு. ஒரு தேர்வு, நமது நாளைய குழந்தைகள் கல்லூரியில் கலை அறிவியல் பிரிவு பாடம் பயில வேண்டுமென்றாலும் அதற்கும் அகில இந்திய தேர்வு எழுத வேண்டும். இதை தவிர்த்து செமஸ்டர் பருவத் தேர்வுகளையும் எழுத வேண்டும்.

குழந்தைகளை விரட்டும் கொள்கை
15 வயதில் ஒரு குழந்தை சராசரியாக 60 தேர்வுகள் எழுத வேண்டும் என ஒரு கணக்கீடு கூறுகிறது. பிஜேபியின் புதிய கல்விக் கொள்கை பள்ளிக்கூடங்களுக்கு இந்திய குழந்தைகளை ஈர்ப்பதற்கான கொள்கையல்ல. நமது குழந்தைகளை பள்ளிக்கூடத்திற்கு வராமல் பார்த்துக் கொள்ளும் கொள்கையாகும். அருகமை பள்ளிக்கூடங்களை ஒழித்துக் கட்டுவது தான் இந்த கொள்கையில் மிக மோசமான அம்சம். இந்தியாவில் இவ்வளவு பள்ளிக்கூடங்கள் தேவை யில்லை அருகாமையில் உள்ள  பள்ளிக்கூடங்களுடன் இணைத்து விட வேண்டும் என்கிறது இந்த கொள்கை. எதிர்காலத்தில் கிராமப்புற பள்ளிக்கூடங்களுக்கு வாய்ப்பில்லாமல் செய்யவிருக்கிறது இந்த கொள்கை. இந்த கல்விக் கொள்கையை பிஜேபியினர் தேசிய கல்விக்கொள்கை என கூறுகிறார்கள். அவர்கள் மொழியில் தேசியம் என்றால் பாசிசம் என பொருள். ஒரே நாடு ஒரே தேர்வு. ஒரே நாடு ஒரே கல்வி, ஒரே நாடு ஒரே கட்சி. இதை நோக்கித் தான் அவர்கள் செல்கிறார்கள். 

மூன்று நாசகர கூறுகள்
தனியார் பள்ளிகளில் என்ன கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதை அவர்களே தீர்மானித்துக் கொள்ளலாம் என்கிறது இந்த கொள்கை. இவர்களின் கல்விக் கொள்கைக்கு ஆலோசனை வழங்கியது ஒன்று ஆர்எஸ்எஸ், மற்றொன்று இந்திய பெருமுதலாளிகளின் அமைப்பு. இந்தக் கல்விக் கொள்கையின் நாசகரமான மூன்று கூறுகளில் ஒன்று கல்விக் கொள்கையில் மத்திய அரசின் அதிகாரக் குவிப்பு. இரண்டு கல்வியை வணிகமயமாக்கல். மிக முக்கியமான மூன்றாவது கல்வியை மதவாதமயமாக்குவது. இதுதான் இவர்களது கல்விக் கொள்கையின் அடிப்படை.சமஸ்கிருதம் படிக்க வேண்டும். தமிழ் மெல்ல மெல்ல இனி பின்தங்கி விட வேண்டும். உனது குலத்தொழில் எதுவோ அதைக் கற்றுக் கொள் என்கிறது இந்த கல்விக் கொள்கை. இக்கொள்கையில் இடஒதுக்கீடு அறவே ஒழித்துக் கட்டப்படும். மோடி அரசின் இந்த நிதி நிலை அறிக்கையில் புதிதாக ஒரு சதவீதம் கூட கல்விக்கு ஒதுக்கப்படவில்லை. ஆனால் சமஸ்கிருதம், இந்திக்கும் ஏராளமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இக்கொள்கையில் அடிப்படையில் ஒரு வஞ்சகம் உள்ளது. இந்தியாவில் சிறுபான்மை நிறுவனங்கள் ஏராளமான கல்வி நிறுவனங்களை உரிய கட்டமைப்பு வசதியோடு நடத்தி வருகிறார்கள். ஆர்எஸ்எஸ்-காரர்கள் ஒரு ஜீப்பில் சென்று கட்டமைப்பு வசதியில்லை என்று கூறிவிட்டால் உடனே அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு விடும். இந்த கொள்கை அமல்படுத்தப்பட்டால் சிறுபான்மை மக்கள், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் கல்வி நிறுவனங்களிலிருந்து விரட்டப்படுவார்கள். காலத்தின் அறிவியல் வளர்ச்சிக்கேற்ப நவீன கல்விக்கு பதிலாக புராணங்கள் கற்பனைகள் புனைவுகளை கொண்ட பாடத் திட்டங்களை வரலாறு அறிவியல் என்ற பெயரில் எதிர்கால நமது குழந்தைகளின் பிஞ்சு உள்ளங்களில் சாதீய மத பார்வையை ஏற்றுவார்கள். இந்தக் கொள்கை திருத்தப்பட வேண்டியதா அல்லது திரும்பப் பெறப்பட வேண்டியதா என்று கேட்டால் இக்கொள்கை கிழித்து எறியப்பட வேண்டிய கொள்கையாகும்.

புதிய தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து மன்னார்குடியில் நடைபெற்ற ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் தீக்கதிர் ஆசிரியர் 
மதுக்கூர் இராமலிங்கம் ஆற்றிய உரையிலிருந்து...