மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரும், காஷ்மீர் முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தி காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் தொகுதியில் போட்டியிடும் பொருட்டு வேட்புமனுதாக்கல் செய்த நாளன்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார்.
காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவில் உள்ள 35ஏ பிரிவை 2020 ஆண்டுக்குள் ரத்து செய்யப்படுமென பாஜக கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா அறிவித்துள்ளார். இச்சிறப்பு அந்தஸ்து சட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டால் இந்தியா உடனான காஷ்மீரின் உறவு துண்டிக்கப்படும் எனக் கூறிய அவர் ‘ காங்கிரஸ் கட்சியினர் வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கை கடந்த 2015ம் ஆண்டில் எனது தந்தை முப்தி முகமது சயீத் தயாரித்த தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் வார்த்தைக்கு வார்த்தை காப்பி அடித்துள்ளது’ என்றார். இச்செய்தியை வெளியிட்ட தினகரன் நாளிதழ் ‘காப்பியடிச்சிட்டாங்க! மெகபூபா லபோதிபோ’ என செய்தியாக்கியிருந்தது.
அது என்னவாம், லபோதிபோ?
ஜெயமோகனின் அபிப்ராய சிந்தாமணி என்கிற கட்டுரை நூலில் ‘அகிம்சை’ என்கிற தலைப்பிலான கட்டுரையில் இச்சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார்.
ரமண மகரிஷி , தன் கதையில் தூங்குபவனை எழுப்பினால் லபோதிபோ எனக் கத்துவான் என்கிறார்.
இச்சொல் குறித்துத் தேடுகையில், கலகல, சலசல போன்று லபோதிபோ இரட்டைக் கிழவியுடன் தொடர்புடைய ஒரு சொல்லாகத் தெரிகிறது.தமிழ்மொழி இலக்கணத்துடன் வடமொழியை வலிந்து திணிப்பவர்கள் உபயோகிக்கும் சொல் இது.
இதயம் துடிக்கும் ஓசை லப் டப்; ஆங்கிலத்தில் lub-dub, வடமொழியில் லப்திப். இதயம் பரிதவிக்கத் துடிப்பதை தமிழில் திக் திக் எனச் சொல்வதை, வடமொழியில் லபோ திபோ.
ரயில் சிநேகிதம் என்கிற சிறுகதையில், ராஜேஷ் சந்திரா , ரயில் எஞ்சின் லபோதிபோ எனக் கூவிச் சென்றது என்கிறார்.
கிறித்தவ பெந்தேகோஸ்தே சபை, அந்நியபாஷை குழப்பம் (CONFUSION ABOUT TONGUES) பற்றிப் பேசுகிறது.
இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்து பரமேறின பிறகு சீடர்கள் சபைகளை ஸ்தாபித்தனர். அவர்கள் சபைகளை ஸ்தாபித்து 1901-ம் ஆண்டுவரை அந்நியபாஷை பிரச்சனையே இல்லாமல் இருந்தது. ஆனால் அதன்பின் இடைசெருகலாக அந்நியபாஷை சபைக்குள் நுழைய, சபையின் முதன்மையான முக்கியத்துவம் குறைந்துபோய் அந்நியபாஷைக்கு முதலிடம் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர். சும்மா லபோதிபோ என்று
அந்நியபாஷை பேசி சாட்சிக்கும், கனிகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதிலிருந்து விலகுவதை நிறுத்தி சபையின் நோக்கத்தைக் காக்க வேண்டும் என்கிறது பெந்தேகோஸ்தே குறித்த ஒரு கட்டுரை.
காஞ்சிரகுராம் எழுதிய ‘ முரளிதரனின் காயின் பால் ‘ என்கிற கட்டுரையில் மூன்று இரட்டைக் கிழவிகளைப் பயன்படுத்துகிறார். ‘பிகுபிகு’வெனக் கோவப்பட்டான். ‘பகபக’வெனச் சிரித்தான். இதயம் ‘லபோதிபோ’ வெனத் துடித்தது.
‘கேக்கே பிக்கே ‘எனச் சிரித்தான்; ‘கொய்யோ மொய்யோ’ என அழுதான்; இந்த வரிசையில் ‘லபோதிபோ’ .
பிரபஞ்சன் எழுதிய ‘ மேன்சன்’ என்கிற கட்டுரையில் லபோதிபோ என்பதை அர்த்தமற்ற கூச்சல் என்கிறார்.
அருணகிரிநாதர் அருளிய கந்தரநுபூதி என்கிற பாடலில் இப்படியாக ஒரு பாடல்
கூகா என என் கிளை கூடி அழப் / போகா வகை, மெய்ப்பொருள் பேசியவா/நாகாசல வேலவ நாலு கவித் /தியாகா சுரலோக சிகாமணியே.
இப்பாடலின்படி, நாகாசல -திருச்செங்கோட்டு மலையில் எழுந்தருளியவரே, வேலவ - வேலாயுதக் கடவுளே, த்யாகா -நாலு விதக் கவிகளைப் பாடும் திறமையைத் தந்தவரே, சுரலோக சிகாணியே - தேவலோகத்திற்கு சிகாமணியாக
விளங்குபவரே, என் கிளை கூடி - என் சுற்றத்தார் ஒன்று கூடி, கூகா என அழ - கூகா என ஓலமிட்டு அழும்படிக்கு, போகா வகை - இறந்து போகாத வண்ணம், மெய்ப் பொருள் பேசியவா -உண்மையான பொருளைப் பேசுக, என்பது பாடலின் பொருள்.
இப்பாடலுக்கு விளக்கவுரை எழுதிய மயிலை மன்னார், கூகா என்பது ஒருவர் இறந்துபோகையில் உறவினர்கள் கூடியும் ஒருவரையொருவர் ஆரத் தழுவி அழுதல் என்கிறார். அதாவது, சொந்தக்காரர்கள் ‘காச்சுமூச்சு’ என்றும் ‘லபோதிபோ’ என்றும் அலறுவது.
கூகா - கூகை + காக்கை. கூ - ஆந்தையின் அலறல். கூ என மனிதனைப் போல அலறுவதால் கூகை என்றானது ( அபிதான சிந்தாமணி ). கா - காக்கை , காக்கையின் கரைதல். கூ,கா இரண்டும் ஒரு சேர நிகழ்வது கூகா. அதாவது, மனிதன் பரிதவிக்க கூச்சலிடுவது.
இனி, லபோதிபோ என்கிற வடசொல்லுக்குப் பதிலாக கூகா எனப் பயன்படுத்தலாமே.