தமிழ்நாடு கைவினைப் பொருட்கள் மேம்பாட்டு நிறுவனமான பூம்புகார் தமிழக கைவினைஞர்கள் வளர்ச்சிக்காக துவக்கப்பட்டது. திருப்பதி, பழநி உள்ளிட்ட பலகோவில்களின் தங்கத்தேர்கள் இந்நிறுவனத்தால் செய்யப்பட்டுள்ளன. 2017-ல் ரூ.41 கோடி வர்த்தகம் செய்துள்ளது. இதன் மூலம் ஒரு கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. கடந்த 13 ஆண்டுகளாக தொடர்ந்து லாபத்தில் இயங்கி வருகிறது. வெளிநாட்டுச் சந்தை வாய்ப்பு அதிகரித்துள்ளது. கைவினைஞர்களை உலகிற்கு அறிமுகப்படுத்தும் வகையில் தனி வலைதளம் அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை 8 கைத்திறன் தொழில் சார்ந்த பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது.
அண்மையில் மாமல்லபுரத்தில் ஐந்து கோடி மதிப்பில் “நகர்ப்புற குடில்” துவக்கி வைக்கப்பட்டது. தமிழகத்தில் மதுரை, நாச்சியார்கோவில் உற்பத்தி மையங்களாக உள்ளன. இவ்விடத்தில் 100-க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் நீண்டகாலமாக துண்டுக்கூலி அடிப்படையில் பணிநிரந்தரம் இல்லாமல் பணியாற்றி வந்தனர். மதுரையில் தொழிற்சாலை ஆய்வாளர் முன் பணிநிரந்தரம் கோரி வழக்கு தொடர்ந்து 24 தொழிலாளர்கள் பணி நிரந்தர உத்தரவு பெற்றனர்.
நீதிமன்றத் தீர்ப்பு மீறல்
நிர்வாகம் இவ்வுத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. பல்வேறு கட்ட விசாரணைக்கு பின் தொழிற்சாலை ஆய்வாளர் உத்தரவை நடைமுறைப்படுத்தவேண்டுமென நீதிமன்றம் தீர்ப்புக்கூறியது. இதனையும் எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் நிர்வாகம் மேல்முறையீடு செய்தது. பல்வேறு கட்ட விசாரணைக்குப்பின் நிர்வாகம் தாக்கல் செய்த மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது. பலமுறை நிர்வாகத்திடம் முறையிட்டும் 9 ஊழியர்களுக்கு மட்டும் பணிநிரந்தர உத்தரவு வழங்கப்பட்டது. அதற்குரிய காலமுறை ஊதியம் வழங்கப்படவில்லை. மற்ற ஊழியர்கள் பணி ஓய்வு பெற்றுவிட்டனர்.
இந்நிலையில் மதுரை தொழிலாளர் நீதிமன்றத்தில் நிரந்தர ஊழியருக்கான ஊதியம் கோரி வழக்குத்தொடரப்பட்டது. வழக்கு பல்வேறு கட்ட விசாரணைக்குப்பின் 01.04.1996 முதல் 31.12.1997 வரையிலான காலத்திற்கு 13 தொழிலாளர்களுக்கு ரூ.4,16,805 மட்டும் தீர்ப்பு வெளியிட்ட நாளிலிருந்து 2 வார காலத்திற்குள் வழங்கவேண்டுமென தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்பை நடைமுறைப்படுத்த பலமுறை நிர்வாகத்திடம் தொடர்புகொண்டும் எவ்வித பதிலும் இல்லை. எனவே மதுரை ஜெனரல் ஒர்க்கர்ஸ் யூனியன் சட்டப்பூர்வ பணியை தொடங்கியுள்ளது.
முன்னுதாரணமாக இருக்க வேண்டியவர்
சமீபத்தில் தமிழகத்திற்கு வருகை தந்த சீன ஜனாதிபதிக்கு இந்திய பிரதமரால் நாச்சியார் கோவில் அஷ்டோத்திர அன்னம் விளக்கு வழங்கப்பட்டது. இந்த விளக்கு 3 அடி உயரம் 15கிலோ எடைகொண்டது. 108 சகலி மூக்கு அமைப்புடன் 4 கிளைகள் 5 கரணை அடியில் ஒரு தட்டுடன் கூடியதாக வடிவமைக்கப்பட்ட இந்தவிளக்கின் மேல் அன்னப்பறவை பொருத்தப்பட்டிருந்தது. இவ்விளக்கு 12 நாட்களில் வடிவமைக்கப்பட்டதாகும்.
இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக தகவல் தொழில் நுட்பச் செயலாளர் கூடுதல் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே நிர்வாக இயக்குநராக, தலைவராக பணியாற்றியவர். இவர்தான் ஆழ்துளை கிணற்றில் தவறி விழும் குழந்தைகளை காப்பாற்ற புதிய தொழில் நுட்பம் கண்டுபிடித்தால் ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளவர். ஆனால் தன்னுடைய தொழிலாளர்களுக்கு அரசியல் சாசனப்படி நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்துவதில் முன்மாதிரியாக இருக்கவேண்டியவர் தொழிலாளிகளுக்கு எதிராக உள்ளார். இதுதொடர்பாக தமிழக முதல்வர் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. நாச்சியார் கோவில் விளக்கின் பெருமை சீன தேசத்தில் பேசப்படும் என்பதில் நாட்டுக்குப் பெருமை. ஆனால் தொழிலாளர்களின் உழைப்புச் சுரண்டல் தேசத்திற்கு பெருமை அல்ல. நாட்டின் பெருமையைப் பறைசாற்றுகின்ற உழைப்பாளிகளுக்கு அம்மா ஆட்சியில் நீதி கிடைக்குமா?
ஜி.எஸ்.அமர்நாத்,பொதுச்செயலாளர், மதுரை ஜெனரல் ஒர்க்கர்ஸ் யூனியன்