சு.வெங்கடேசன் பிரதமர் மோடிக்கு கடிதம்
சொந்த மாநிலத்துக்குத் திரும்பும் புலம் பெயர் தொழிலா ளர்க்கு கட்டணமில்லா பயணத்தை 'பி.எம் கேர்ஸ்" நிதி வாயிலாக ஏற்பாடு செய்யக் கோரி மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். வேறு மாநிலங்களில் சிக்கி யுள்ள புலம் பெயர் தொழி லாளர்கள் சொந்த மண்ணிற்கு திரும்புவதற்காக விடப்படவுள்ள "சிராமிக் ஸ்பேஷல்" ரயில்களுக்கு கட்டணம் விதிக்கப்படுமென்ற ரயில் வாரியத்தின் முடிவை அறிந்து மிகவும் அதிர்ச்சி அடை ந்தேன்.
ரயில்வே வாரிய பயணிகள் சந்தை இயக்குனர் கடிதம் எண் TC II/ 2020/ Special trains/ Covid 19 dated 01.05.2020 ன் படி இப் பயணங்களுக்கான கட்டணம் "மெயில் விரைவு ரயில் படுக்கை கட்டணம்+ அதி விரைவு கட்டணம் ரூ 30+ கூடுதல் கட்டணம் ரூ 20" ஆகும். இந்த நிராதரவான தொழிலா ளர்கள் ஊரடங்கு காலத்தில் படுகிற இன்னலகள் தாங்கள் அறிந்ததே. இந்தியா இப்படியொரு நெடும் பயணத்தை- லட்சக் கணக்கான தொழிலாளர்கள் - இளைஞர்கள் தேசத்தின் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு- "தங்க நாற்கர நெடுஞ் சாலைகளில்" மேற்கோண்டதை இதுவரை பார்த்ததில்லை. ஒரு கையில் மூட்டை முடிச்சுமாய் இன்னொரு கையில் குழந்தைகளுமாய் நூற்றுக் கணக்கான கிலோ மீட்டர்களை அவர்கள் நடந்தே கடந்தனர். ஊடகங்கள் தருகிற தகவல்களின்படி சில மரணங்கள் கூட வழியிலே நிகழ்ந்தன. எங்கள் தமிழகம், எதிர்காலக் கனவுகள் மிக்க இளம் லோகேஷை இழந்தது. தேசம் முழுவதும் அதிர்ச்சியோடும், ஆழ்ந்த வருத்தத்தோடும் "பரிதவிக்கிற இந்தியாவின்" பாடுகளை பார்த்தது. "வல்லரசு" கனவுகள் கொண்ட ஓர் தேசத்தின் நிலையா இது என்று... இப்படிப் பட்டவர்களில் பல லட்சக் கணக்கானவர்கள் இன்னும் வெளி மாநிலங்களில் சிக்கித் தவிக்கிறார்கள்.
அவர்களின் கைகளில் பணம் இல்லை. அவர்களுக்கு சமூக பாதுகாப்பு ஏதும் பணித் தல ங்களில் இல்லை. ரேஷன் கார்டுகள் இல்லை. இவர்களுக்கான நிவாரண முகாம்களை மாநில அரசுகள் வைத்திருந்தாலும் அவர்களின் மனதில் எதிர்காலம் பற்றிய அச்சமே குடி கொண்டிருக்கிறது. ஆகவே சொந்த மண்ணுக்கு போய் விட வேண்டும் என்ற உணர்ச்சிக் குவியலாய் அவர்கள் மனது உள்ளது. தினம் தினம் இதன் அழுத்தம் அதிகரித்தும் வந்துள்ளது. ஆகவே "சிராமிக் ரயில்" அறிவிப்பு வந்தவுடன் அவர்கள் எல்லையில்லா மகிழ்வை அடைந்தனர். ஆனால் அந்த மகிழ்ச்சி அற்ப ஆயுளோடு முடிந்து போயிருக்கிறது. அரசே தங்களின் பயணத்தை கட்டணமில்லாமல் ஏற்பாடு செய்யுமென்று அவர்கள் எதிர்பார்த்திருந்தனர். 40 நாட்கள் வேலையில்லாமல் வீதிகளில் தூக்கியெறியப்பட்டிருந்ததால் அவ்வாறு நம்பியிருந்தனர். ஊரடங்கு அவர்களுக்கு திட்டமிடுவதற்கு கால அவகாசமே தரப்படாமல் அறிவிக்கப்பட்டதே இன்றைய நிலைமைக்கு காரணம். இவர்களெல்லாம் " தேச நிர்மாணப் பணிக்கு" பங்களித்துள்ளவர்கள். பெரிய பாலங்கள், நீண்ட சாலைகள், பள பளக்கிற உயர்ந்த கட்டிடங்கள் என... அவர்கள் இன்னும் சற்று கண்ணியமாக நடத்தப்பட வேண்டாமா?
