பேராயர் தேவசகாயம் பேசுகையில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள சிஏஏ, என்.பி.ஆர். என்.ஆர்.சி. அனைவருக்கும் ஆபத்தானது. தற்போது 2ஆவது சுதந்திரப் போர் துவங்கியுள்ளது. விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்காதவர்கள் இதுவரை ஆட்சியில் இருந்ததில்லை. ஆனால் இந்தியாவை இன்று அவர்கள் ஆட்சி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. 2004ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் போது 50 லட்சம் பேர் மட்டுமே சட்டவிரோதமாக குடியேறியவர்கள் உள்ளனர் எனக் கூறப்பட்டது.
இவர்களை அடையாளம் காண்பதற்காக 130 கோடி மக்களையும் துருவி துருவி கேள்வி கேட்போம் என்று கூறுவது முட்டாள்தனமானது. அசாம் அனுபவத்திற்கு பிறகும் நாடு முழுவதும் இந்த சட்டத்தை விரிவுபடுத்துவது மோசமான செயலாகும். பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இஸ்லாமியர்களும், கிறித்துவர்களும் துன்புறுத்தப்படுகிறார்கள் என உலக நாடுகள் கூறுகின்றன. வீடற்றவர்களாக நாடோடிகளாக தெருக்களில் வாழ்பவர்களை இந்த அரசு என்ன செய்யப் போகிறது. இப்படி பல கேள்விகள் உள்ளன. இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடாகவே திகழ வேண்டும், அதற்கான போராட்டங்கள் தொடரட்டும் என்றார்.