இந்த அறிவிப்பு எந்த தர்க்க நியாயங்களுக்கும் உட்பட்ட தல்ல. இதில் சலுகை ஏதும் தரப்படவில்லை. ரயில்வே போக்கு வரத்து இல்லாமல் இருப்பு பாதைகள் காலியாய் கிடக்கும் போதும் அதி விரைவுக் கட்டணம் சுமத்தப்பட்டுள்ளது. கூடுதல் கட்டணம் ரூ 20 க்கு காரணங்கள் ஏதும் சொல்லப்படவில்லை. அரசாங்கம் இவ்வாறு அடித்தள தொழிலாளர்களை கருணையின்றியும், அரவணைப்பி ன்றியும் நடத்துவது நியாயமா? ரயில் 1200 பயணிகளுக்குரிய ஏற்பாட்டோடு 90% குறைந்த பட்ச எண்ணிக்கையோடு, நடு வரிசை படுக்கைகள் நிரப்பப்படாமல் ஓடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. என்றாலும் உரிய என்ணிக்கையில் ரயில்கள் விடப்படாவிட்டால் யதார்த்தம் வேறானது. இந்த சிறப்பு ரயில்களின் அனுபவம் இதை நாடுவோரின் எண்ணிக்கையை ஒப்பிடும் போது போதாமையாக உள்ளது. கர்நாடகா பேருந்துகள் இரட்டை கட்டணம் வசூலித்ததாக செய்திகள் வந்தன. இவ்வளவு காலம் கழிந்தும் அவர்களை இன்னும் காத்திருங்கள் என்று சொல்வதும், அவர்களை அங்கும் இங்கும் அலைக் கழிப்பதும் நியாயமா?
நான் கேரளாவின் ஆலவாய் முதல் ஒரிசா புவனேஸ்வர் அருகிலுள்ள குர்தா நகர் வரை விடப்பட்ட 1162 புலம் பெயர் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற முதல் ரயிலின் முன்னுதாரணமான அனுபவத்தை இங்கு குறிப்பிட விழைகிறேன். கேரள அரசு பயணிகளுக்குரிய மருத்துவ பரிசோதனை, சமூக விலகல் கடைப்பிடிப்பு, உணவு, குடிநீர் ஏற்பாடு, கிருமி நாசினி ஆகியவற்றோடு அனுப்பி வைத்ததும் ஒரிசா அவர்களை சொந்த ஊர்களுக்கு உரிய எண்ணிக்கையிலான பேருந்துகளை ஏற்பாடு செய்து மருத்துவப் பரிசோதனைக்கு பின்னர் அனுப்பி வைத்ததும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். புலம் பெயர் தொழிலாளர்கள் இந்த கௌரவமான வழியனுப்பலுக்கும், வரவேற்பிற்கும் தகுதி உடையவர்கள். எல்லா மாநிலங்களுக்கும் - அனுப்பி வைக்கும் மாநிலங்கள், வழியில் உள்ள மாநிலங்கள், சென்றடையும் மாநிலங்கள்- கேரளா, ஒரிசா அனுபவங்கள் அறிவுறுத்தல்களாக வழங்கப்பட வேண்டும்.
ஊர் திரும்ப விரும்பும் புலம் பெயர் தொழிலாளர் எண்ணிக்கை க்கு ஏற்ப உரிய சிறப்பு ரயில்கள் விடப்பட வேண்டும். மேலும் ரயில்வே வாரியத்தின் கட்டண முடிவை திரும்ப பெற வேண்டுகிறேன். உரிய சுகாதார ஏற்பாடுகளோடு கட்டணமில்லா ரயில் பயணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு நிராதரவாய் நிற்கிற புலம் பெயர் தொழிலாளர்கள், பயணங்களில் பாதியில் சிக்கி நிற்கும் வெளி மாநிலத்தவர் சொந்த ஊர்களுக்கு திரும்புவதை உறுதி செய்ய வேண்டும். ஏற்கெனவே பெரும் நிதிச் சுமையோடு மாநில அரசுகள் திணறுகின்றன். ஆகவே இப் பயணங்களுக்கான செலவை "பி.எம்.கேர்ஸ்" நிதியில் இருந்து வழங்க வேண்டும். சமூகத்தின் அடிமட்ட உழைப்பளிகளான இவர்கள் "பி.எம் கேர்ஸ்" க்கான தகுதி பட்டியலில் முதல் முன்னுரிமை பெற வேண்டு மென்பதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.